
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவரான அசோக் செல்வன் நடிப்பில் உருவாகியுள்ள காதல் திரைப்படம் ‘அன்பில் அவன்’. இப்படம் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான புதிய போஸ்டரையும் படக்குழு வெளியிட்டுள்ளது.
ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ள ‘அன்பில் அவன்’, காதலை மையமாகக் கொண்டு அழகான உணர்வுகளையும் பொழுதுபோக்கு அம்சங்களையும் இணைத்து உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. குறிப்பாக, வெற்றி பெற்ற ‘போர் தொழில்’ திரைப்படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா இப்படத்தின் கதையை எழுதியிருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
அசோக் செல்வனுடன் ப்ரீத்தி முகுந்தன்
‘அன்பில் அவன்’ படத்தில் அசோக் செல்வனுடன் ப்ரீத்தி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் சபு மோன், அப்துல் சமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் ஒளிப்பதிவை கௌதம் ராஜேந்திரன் மேற்கொண்டுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ள நிலையில், ஆர்.கே. செல்வா படத்தொகுப்பையும், மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர்.
‘ஆசை வரமே’ பாடலுக்கு கிடைத்த வரவேற்பு
ஐங்கரன் இன்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்கள் சார்பில் கே. கருணா மூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து ‘அன்பில் அவன்’ திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
சமீபத்தில் படத்திலிருந்து வெளியான ‘ஆசை வரமே’ பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் பாடலைத் தொடர்ந்து தற்போது படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளதால் ‘அன்பில் அவன்’ மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. அசோக் செல்வனின் இந்த புதிய காதல் திரைப்படம் ரசிகர்களை எந்த அளவுக்கு கவர்கிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.




