Spotlightசினிமா

“இந்திய சினிமாவில் யாரும் எழுப்பாத கேள்வி!” – கருணாஸ் நடித்த ‘என்ன விலை’ செப்டம்பர் 17 ரிலீஸ்

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குநர் சஜீவ் பழூர் எழுதி இயக்கியுள்ள ‘என்ன விலை’ திரைப்படம் செப்டம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. கருணாஸ், நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.

கலாமயா சினிவெர்ஸ் நிறுவனம் சார்பில் ஜித்தேஷ் விஸ்வம்பரன் மற்றும் அனுகோபால் வேணுகோபாலன் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். ராமேஸ்வரத்தை கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், சாமானிய மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி முக்கியமான கேள்வி ஒன்றை முன்வைக்கும் படைப்பாக உருவாகியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

“ராமேஸ்வரம் மக்களும் கடுமையாக உழைத்துள்ளனர்”

விழாவில் பேசிய தயாரிப்பாளர் ஜித்தேஷ் விஸ்வம்பரன், “பல சிறிய விஷயங்களுக்கு இந்தப் படம் முன்னுதாரணமாக இருக்கும். படக்குழுவினரோடு ராமேஸ்வரம் மக்களும் இந்தப் படத்திற்காக கடுமையாக உழைத்துள்ளனர். அந்த உழைப்புக்கான பலனை ரசிகர்கள் தருவார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

நடிகர் கான்ஸ்டபிள் சுந்தரம் பேசுகையில், ஜூனியர் ஆர்ட்டிஸ்டாக இருந்த தனக்கு இப்படத்தில் வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி தெரிவித்தார். மேலும், கருணாஸ் பெரிய நடிகர் என்ற எந்த அலட்டலும் இல்லாமல் அனைவரிடமும் இயல்பாக பழகியதாகவும் கூறினார்.

நடிகர் பிரதீப், ‘என்ன விலை’ அருமையான படமாக உருவாகியுள்ளதாக கூறி, படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என வாழ்த்து தெரிவித்தார்.

விருது விழாக்களில் கவனம் ஈர்த்த ‘என்ன விலை’

படத்தில் எழுத்தாளர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக கூறிய நடிகர் தர்ஷன், பல்வேறு விருது விழாக்களுக்கு அனுப்பப்பட்ட இப்படம் விருதுகளை வென்றுள்ளதாக தெரிவித்தார். ரசிகர்கள் அனைவரும் திரையரங்குகளில் வந்து படத்தைப் பார்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நடிகை நிரோஷா, தனது நடிப்பு செயற்கையாகத் தெரியாமல் இயல்பாக இருக்க வேண்டும் என இயக்குநர் சஜீவ் பழூர் வழிகாட்டியதாக தெரிவித்தார்.

நடிகர் கவி பேசுகையில், பல நாடுகளில் நடைபெற்ற விருது விழாக்களில் ‘என்ன விலை’ திரையிடப்பட்டு விருதுகளை வென்றதாகவும், தற்போது சொந்த நாட்டு மக்களுடன் படத்தைப் பார்க்க ஆவலுடன் இருப்பதாகவும் கூறினார்.

“பசங்க, கோலி சோடாவை தாண்டி பெயர் கிடைக்கும்”

நடிகர் பாண்டி பேசுகையில், “இந்தப் படத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருந்தோம். ‘பசங்க’, ‘கோலி சோடா’ படங்களைத் தாண்டி எனக்கு பெயர் கிடைக்க வேண்டும் என ஒவ்வொரு படத்திலும் எதிர்பார்த்தேன். அது இந்தப் படத்தில் நடக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

படத்தில் ஹீரோவின் தங்கை மணிமேகலை என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சாஷா, கிராமத்துக் கதையில் நடிக்க வேண்டும் என்ற தனது கனவு ‘என்ன விலை’ மூலம் நிறைவேறியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், ராமேஸ்வரத்தில் படமாக்கப்பட்ட இப்படத்திற்காக படக்குழுவினர் கடுமையாக உழைத்ததாகவும், 13 விருது விழாக்களில் படம் விருதுகளை வென்றிருப்பதாகவும் அவர் கூறினார்.

