இங்கிலாந்து, இந்தியா அணிக்கு இடையிலான 3-வது டி20 போட்டி, பிரிஸ்ச்டோலில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது. முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில், 8 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்களுக்கு எடுத்தது. அதிகபட்சமாக இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராய், 31 பந்துகளுக்கு 67 ரன்கள் எடுத்தார்
இந்தியா சார்பில் ஹர்திக் பாண்டியா அதிகபட்சமாக 4 ஓவர்களை வீசி 4 விக்கெட்களை எடுத்தார்.
199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மாவும், ஷிகர் தவானும் தொடக்கத்திலிருந்தே அடித்து ஆடினர். ஷிகர் தவான் 5 ரன்களில் வெளியேற, அதன் பிறகு களமிறங்கிய கே.எல். ராஹுல், 10 பந்துகளை எதிர்கொண்டு 19 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின்பு ரோஹித் ஷர்மாவுடன் ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலி, நிதானமாக ஆடினார். மறுமுனையில் ரோஹித் ஷர்மா நாலாபுறங்களிலும் இங்கிலாந்தின் பந்து வீச்சை சிதறடித்தார்.
பின்பு 43 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விராட் கோலி கிரிஸ் ஜார்டன் வீசிய பந்தில் ஆட்டமிழக்க, ஹர்திக் பாண்டியா களமிறங்கினார். ரோஹித் ஷர்மா, ஹர்திக் ஜோடி நிதானமாக ஆடி இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்றனர்
ரோஹித் ஷர்மா 56 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து சதம் விளாசினார். இது அவரது 3-வது டி20 சதமாகும். இதன் மூலம் டி20 போட்டிகளில் 3 சதம் அடித்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.
மேலும், 5 கேட்சுகளை பிடித்து மஹேந்திர சிங் தோனி உலக சாதனை படைத்துள்ளார். இது டி20 போட்டியில் ஒரு விக்கட் கீப்பர் பிடித்த அதிக கேட்சுகளாகும்.
அதிரடியாக ரன்களை சேர்க்கத் தொடங்கிய இங்கிலாந்து அணியை கட்டுப்படுத்தியதில் ஹர்திக்கின் பங்கு பெரிதாகும். பேட்டிங்கிலும் 14 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து இறுதி பந்தில் தோனி ஸ்டைலில் சிக்ஸர் அடித்து வெற்றிக்கு வழி வகுத்தார்.
56 பந்துகளில் 100 ரன்கள் அடித்த ரோஹித் ஷர்மாவுக்கு சிறந்த ஆட்டக்காரருக்கான விருது வழங்கப்பட்டது.