
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார், வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வசூலில் புதிய சாதனையை எட்டியுள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்ற அதே வேளையில், அதிமுகவினரிடையே இந்தப் படம் சலசலப்பையும் உண்டு பண்ணியுள்ளது.
சர்கார் படத்தில் வில்லியாக நடிக்கும் வரலட்சுமிக்கு ஜெயலலிதாவின் கோமளவல்லி எனும் பெயர், இலவசப் பொருட்களை எரிப்பது என தவறான விஷயங்களை விஷமத்தனமாக படமாக்கியிருப்பதாக அதிமுக அமைச்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன், செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட பலரும் சர்கார் படத்தின் சர்ச்சைக்கு உரிய காட்சிகளை நீக்கவேண்டும், இல்லையெனில் சட்டப்படி சந்திப்போம் என்று சொல்லிவந்தனர்.
மேலும் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டார்கள். தியேட்டர்களில் கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள், அடுத்த கட்டமாக திரையரங்குகள் முன்பு அமைக்கப்பட்டிருக்கும் பேனர்களை கிழித்து எறிந்தனர்.
இந்த பரபரப்புக்கு இடையே, இன்று சர்கார் திரைப்படம் மறுதணிக்கைக்கு அனுப்பப்பட்டது. மறுதணிக்கையில் என்னென்ன காட்சிகளை நீக்குவது என்பது குறித்து சொல்லப்பட்டது. மேலும் கோமளவல்லி எனும் பெயர் இடங்களிலெல்லாம் ஒலி வராமல், ம்யூட் செய்யப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
மறுதணிக்கை முடிந்துவிட்ட நிலையில் அடுத்து சான்றிதழ் தரும் பணி நடைபெறும். அதையடுத்து இன்று 9ம் தேதி மதியம் 1 மணிக்கு மேல் திரையிடப்படும் காட்சிகள் எல்லாமே நீக்கப்பட்ட மறுதணிக்கை செய்யப்பட்ட சர்கார் திரைப்படமாக இருக்கும் என்கிறார்கள்.





