முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் மறைவிற்கு பிறகு அவரது மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க.அழகிரி மெரினாவில் அமைந்திருக்கும் கலைஞர் நினைவிடம் நோக்கி இன்று அமைதி பேரணியை நடத்தினார். காலை 11 மணிக்கு தொடங்கிய அமைதி பேரணியில் 10,000 பேர் கலந்து கொண்டனர்.
திருவல்லிக்கேணியில் தொடங்கிய இந்த பேரணி கலைஞர் நினைவிடத்தில் முடிவடைந்தது. அங்கு அழகிரி, அவரது மகன் தயாநிதி அழகிரி, மகள் கயல்விழி ஆகியோர் கருணாநிதி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மட்டுமே இந்த பேரணி நடத்தப்பட்டது. பேரணிக்கு எந்த அரசியல் காரணமும் இல்லை. எனக்கு பின்னால் ஒன்றரை லட்சம் தொண்டர்கள் இருக்கிறார்கள் என்றார். மேலும், எனக்கு ஆதரவானவர்களை நீக்கினால் ஒன்றரை லட்சம் பேரையும் நீக்கிவிட முடியுமா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.