
நடிகர்கள்: விஜய் கெளரிஷ், ஸ்மேகா, ஆதர்ஷ், மஞ்சுநாதன், மணிமேகலை, சுதா
எழுத்து & இயக்கம்: எஸ் எஸ் முருகராசு
ஒளிப்பதிவு: சதீஷ் குமார் துரைக்கண்ணு
இசை: Kevin d’cost
தயாரிப்பு: VIJAY GOWRISH PRODUCTIONS ,NIYANTH MEDIA AND TECHNOLOGY and MALARR MAARII MOVIES
கதைப்படி,
கரூர் அருகே ஒரு அழகிய கிராமம் தான் படத்தின் கதைக்களம். ஊரில் வெட்டியாக நீட்டாக பேண்ட் அணிந்து பேருந்தில் வரும் பெண்களை சைட் அடிப்பது, ஊரில் வரும் பெண்களையும் சைட் அடிப்பது, அவர்கள் பின்னால் சுற்றுவது, பின் நேரம் சென்ற பிறகு ஊர் நடுவில் இருக்கும் சாவடியில் தாயம் விளையாடுவது மாலை வந்தால் நண்பர்களுடன் சரக்கு அடிப்பது என இப்படியாக சென்று கொண்டிருக்கிறது நாயகன் விஜய் கெளரிஷின் வாழ்க்கை.
இந்நிலையில், இவரின் வீட்டின் எதிர் வீட்டில் புதிதாக குடி வருகிறது ஒரு குடும்பம். அங்கு, நாயகி ஸ்மேகா இருக்கிறார். அவரை பார்த்ததும் வழக்கம் போல் தனது காதல் வலையை வீசுகிறார் விஜய் கெளரிஷ்.
வேண்டா வெறுப்பாக விஜய் கெளரிஷின் காதலை ஏற்றுக் கொள்கிறார் ஸ்மேகா. ஊரில் வெட்டியாக இருப்பதை விட எங்காவது வேலைக்குச் செல்லுமாறு விஜய் கெளரிஷை அறிவுறுத்துகிறார் ஸ்மேகா.
இதனை கேட்டுக் கொண்ட விஜய் கெளரிஷ், பக்கத்து ஊருக்கு தனது நண்பன் ஆதர்ஷுடன் வேலைக்குச் செல்கிறார். நன்றாக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இருவரும்.
இந்நிலையில், ஆதர்ஷ் தனது நண்பர்களிடம் ஒருநாள், தான் ஊரில் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும், அந்த பெண்ணும் தன்னை காதலிப்பதாகவும் கூற, அந்த பெண் யார் என்று கேட்கிறார் விஜய் கெளரிஷ்.

இறுதியில், தன்னை காதலிக்கும் பெண்ணான ஸ்மேகா தான் நண்பன் ஆதர்ஷையும் காதலிப்பதாக தெரிந்து கொள்கிறார் விஜய் கெளரிஷ்.
இதனால், இருவரும் வேலையை விட்டு மீண்டும் ஊருக்கு வருகின்றனர்.
இறுதியில், இவர்கள் இருவரையும் தான் காதலிப்பதாக நாயகி ஸ்மேகா ஏன் ”கடுக்கா” கொடுக்க வேண்டும்.?? இவர்களின் வாழ்க்கையில் இறுதியில் என்ன தான் நடந்தது.?? என்பதை மிகவும் காமெடி கலந்து மெசேஜோடு கூறியிருக்கும் படம் தான் இந்த கடுக்கா…
படத்தின் ஆரம்ப காட்சியிலேயே கதைக்கேற்ற நாயகனாக ஜொலிக்க ஆரம்பித்துவிட்டார் விஜய் கெளரிஷ். மிகவும் யதார்த்தமான கிராம இளைஞர்களின் வாழ்க்கையை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்திவிட்டார். கிராமங்களில் அன்றாடம் நடக்கும் இயல்பான நடவடிக்கைகள், வேலைக்குச் செல்லாமல் ஊருக்குள்ளேயே சுற்றிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் செயல்பாடுகள் என்னவாக இருக்கும் என்பதையெல்லாம் காட்சிகளுக்குக் கொண்டு வந்து நம்மையும் கிராமத்திற்குள்ளேயே அழைத்துச் சென்று விட்டார்.
இரண்டாவது நாயகனாக படத்திற்குள் எண்ட்ரீ ஆகி, படத்தின் பாதி கதையை நகர்த்திச் சென்று விட்டார் ஆதர்ஷ். அழுக்கு லுங்கியோடும், துண்டு பீடியோடும் இவரின் கதாபாத்திரம் படத்திற்கு மிகப்பெரும் பலம் தான்.
நாயகி ஸ்மேகா, ஆரம்பத்தில் கதாபாத்திரத்தில் பொருத்தமாக தெரியவில்லை என்றாலும், கதை நகர நகர அக்கதாபாத்திரத்தை நன்றாகவே உள்வாங்கி தனது கதாபாத்திரத்தை மிகவும் இயல்பாக செய்து முடித்திருக்கிறார் ஸ்மேகா.
மேலும், படத்தில் நடித்த மஞ்சுநாதன், ஹீரோவின் நண்பன், ஹீரோயின் அம்மா சுதா, வட சென்னை மணிமேகலை உள்ளிட்ட கதாபாத்திரங்களும் படத்திற்கு மிகப்பெரும் பலம் தான்.
அதிலும் மணிமேகலை மற்றும் சுதா இருவரின் சண்டைக் காட்சி அல்டிமேட் தான்…

சாவடியில் அரட்டை, நண்பர்களுடன் பாறையில் அமர்ந்து மது அருந்துவது, பெரியவரின் காதல் கதை, பெண்ணுக்காக மோதிக் கொள்வது என நம்மை அக்கிராமத்திற்குள்ளே பயணமாக வைத்துவிட்டார் இயக்குனர்.
காமெடிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுக்காமல், க்ளைமாக்ஸில் பெண்களுக்கான சுதந்திரத்தில் காதல் என்ற பெயரில் ஆண்கள் கொடுக்கும் இன்னல்களை தெளிவாக எடுத்துக் கூறியும் சென்றுள்ளார்.
ஒரு சிறிய கேப் கிடைத்தாலும் கூட, காமெடியை சிதறவிட்டுச் சென்றிருக்கிறார் இயக்குனர் முருகராசு. மிகவும் நேர்த்தியான ஒரு கதையை படமாக்கிய குழுவினருக்கு ஆகப்பெரும் வாழ்த்துகள்.
எந்த இடத்தில் இசை வேண்டுமோ, அந்த இடத்தில் மட்டும் பின்னணி இசையை பயன்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர்.
கிராமப்புற அழகினை மிகவும் அழகாக காட்சிப்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். அதிலும், ஓடும் வாய்க்காலை ட்ரோன் மூலம் காட்சிப்படுத்திய விதம் அழகு தான்.
சூதுகவ்வும், பன்றிக்கு நன்றி சொல்லி, மரகத நாணயம் உள்ளிட்ட காமெடி படங்களின் வரிசையில் கடுக்கா படத்தையும் இணைக்கலாம்.. அதற்கான முழுத் தகுதியும் இப்படத்திலும் இருக்கிறது.
“கடுக்கா” திரைப்படத்தை குடும்பத்தோடு கண்டுகளிக்கலாம்…





