Spotlightவிமர்சனங்கள்

கூர்மன் – விமர்சனம் 2.75/5

ழகான தமிழ் பெயரில் வைத்ததற்காகவே இயக்குனர் பிரையன் பி ஜார்ஜ் அவர்களை வெகுவாக பாராட்டலாம். ராஜாஜி, ஜனனி ஐயர், பால சரவணன், ஆடுகளம் நரேன், பிரவின் நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் “கூர்மன்”. கூர்மன் கூர்மையாக இருந்ததா இல்லையா என்று பார்த்து விடலாம்.

கதைப்படி,

போலீஸ் சப் இன்ஸ்பெக்டரான ராஜாஜி, மிகவும் அறிவுத்திறன் உடையவராக இருக்கிறார். ஒருவர் மனதில் நினைப்பதை எளிதில் கண்டுபிடித்துவிடும் திறமையுடையவர். இன்னும் சில நாட்களில் தனது காதலியான ஜனனி ஐயரை மணமுடிக்க தயாராகிறார். இந்நிலையில், ஜனனி ஐயர் ஒருவனால் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்படுகிறார்.

இந்த துயரத்தில் இருந்து மீளாத ராஜாஜி, தனது வேலையையும் இழக்கிறார். ஜனனியை நினைத்து தனது காட்டு வீட்டிற்குள் தங்கி விடுகிறார். இவருக்கு உதவியாளராக வருகிறார் பால சரவணன்.

போலீஸ் உயரதிகாரியால் முடிக்க முடியாத பல வழக்குகளை தனது காட்டு வீட்டிற்கு குற்றவாளிகளை வரவழைத்து வழக்கை கண்டுபிடித்துவிடுவார் ராஜாஜி.

இப்படியாக கொண்டு வரப்பட்ட கொலைக் குற்றவாளியான பிரவீன் அங்கிருந்து தப்பித்துவிடுகிறார். இதனால், கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படுகிறார் ராஜாஜி.

எதற்காக அவர் தப்பித்தார்.? மீண்டும் பிரவின் கிடைத்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

ராஜாஜி, பல படங்களில் இவரை பார்த்தாலும் மற்ற படத்திற்கும் இந்த படத்திற்கும் மிகப்பெரும் வித்தியாசத்தை கொடுத்திருக்கிறார் நாயகன். எந்த இடத்திலும் ஓவர் ஆக்டிங்கையோ, ஓவர் பெர்பார்மன்ஸையோ கொடுக்கவில்லை. அதிலும் தாடி லுக்’கில் மாஸாக தோன்றுகிறார். இளமை காலத்தில் க்ளீன் ஷேவ் லுக்கில் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் கேரக்டரையும் கனக் கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். காதலியை பிரிந்து வாழும் இடமாகட்டும், வழக்கை இன்வஸ்டிகேஷன் செய்யும் இடமாகட்டும் இரண்டிலும் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.

நாயகியாக ஜனனி ஐயர், பல படங்களில் நடித்த அனுபவம் இருந்தாலும் இப்படத்தில் எந்த விதமான ரியாக்‌ஷனையும் கொடுக்காமல் கொடுக்கப்பட்ட டயலாக்கை வாசித்து சென்றது போன்ற ஆக்டிங்கை கொடுத்திருக்கிறார்.

படத்திற்கு ஒரு பில்லராக (தூணாக) வந்து நிற்கிறார் பால சரவணன். இவரின் கெளண்டர் காமெடிகள் படம் ஓட்டத்திற்கு நடுவே ஒரு ரிலாக்‌ஷேசனாக வந்து செல்கிறது. ரசிக்க வைத்திருக்கிறார்.

போலீஸ் உயர் அதிகாரியாக வரும் ஆடுகளம் நரேன், கொடுக்கப்பட்ட கேரக்டரை பொருந்தி நடித்திருக்கிறார்.

காதலியை கொன்ற குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட கேரக்டரில் நடித்த நடிகர் பிரவின் படத்தின் ஓட்டத்திற்கு துணை நின்றிருக்கிறார். கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை உணர்ந்து, அதை செவ்வென செய்து முடித்திருக்கிறார் பிரவீன்.

இதே நடிப்பை தொடர்ந்தால், நிச்சயம் கோலிவுட்டில் தனக்கென தனி முத்திரை பதிப்பார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

முருகானந்தம், சூப்பர் குட் சுப்ரமணி, சதீஷ் பிரபு என அனைவரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார்கள்.

கதை நகர்வு, வசனம், இயக்கம் என அனைத்தையும் சரியாக செய்த இயக்குனர் கதையில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். காதலியை இழந்ததற்காக துறவி வாழ்க்கை போல் வாழ்வது, பணக்கார வீட்டுப் பையன் பெண்ணை சீரழிப்பது என பல படங்களில் வந்து கொண்டிருக்கும் கதை என்பதால் சற்று தொய்வு.., ஆனால் கொடுக்கப்பட்ட தண்டனை என்னமோ புதியது. அதற்காக இயக்குனருக்கு பெரும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளலாம்.

டோனி பிரிட்டோவின் இசை படத்தின் ஓட்டத்திற்கு துணை நின்றிருக்கிறது. சக்தி அரவிந்த் அவர்களின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரும் பலம்.

தயாரிப்பு நிறுவனம் – எம் கே எண்டர்டெயின்மெண்ட்

கூர்மன் – இன்னும் கூர்மையாக கொடுத்திருந்திருக்கலாம்…

Facebook Comments

Related Articles

Back to top button