
பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மீனாட்சி, ரித்திகா சிங், சித்தார்த்தா சங்கர், அர்ஜுன் சிதம்பரம் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் கொலை.. படத்தின் ட்ரெய்லர் பெரிதாக கூர்நோக்கப்பட்டதால் படத்தின் மீது சற்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது.. இந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்ததா இல்லையா என்பதை விமர்சனம் மூலம் பார்த்துவிடலாம்.
மர்மமான முறையில், அழகான பாடகி மீனாட்சி வீட்டில் பிணமாக கிடக்கிறார். அவரை யாரோ ஒருவர் கொலை செய்திருக்கிறார். இந்த வழக்கை விசாரிக்க பாரன்சிக் டீம் வருகிறது. அதில், பயிற்சி ஐபிஎஸ் ரித்திகா சிங் இந்த வழக்கை விசாரிக்க ஆரம்பிக்கிறார்.
விபத்தில் சிக்கி கோமாவில் இருக்கும் தன் மகளை பார்த்துக் கொள்வதற்காக போலீஸ் வேலையை உதறிவிட்டு மகளை பார்த்து வருகிறார் விஜய் ஆண்டனி. தனது பாரன்சிக் வேலையில் தனித்திறமையைக் கொண்டு பல வழக்குகளை முடித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.
ரித்திகாசிங்கின் பயிற்சியாளரும் விஜய் ஆண்டனி தான்.
மீனாட்சியின் வழக்கினை விசாரிக்க ரித்திகா சிங்கிற்கு உதவி செய்கிறார் விஜய் ஆண்டனி.
கொலை நடந்த சமயத்தில் பலரும் மீனாட்சியின் வீட்டிற்கு வந்து சென்றிருந்திருக்கின்றனர். அதில், யார் மீனாட்சியைக் கொன்றது.? எதற்காக கொன்றார்.?? என்பதை விஜய் ஆண்டனின் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
கதை, திரைக்கதை இரண்டையும் தாண்டி, படத்தினை நமக்கு காண்பித்த விதம் கோலிவுட்டில் சற்று தனிரகம் தான்.
இதற்கு முன் இதுமாதிரியான மேக்கிங்க் ஸ்டைலை ஹாலிவுட்டில் பார்த்திருந்திருக்கலாம். ஆனால், கோலிவுட்டில் இதுவே முதல் முறை என்று கூறலாம். ஒவ்வொரு காட்சிக்கும் அவ்வளவு மெனக்கெடல். ப்ளாஷ் பேக் காட்சிக்குள் ஒரு ப்ளாஷ் பேக் காட்சி என்று அடுத்தடுத்து காட்சிகள் நகர்ந்து கொண்டே சென்றது.
ஒருதுளி கூட, படம் பார்ப்பவர்களின் கண்களை நகர விடாமல் திரையில் கட்டிப் போட்டுவிட்டது ஒளிப்பதிவு. நேர்த்தியான பின்னணி இசையும் பிரகாசமான ஒளிப்பதிவும் படத்திற்கு மிகப்பெரும் பலம் தான். கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கதை மற்றும் திரைக்கதையில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம்.. மீனாட்சியை கொன்றது யார் என்ற குற்றவாளியை தேடுதல் படலம் தான் கதை என்றாலும், அதை சற்று சுவாரஸ்யமான பயணத்தோடு திரைக்கதையை நகர்த்தியிருந்திருக்கலாம்.
பொறுமையை ஆங்காங்கே சோதிக்கும் அளவிற்கும் திரைக்கதை மெதுவாக நகர்வது நம்மை கொஞ்சம் சலிப்படைய வைத்துவிட்டது.
விஜய் ஆண்டனி எதற்காக இந்த அளவிற்கு ஸ்லோவாக இருக்கிறார் என்பதற்கு காரணம் இருந்தாலும், குற்றவாளியை தேடும் படலத்திலாவது சற்று வேகம் காட்டியிருந்திருக்கலாம்.
தேவதையாக வந்து அழகிலும் நடிப்பிலும் காட்சிக்கு காட்சி கண்களுக்கு விருந்து படைத்து சென்றுவிட்டார் மீனாட்சி. ரித்திகாவின் நடிப்பு நடிப்பாகவே தென்பட்டது சற்று பலவீனம்.
சித்தார்த்தா சங்கரின் நடிப்பு பார்க்கும்படியாகவும் கவனிக்கும்படியாகவும் இருந்தது. ஒரு சில காட்சிகளாக இருந்தாலும் தோன்றும் காட்சிகளில் அதிரடி காட்டியிருக்கிறார் அர்ஜூன் சிதம்பரம்.
மொத்தத்தில்,
ஹாலிவுட் தரத்திற்கான மேக்கிங் கொடுத்து தமிழ் சினிமாவில் தனிரகமாக முத்திரை பதித்திருக்கிறது இந்த ”கொலை”
கொலை – முயற்சி …