தூத்துக்குடி மற்றும் மதுரை சம்பவம் உள்ளிட்ட பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ள பிரபல நடன இயக்குனர் ஹரிகுமார், ஸ்டுடியோகிரீன் கே ஈ ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். “தேள்” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கிறார்.
எங்கேயும் எப்போதும், நெடுஞ்சாலை உட்பட பல படங்களில் தனது தனித்துவமான இசையால் ரசிகர்களை கவர்ந்த இசையமைப்பாளர் சி சத்யா இந்த படத்துக்கு இசையமைக்கிறார். காட்டேரி படத்தின் ஒளிப்பதிவாளர் விக்னேஷ் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கேஎல் எடிட்டிங் செய்கிறார். கலை இயக்குனராக செந்தில் ராகவன் மற்றும் சண்டைப்பயிற்சியாளராக அன்பு, அறிவு ஆகியோர் பணி புரிகிறார்கள். பொன் பார்த்திபன் மற்றும் ஹரி குமார் இருவரும் இணைந்து வசனம் எழுதியிருக்கிறார்கள். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஹரிகுமார்.
“ஒரு புகழ் வாய்ந்த நடன இயக்குநரை இன்னொரு நடன இயக்குனர் ஒரு படத்தில் இயக்குவது வெறும் யதேச்சையான நிகழ்வு மட்டும் அல்ல. நான் நடனம் என்பது உணர்வுகளின் ஒரு முக்கியமான பிரிவு என்பதை நான் எப்போதும் நம்புகிறேன். நடனத்தில் அனுபவமிக்க இந்த இருவரும் அனைத்து தரப்பு மக்களையும் கவரும் வகையில் எமோஷன் கலந்த ஒரு ஆக்ஷன் படத்தை கொடுக்க இருக்கிறார்கள். ஸ்டுடியோகிரீன் நிறுவனம் இந்த ஜானரில் படத்தை எடுக்க உண்மையாக உழைக்கும். “தேள்” நிச்சயமாக எங்கள் நிறுவனத்துக்கு மேலும் பெருமை சேர்க்கும். சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்திருக்கிறோம். கதாநாயகி மற்றும் மற்ற நடிகர்கள் தேர்வு நடந்து வருகிறது. படப்பிடிப்பு மிக விரைவில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது” என்று பெருமையுடன் கூறுகிறார் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா.