
பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் ஆகாஷ் முரளி, அதிதி சங்கர், குஷ்பூ, சரத்குமார், பிரபு, கல்கி கோய்ச்லின் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் படம் தான் நேசிப்பாயா.
இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. மேலும், தயாரித்திருக்கிறார் XB பிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ.
கதைக்குள் பயணிக்கலாம்…
கதையின் நாயகனான ஆகாஷ் முரளி, நாயகி அதிதி சங்கரை கண்டதும் காதலில் விழுகிறார். தொடர்ந்து அவர் பின்னால் சென்று ஒரு தலை காதலை இருதலை காதலாக மாற்றுகிறார் ஆகாஷ் முரளி.
இவர்களின் காதல் நல்லபடியாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இருவர்களுக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இருவரும் பிரிந்து விடுகிறார்கள். ஆகாஷ் முரளி சென்னையிலும், அதிதி சங்கர் போர்ச்சுகலிலும் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில், செய்யாத கொலை குற்றத்திற்காக அதிதி சங்கர் போர்ச்சுகல் சிறையில் இருப்பதாக ஆகாஷ் முரளிக்கு தகவல் வர, உடனே போர்ச்சுகலுக்கு பறக்கிறார் ஆகாஷ் முரளி.
அதிதி சங்கரை ஆகாஷ் முரளி எப்படி காப்பாற்றினார்.?? அதிதிக்கு பின்னால் என்ன சதி நடந்தது என்பதை ஆகாஷ் முரளி எப்படி கண்டுபிடித்தார் என்பதே படத்தின் மீதிக் கதை.
கதை நாயகன் ஆகாஷ் முரளி, இதுதான் முதல் படம் என்பது போல் இல்லாமல், தனது நடிப்பை மிகவும் இயல்பாக கொடுத்து கதாபாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறார். சின்ன சின்ன குறைகள் ஆங்காங்கே எட்டிப் பார்த்தாலும், திரைக்கதையின் வேகம் அதை பெரிய பொருட்டாக எடுத்துக் கொள்ள வைக்கவில்லை.
அதிதி சங்கர் உடனான காதல் காட்சிகளில் நன்றாகவே தனது நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் ஆகாஷ் முரளி.
நாயகி அதிதி சங்கர் தனது க்யூட்டான நடிப்பில் அனைவரையும் வெகுவாகவே கவர்ந்திருக்கிறார். சிரிப்பாலும் தனது வசன உச்சரிப்பாலும் மிகவும் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் பலரையும் கட்டிப்போட்டிருக்கிறார் அதிதி சங்கர்.
சரத்குமார், குஷ்பூ, ராஜா, பிரபு, கல்கி கோச்சலின் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது அனுபவ நடிப்பை நன்றாகவே கொடுத்திருக்கிறார்கள். ஆக்சன் காட்சிகள் ஹாலிவுட் படத்திற்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு மிகவும் பிரமண்டமாக கொடுத்திருப்பதால், படத்திற்குள் நாமும் செல்வது போன்ற ஒரு உணர்வை கொடுத்து விட்டார் இயக்குனர்.
பல படங்களில் பார்த்த ஒன்லைனாக இருந்தாலும் அதில் தனக்கே உரித்தான பிரமாண்டமான திரைக்கதை அமைத்து அதில் சிறப்பாகவே பயணித்திருக்கிறார் இயக்குனர் விஷ்ணுவர்தன்.
பாடல்களில் யுவன் ஷங்கர் ராஜா இன்னும் தனது மெனக்கெடலை அதிகமாகவே கொடுத்திருக்கலாம். பின்னணி இசை ஓகே ரகம் தான். கடந்த சில படங்களாகவே யுவன் தனது இசையில் முக்கியத்துவம் கொடுப்பதில்லையோ என்ற சந்தேகத்தை எழுப்பிவிட்டார்.
ஒளிப்பதிவு கலர் புல் தான்
மொத்தத்தில்,
நேசிப்பாயா – காதலை விரும்புவர்களுக்கானது…





