Spotlightவிமர்சனங்கள்

சார்பட்டா பரம்பரை – விமர்சனம் 4/5

 

பா இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிக்க உருவாகியுள்ளது சார்பட்டா பரம்பரை.. நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது.

1970களில் நடைபெற்ற கதையை கையில் எடுத்து இயக்கியிருக்கிறார் இயக்குனர்.

சார்பட்டா பரம்பரை மற்றும் இடியாப்ப பரம்பரை இரண்டும் பாக்ஸிங்-கில் ஒவ்வொருவரும் மோதிக்கொள்ளும் கேங்க்..,

சார்பட்டா பரம்பரையை வாத்தியாராக இருந்து வழி நடத்திச் செல்பவர் நடிகர் பசுபதி. தொடர்ந்து வெற்றி கண்டு வந்த சார்பட்டா பரம்பரை சில வருடங்களாக தோல்வியை கண்டு வருகிறது காரணம் இடியாப்ப பரம்பரையில் ஜாம்பவனாக வளர்ந்து நிற்கிறார் வேம்புலியாக வரும் ஜான்.

ஆர்யாவிற்கு பாக்ஸிங் மீது அதீத நாட்டம் இருந்தாலும், அம்மாவிற்கு பயந்து பாக்ஸிங்கில் கலந்து கொள்ளாமல் இருக்கிறார். பாக்ஸிங்-கில் கலந்து கொண்டு தனது கணவனை இழந்த்து போல் தனது மகனையும் இழந்து விடக் கூடாது என நினைக்கிறார் ஆர்யாவின் அம்மாவாக வரும் அனுபமா.

ஒருகட்டத்தில் வாத்தியார் பசுபதிக்கு பாக்ஸிங்-கில் அவமானமான நிகழ்வு நடந்தேற, அதை பொருத்துக் கொள்ளாத ஆர்யா களத்தில் இறங்குகிறார்.

ஆர்யாவின் ஆட்டத்தை அன்றுதான் கண்ட பசுபதி, ஆர்யாவை தயார் செய்கிறார். சார்பட்டா பரம்பரையின் மானத்தை காப்பாற்ற ஆர்யாவை வேம்புலிக்கு எதிராக களம் இறக்குகிறார் பசுபதி.
தனது அம்மாவின் எதிர்ப்பையும் மீறி பாக்ஸிங்-கில் கலந்து கொள்கிறார் ஆர்யா.

வேம்புலியோடு ஆர்யா மோதும் போட்டியின் போது கலவரம் ஏற்பட, ஆர்யா தாக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறார். ஆட்சி கலைப்ப்பால் மிசா சட்டம் நடைமுறையில் வர, பசுபதி பல வருடம் சிறைவாசம் அனுபவக்கிறார்.

பசுபதியின் மகனாக வரும் கலையரசன் ஆர்யாவை வைத்து சாராயம் காய்ச்சி பணம் சம்பாதிக்கும் வேலையில் இறங்குகிறார்.குடித்து குடித்து வாழ்க்கையை இழக்கிறார் ஆர்யா. தனது தாய், மனைவியுடன் தினமும் சண்டையிட்டுக் கொள்கிறார் ஆர்யா.

பசுபதி ரிலீஸ் ஆகிறார். மீண்டும் வேம்புலி ஆட்டத்திற்கு தயாராகிறார். ஆர்யாவின் உடல்நிலையை வைத்து, ஆர்யா தகுதியான ஆள் இல்லை என முடிவு செய்கிறார் பசுபதி.

தன்னால் முடியும் என்றும், சார்பட்டா பரம்பரையின் மானத்தை காப்பாற்றுவேன் என்றும் களம் இறங்குகிறார் ஆர்யா. இறுதியில் ஆர்யா போட்டியில் வென்றாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.

கபிலனாக நடித்திருக்கும் ஆர்யா, இப்படத்திற்காக கடின உழைப்பை கொடுத்திருக்கிறார் என்பதை பார்த்தாலே தெரிகிறது. ஆர்யா நடித்த படங்களிலே மிகவும் முக்கியமான படமாக சார்பட்டா பரம்பரை படம் நிச்சயம் அமையும். படத்தின் மொத்த கதையும் இவரை சுற்றியும் இவரை சார்ந்தும் தான் நகர்கிறது. அந்த கால மொழி, வசன உச்சரிப்பு, நடனம், எமோஷன், கோபம், வீரம் என அனைத்தையும் வெளிப்படுத்தியுள்ளார் ஆர்யா. இப்படத்திற்காக நிச்சயம் விருது பெறுவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

பசுபதியின் வாத்தியார் கதாபாத்திரம், ஜானின் வேம்புலி கதாபாத்திரம், இடியாப்ப பரம்பரை வாத்தியார், கலையரசனின் கதாபாத்திரம், நாயகி துஷாரா விஜயன், சந்தோஷ் பிரதாப், தாயாக வரும் அனுபமா குமார், காளி வெங்கட், பழைய ஜோக் தங்கதுரை, தனிகா கதாபாத்திரம், என படத்தில் நடித்த அனைவரின் நடிப்பும் பாராட்டுதலுக்குரியது.

படத்தின் பாதியில் வரும் ரோஸ் கதாபாத்திரம் அனைவரையும் ரசிக்க வைக்கும். சந்தோஷ் நாராயணின் இசை படத்திற்கு மிகப்பெரும் பலம். தமிழ் பிரபா மற்றும் இரஞ்சித்தின் வசனங்கள் படத்திற்கு கூடுதலான வலுவை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

முரளியின் ஒளிப்பதிவும் தர்மலிங்கத்தின் ஆர்ட் வேலைப்பாடுகளும் கூடுதலாக கவனிக்க வைத்திருக்கின்றன.

சண்டைக் காட்சிகளை மிகவும் நேர்த்தியாக அமைத்திருக்கிறார்கள் சண்டைப்பயிற்சி இயக்குனர்கள் அன்பறிவ்

கதையில் எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாமல் மிகவும் சுவாரஸ்யமாகவும், எதிர்பார்ப்புடனும் நகர்த்தியிருக்கிறார் இயக்குனர்.

பாக்ஸிங், குடும்பம் என இரண்டையும் கொண்டு வந்து சாதாரண மனிதனின் எளிய வாழ்வியல் முறையை சொல்வதாக இருக்கட்டும், அந்தகால அரசியலை கதையோடு ஒன்றி கொண்டு செல்வதாக இருக்கட்டும் இரண்டிலும் வென்றிருகிறார் இயக்குனர் பா ரஞ்சித்.

சார்பட்டா பரம்பரை – சார்.. பக்கா படம்

Facebook Comments

Related Articles

Back to top button