விமர்சனங்கள்

சவரக்கத்தி விமர்சனம் 3.5/5 (ஷார்ப்பான கத்திதான்)

மிஷ்கின் இயக்கம் என்றால் அவருக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டம் திரையரங்கிற்கு படையெடுக்கும் அதேபோல் ராமின் இயக்கம் என்றால் அவருக்கென்ற ஒரு ரசிகர்கள் கூட்டம் திரையரங்கிற்கு படையெடுக்கும். ஆனால் இருவரும் இணைந்து நடித்தால் ..?? மிஷ்கினின் சகோதரர் ஆதித்யன் இயக்கத்தில் உருவாகியுள்ள சவரக்கத்திக்கு கதை, வசனம், திரைக்கதை அமைத்திருக்கிறார் மிஷ்கின்.

ராம் ஒரு சாதாரண சவரக்கத்தி தீட்டி சவரம் செய்யும் ஒரு கூலித் தொழிலாளி. தன் தொழிலையும் தனது அன்பான காது கேளாத மனைவி பூர்ணா மற்றும் இரண்டு குழந்தைகளையும் அளவுக்கு அதிகமாக காதல் செய்யும் ஒரு மனிதன்.

நிறை மாத கர்ப்பிணியான பூர்ணாவின் உடன் பிறந்த சகோதரரின் திருமணத்திற்கு தனது மனைவி, குழந்தையோடு ராம் பைக்கில் சென்று கொண்டிருக்கும் போது எதிர்பாராதவிதமாக மிஷ்கினின் கார் அவரை கீழே தள்ளி விட கோபத்தில் மிஷ்கினை அடித்து விடுகிறார் ராம்.

கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து சென்றுவிடுகிறார் ராம். மிகப்பெரிய ரெளடியான மிஷ்கின், தன்னை அடித்த ராமை கொலை செய்யாமல் விட மாட்டேன் என்று அவரை தேடிச் செல்கிறார்.

கொலை வெறியோடு தேடி அலையும் மிஷ்கினின் கையில் ராம் சிக்கினாரா..?? அவரின் உயிருக்கு என்ன ஆயிற்று என்பதே படத்தின் மீதிக் கதை..

இயக்குனர் மிஷ்கினின் இயக்கத்தில் உருவாகும் படங்கள் எப்படியிருக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இயக்குனர் பாலாவிற்கு ஒரு ஸ்டைல் என்றால் மிஷ்கினின் இயக்கத்திற்கு ஒரு தனி முத்திரை இருக்கும். அதே போல் ராமின் இயக்கமும் எப்படி இருக்கும் என்பதும் தெரிந்தது தான்.

மிஷ்கினும் ராமும் இணைந்தால் என்னவாகும்…?? அந்த ரிசல்ட்டை தான் இந்த படத்தில் கொடுத்திருக்கிறார்கள்.

சும்மா தெறிக்க விடும் நகைச்சுவைகளை அள்ளித் தெளித்திருக்கிறார்கள். மிஷ்கினின் உணர்ச்சிப்பூர்வமான வசனங்கள் நம்மை ஆங்காங்கே நெகிழ வைத்திருக்கின்றன.

சவரத் தொழிலாளியாக ராம் மிகக் கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். ரோட்டில் உருண்டு புரளும் காட்சிகளிலும், அவர் மேல் விழும் அடி காட்சிகளும் நம்மை உருக வைத்து விட்டன. ராம் தன்னை ஒரு சிறந்த இயக்குனரை என்பதை விட தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நெஞ்சை நிமிர்த்தி உயர்த்தி கூறலாம்.

ஒரு வில்லத்தனத்திலும் ஒரு பாசம் காட்டுவதையும் வெளிச்சம் போட்டு நடித்துள்ளார் மிஷ்கின். மிரட்டும் கண் பார்வைகள், நம்மை மிரள வைக்கின்றன.

பூர்ணாவின் நடிப்பு ஆச்சரியப்பட வைக்கிறது. காது கேளாமல், அவர் கூறும் ஒவ்வொரு பழமொழிகளும் கிராமத்தில் இன்னமும் பாட்டிகளிடம் புழக்கத்தில் உள்ளவைதான். அவருக்கு ஒரு கிரேட் சல்யூட் வைக்கலாம். ஒரு நல்ல நடிகையை இந்த சினிமா நிச்சயம் கொண்டாடும்.

மிஷ்கினின் உடன் வரும் கதாபாத்திரங்களாக இருக்கட்டும், ராமின் கடையில் வேலை பார்க்கும் அந்த கதாபாத்திரமாக இருக்கட்டும், தம்பி திருமணம் செய்யவிருக்கும் அந்த பெண் வீட்டாரின் கதாபாத்திரமாக இருக்கட்டும் அனைவரையும் மனதில் பதியவைத்து விட்டார் இயக்குனர் ஆதித்யன்.

கார்த்திக் வெங்கட்ராமனின் கேமரா மிஷ்கின் படங்களின் கேமரா சாயலை காட்டினாலும் அனைத்தும் கதைக்கு தேவையான ஷாட் தான்…

ஆரோல் கரோலியின் பாடல்களில் சவரக்கத்தி பாடல் கேட்கும் ரகம்.. பின்னனி இசை கதையோடு பயணம் புரிகிறது.

சவரக்கத்தி – நகைச்சுவை கலந்த உணர்ப்பூர்வமான வைரக்கத்தி

Facebook Comments

Related Articles

Back to top button