
ஏபிஜி ஏழுமலை இயக்கத்தில் சேது, சம்ரிதி தாரா, பி எல் தேனப்பன், லேட் சூப்பர் குட் சுப்ரமணி, ரத்னகலா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மையல்”.
அன்று இரவில் ஒரு பக்கம் நாயகன் ஆடு திருட, மற்றொரு பக்கம் இருவர் சேர்ந்து ஒரு வயதான தம்பதியினரை வெட்டிக் கொல்கின்றனர்.
ஆடு திருடி மாட்டிக் கொள்ளாமல் தப்பித்துக் கொள்ள ஓடும் போது அங்கிருந்த கிணற்றுக்குள் தவறி விழுகிறார் சேது. இதனால், கால் முறிவு ஏற்படுகிறது சேதுவிற்கு.
மறுநாள் காலையில், நாயகி சம்ரிதி சேதுவை காப்பாற்றுகிறார். சம்ரிதி தனது பாட்டியோடு ஊரை விட்டு தள்ளி ஒரு ஒற்றைக் குடிசையில் வாழ்ந்து வருகிறார். இவரது பாட்டி, மாந்திரக கலையில் கைதேர்ந்தவர்.
சம்ரிதி சேதுவிற்கு அடைக்கலம் கொடுக்கிறார். திருடன் சேதுவைத் தேடி சிலர் அழைந்து கொண்டிருக்க, பாதுகாப்பிற்காக சம்ரிதாவின் வீட்டிலேயே சில நாட்கள் தங்கி விடுகிறார்.
இந்த சூழலில், சம்ரிதிக்கும் சேதுவிற்கும் காதல் மலர்ந்து விடுகிறது. இதனை அறிந்த சம்ரிதாவின் பாட்டி, சேதுவை அங்கிருந்து அனுப்பி வைத்து விடுகிறார்.
அதே சமயம், முதியவர்களை கொன்றது யார் என்று தெரியாமல் போலீஸ் அவர்களை வலைவீசித் தேடி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக அடுத்து என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
சேது கதையின் நாயகனாக மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். நாயகி சம்ரிதா மீது காதல் வயப்படும் போதாக இருக்கட்டும், ஜெயிலுக்குள் அவள் மீது வைத்திருந்த காதலை போலீஸிடம் விளக்கும் இடமாக இருக்கட்டும் என ஒரு சில காட்சிகளில் படம் பார்ப்பவர்களின் கண்களில் ஈரம் கசியும் அளவிற்கான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
நாயகி சம்ரிதி, கதைக்கேற்ற நாயகியாக ஜொலித்திருக்கிறார். கரிசக்காட்டில் பூத்த பூவாக கதையில் ஜொலித்திருக்கிறார்.
இருவருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாகவே வொர்க் அவுட் ஆகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து. இன்ஸ்பெக்ட்ராக நடித்திருந்தவர், பி எல் தேனப்பன், கொலை செய்த நபர்கள் என படத்தில் நடித்த அனைவருமே தங்களது கேரக்டர்களை தெளிவாக செய்து முடித்திருந்தனர்.
ஒரு இரவில் நடந்த திருட்டு, கொலை அதனைத் தொடர்ந்து நடக்கும் திருடன் மீதான காதல் என நல்லதொரு ஒன் லைன் கதையை கையில் எடுத்த இயக்குனர் அதை திரைக்கதையாக மாற்றும் இடத்தில் நன்றாகவே தடுமாறியிருக்கிறார்.
க்ளைமாக்ஸ் நம்மை கண்கலங்க வைத்துவிட்டது.
கதையின் போக்கை சற்று கவனமாகவே கையாண்டு சென்றிருந்திருக்கலாம். திருடன் மீது எப்படி ஒரு பெண் காதல் கொள்வாள்.? என்பதை அழுத்தமாகவே கூறியிருந்திருக்கலாம். என பல இடங்களில் பல கேள்விகளை நம்மை கேட்க வைத்திருக்கிறார் இயக்குனர். படம் சென்று கொண்டிருக்கும் போதே தெரிந்து விட்டது இப்படியாகத் தான் க்ளைமாக்ஸ் இருக்கும் என்று.
அமர்கீத்தின் இசையில் பாடல்கள் சுகமாக இருக்கிறது. பின்னணி இசையும் கதையோடு பயணம் புரிகிறது.
பால பழனியப்பனின் ஒளிப்பதிவு மலையழகை ரம்மியமாக காட்டியிருக்கிறது.
மையல் – தடுமாற்றம்..