“தமிழ் மிகவும் பிடிக்கும்” – இயக்குநர் சஜீவ் பழூர்

இயக்குநர் சஜீவ் பழூர் பேசுகையில், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூது கவ்வும்’, ‘பண்ணையாரும் பத்மினியும்’ போன்ற திரைப்படங்கள் சிறிய கருவில் இருந்து உருவான கதைகள் என்பதை குறிப்பிட்டார்.

தமிழ் மொழி தனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் ‘என்ன விலை’ திரைப்படத்தை தமிழில் இயக்கியதாகவும், ரசிகர்கள் படத்தைப் பார்த்துவிட்டு தங்களது கருத்தை தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

“என் 20 ஆண்டு கால ஆசையை நிறைவேற்றிய படம்”

விழாவில் நடிகர் கருணாஸ் பேசியது கவனம் ஈர்த்தது. 2001 ஆம் ஆண்டு ராமேஸ்வரத்தில் இயக்குநர் பாலாவின் படத்தில் லொடுக்கு பாண்டி கதாபாத்திரத்தின் மூலம் தனது திரைப்பயணம் தொடங்கியதை நினைவுகூர்ந்த அவர், மலையாள திரைப்படங்களை அதிகம் விரும்பிப் பார்ப்பதாக தெரிவித்தார்.

மலையாள எழுத்தாளர்கள், இயக்குநர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து ஒரு படத்திலாவது பணியாற்ற வேண்டும் என்பது தனது நீண்ட நாள் ஆசை என்றும், அது ‘என்ன விலை’ திரைப்படத்தின் மூலம் நிறைவேறியுள்ளதாகவும் கருணாஸ் தெரிவித்தார்.

“இந்தப் படம் சாமானியர்களைப் பற்றியது. அதனால் இயல்பான நடிகர்களை இயக்குநர் தேர்வு செய்துள்ளார். எனக்கு இன்று பெரிதாக வியாபாரம் இல்லை. இருந்தாலும் என்னை நம்பி தயாரிப்பாளர்கள் ரூ.7 கோடி முதலீடு செய்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவர்களுக்கு இந்தக் கதை மீது நம்பிக்கை இருக்கிறது” என்றார்.

மேலும், இந்திய சினிமாவில் இதுவரை யாரும் எழுப்பாத ஒரு கேள்வியை இயக்குநர் சஜீவ் பழூர் இந்தப் படத்தில் முன்வைத்திருப்பதாக கருணாஸ் தெரிவித்தார்.

நிமிஷா சஜயனுக்கு கருணாஸ் பாராட்டு

‘என்ன விலை’ திரைப்படத்தில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நிமிஷா சஜயன் சிறப்பாக நடித்திருப்பதாக கருணாஸ் பாராட்டு தெரிவித்தார். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பொருத்தமான நடிகர்களை இயக்குநர் தேர்வு செய்திருப்பதாகவும் கூறினார்.

படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே முன்னணி ஓடிடி தளம் படத்தை வாங்கியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ‘நந்தா’ திரைப்படத்திற்குப் பிறகு தனது மனதிற்கு மிகவும் நெருக்கமான படமாக ‘என்ன விலை’ அமைந்துள்ளதாக கருணாஸ் கூறினார்.

தனது நீண்ட திரைப்பயணத்தில் தனது நடிப்பைப் பார்த்து மனைவி முதன்முறையாக இந்தப் படத்திற்காக பாராட்டியதாகவும், தனது நடிப்பைப் பார்த்த நிமிஷா சஜயன் நெகிழ்ச்சியுடன் பாராட்டியதாகவும் அவர் தெரிவித்தார்.

“இந்தப் படமும், இதில் நான் நடித்துள்ள கதாபாத்திரமும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என கருணாஸ் கூறினார்.

பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கவனம் ஈர்த்துள்ள ‘என்ன விலை’ திரைப்படம் செப்டம்பர் 17 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button