
பல நூறாண்டுகளுக்கு முன் சீனாவில் ஒரு அரசன் பஞ்சலோகத்தால் ஆன உள்ளங்கையளவு கொண்ட ஒரு பன்றி சிலையை வைத்திருக்கிறார். இந்த சிலையை வைத்திருந்தால் பொன்னும் பொருளும் நம்முடனே இருக்கும் என்ற நம்பிக்கையில் பலரும் அந்த பன்றியின் சிலையை அடைய முயல்கிறார்கள்.
இறுதியாக ஒரு மருத்துவம் பார்ப்பவனிடம் சிக்கி, அந்த சீன மருத்துவனும் சோழ தேசத்தை வந்தடைகிறான். சோழ தேசத்தில் நண்பன் ஒருவன் கிடைக்க, அந்த நண்பனிடம் அந்த பன்றியின் சிலை கிடைக்கிறது. அவன், அதை பூமியில் புதைத்து வைக்க, பல நூறாண்டுகளுக்கு பின் அதாவது நிகழ்கால வருடத்தில் தொல்துறை ஆராய்ச்சியாளர் ஒருவரிடம் சிக்குகிறது அந்த பன்றியின் சிலை.
ஆராய்ச்சியாளரைக் கொன்று, ரவுடி ஒருவன் அந்த சிலையை கைப்பற்றிச் செல்கிறான். சில கோடிகள் மதிப்புமிக்க அந்த சிலை ரவுடியிடம் இருந்து அவரிடம் வேலை பார்த்த இருவர் வேறு ஒரு இடத்தில் மறைத்து வைக்கிறார்கள். அந்த இடத்தை கண்டுபிடிக்க ஒரு சில வழிகளையும் ஏற்படுத்திச் செல்கிறார்கள். இந்த இருவரும் இறந்துவிட,
அந்த சிலையைக் கண்டுபிடிக்க வேறு சில டீம் சுற்றுகிறது. இந்த டீம்’களின் ஓட்டமே இந்த படத்தின் கதை. இந்த டீமுக்கு அந்த பன்றியின் சிலை கிடைத்ததா .? இல்லையா.? இதுவே கதை..
இப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சத்யா, பாலாஜி ரத்தினம், நிஷாந்த் என மூவரும் நடித்திருக்கிறார்கள்.
எப்போதுமே வில்லனாக பார்த்து பழக்கப்பட்ட விஜய் சத்யாவிற்கு இது ஒரு புதுமாதிரியான படமாக அமைந்துள்ளது. அவரின் ஒரு சில காட்சிகள் காமெடியாக வடிவமைக்கப்பட்டு ரசிகர்களை ரசிக்கும் படியாக கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் பாலா அரண். வில்லத்தனத்தை காமெடித்தனமான பார்வையோடும், உடல்வாகுவோடும் மிகவும் கச்சிதமாக கொடுத்திருக்கிறார் விஜய் சத்யா. இனி விஜய் சத்யாவை வில்லனுக்காக மட்டும் அழைக்க மாட்டார்கள் இயக்குனர்கள்…
பாலாஜி ரத்தினம் மற்றும் நிஷாந்த் இருவரும் அனுபவ நடிகர்கள் போன்று மிகவும் யதார்த்தமாகவும் கதாபாத்திரத்திற்குள் பொருந்தியபடியான நடிப்பையும் கொடுத்திருக்கிறார்கள்.
பல இடங்களில் உடன் இருக்கும் கதாபாத்திரங்கள் அடிக்கும் லூட்டிகள் படத்தில் நன்றாகவே வொர்க்-அவுட் ஆகியுள்ளது. அதிலும், நிஷாந்தின் நண்பனாக வரும் சலூன்கடைக்காரர் போலீஸுடன் போனில் உரையாடுவது, விஜய் சத்யா மற்றும் அவரது உடன் வருபவர், நிஷாந்துடன் வரும் மற்றொரு நண்பன் என இவர்கள் அடிக்கும் அரட்டைகள் கலகலப்பை ஏற்றி வைக்கின்றன.
ஒளிப்பதிவையும் வித்தியாசமான முறையில் கையாண்டுள்ளதால் பார்ப்பவர்களை எந்த இடத்திலும் சோர்வடையச் செய்யவில்லை. அதுமட்டுமல்லாமல், கதை எடுத்துச் சென்ற விதமும், எடிட்டரின் நேர்த்தியான கைப்பக்குவமும் இப்படத்தை பரபரப்பாக்கியுள்ளது. பின்னனி இசை ஓகே ரகம் தான்.
இயக்குனரின் நேர்த்தியான கதை நகர்வு படத்திற்கு பலமாக இருக்கிறது.
பன்றிக்கு நன்றி சொல்லி – சிரிப்புக்குப் பஞ்சமில்லா பஞ்சலோக பன்றி சிலை தேடல்..
இப்படம் நேரடியாக ஓடிடி வெளியீடாக சோனி லைவ்-வில் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.





