
சிங்கப்பூரில் ‘கவசம்’ என்னும் நாடகத்தை மேடையேற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளது ‘அதிபதி’ நாடகக்குழு. கடந்த சனிக்கிழமை சுமார் 600 பக்க வசனங்களோடு 60 நாடகக் கலைஞர்களோடு தொடர்ந்து 28 மணி நேரம் நாடகம் நடைபெற்றது.
இந்த நாடகத்தை திரு. புகழேந்தி ராமகிருஷ்ணன் என்பவர் இயக்கினார். கின்னஸ் புத்தகத்தில் நீண்ட நேரம் அரங்கேறும் முதல் தமிழ் நாடகம் என்றும் ‘சிங்கப்பூர் புக் ஆப் ரெக்கார்ட்ஸில்’ சிங்கப்பூரில் நீண்ட நேரம் அரங்கேறும் முதல் நாடகம் என்றும் சாதனை படைத்தது இந்த ’கவசம்.
பல சிங்கப்பூர் வாழ் தமிழர்களின், தமிழர்களின் பெருமைகளையும் வாழ்வியலையும் முன்னிலைப்படுத்தி தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர் நாடக கலைஞர்கள்.
அதிலும், தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆழ்வார் கற்குளம் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன்(29) என்பவரது நடிப்புத்திறமையை கண்டு அனைவரும் வியந்து பாராட்டினர். இந்த சாதனை படைக்க அவரது பங்கும் பெருமளவில் இதில் அமைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.




