
பா ரஞ்சித்தின் உதவி இயக்குனராக இருந்த சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர் ஜே பாலாஜி, செல்வராகவன், நட்டி, சானியா அய்யப்பன், கருணாஸ், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி இன்று வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் சொர்க்கவாசல்..
இப்படத்திற்கு பிரின்ஸ் ஆண்டர்சன் ஒளிப்பதிவு செய்திருக்கிறா. கிறிஸ்டோ சேவியர் இசையமைத்திருக்கிறார்.
Swipe Right Studios நிறுவனம் தயாரித்திருக்கிறது. விருமாண்டி, வட சென்னை உள்ளிட்ட இரு படங்களும் சிறை பற்றிய விரிவான கதையை கொடுத்திருக்கிறது. அதிலிருந்து சொர்க்கவாசல் என்ன மாதிரியான வித்தியாசத்தை கொடுத்திருக்கிறது என்பதை விமர்சனம் மூலம் பார்த்து விடலாம்.
கதைக்குள் பயணித்து விடலாம்…
சென்னையில்,
ரோட்டோரத்தில் தள்ளுவண்டியில் சாப்பாடு கடை நடத்தி வருபவர் ஆர் ஜே பாலாஜி. அம்மா, காதலி என இவருக்கான உலகம் மிக சிறியது.
ஒருகொலை வழக்கில் லாவகமாக ஆர் ஜே பாலாஜியை கோர்த்துவிடுகிறது போலீஸ்.
சென்னை மத்திய சிறையில் ஆர் ஜே பாலாஜி அடைக்கப்படுகிறார். அங்கு, மிகப்பெரும் ரெளடியான செல்வராகவன் சிறைச்சாலையை தன் கண்ட்ரோலில் வைத்திருக்கிறார்.
செல்வராகவனுக்கு சிலன், கெண்ட்ரிக் மற்றும் டைகர் மணி மூவரும் விசுவாசமாக இருக்கின்றனர். தான் ஜெயிலுக்கு வந்ததற்கு செல்வராகவன் தான் காரணம் என்றெண்ணி அவரை எதிர்த்து நிற்கிறார் ஆர் ஜே பாலாஜி.
இந்த சூழ்நிலையில், செல்வராகவன் இனி எந்த குற்றச் செயலிலும் ஈடுபடக் கூடாது என்றெண்ணி மனம் திருந்துகிறார். அதேசமயம், புதிதாக சிறை அதிகாரியாக வரும் ஷாரப், செல்வராகவனின் நெருங்கிய நண்பனான கெண்ட்ரிக்கை கொலை செய்து விடுகிறார்.
இதனால், வெகுண்டெழுகிறார் செல்வராகவன். ஒருகட்டத்தில், செல்வராகவனை முடித்துவிட காவல்துறை நினைக்கிறது. அதற்கு ஆர் ஜே பாலாஜியை பகடைக்காயாக பயன்படுத்துகிறது.
அதன்பிறகு, ஜெயிலுக்குள் மிகப்பெரும் கலவரம் வெடிக்கிறது.
கலவரத்தில் யாருக்கு என்ன ஆனது.?? ஆர் ஜே பாலாஜி என்னவானார்.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் ஆர் ஜே பாலாஜி கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். பார்த்திபன் என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். சாதாரண ஏழை மகனாக நடித்தவரை கதையின் நாயகனாக நன்றாகவே ஜொலித்திருந்தார். சிறைக்குள் சென்றதும் பார்த்திபனின் கதாபாத்திரம் வேறு ஒரு தளத்திற்குச் செல்கிறது. அந்த தளத்தில் ஆர் ஜே பாலாஜி சற்று சறுக்கியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
இரண்டாம் பாதியில் இன்னும் சற்று மெனக்கெடல் செய்து நடித்திருக்கலாமே என்ற கேள்வி அனைவரின் மனதிற்குள்ளும் எழாமல் இல்லை.
ஒரு வெயிட்டான கதாபாத்திரம் தான் சிகா கேரக்டர். இக்கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் செல்வராகவன். ஒரு இடத்தில் கூட சிகா கேரக்டராக நமக்கு தெரியாமல் போனது பெரும் ஏமாற்றம் தான். அவ்வளவு பெரிய வெயிட்டேஜை செல்வராகவனால் தாங்க முடியாமல் போய்விட்டது போலும்.
சின்ன கதாபாத்திரம் என்றாலும், தனக்கென தனி முத்திரையாக, அதில் என்ன வித்தியாசம் காட்ட முடியுமோ காட்டி விட்டுச் சென்றிருக்கிரார் நட்டி.
அனுபவ நடிப்பிலும் இயல்பான நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார் கருணாஸ். இப்படத்தில் இவருக்கான கேரக்டர் பலம் அதிகம் தான்.
மேலும், அதிகாரியாக நடித்த ஷாரப், அம்மாவாக நடித்தவர், நாயகியாக நடித்த சானியா ஐயப்பன், டைகர் மணியாக நடித்தவர் என படத்தில் தோன்றிய மற்ற கதாபாத்திரங்கள் எதுவும் சோடை போகவில்லை. மிக கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்கள்.
திருநங்கை நடித்த அந்த அருவருப்பான காட்சிகளை தவிர்த்திருந்திருக்கலாம்.
பின்னணி இசை படத்திற்கு பெரும் பூஸ்ட் தான். ஒவ்வொரு இடத்திலும் நன்றாகவே ஸ்கோர் செய்திருக்கிறார் இசையமைப்பாளர்.
இரண்டாம் பாதியில் ஒளிப்பதிவு நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. கலவரத்தை காட்சிப்படுத்திய விதம் மிரள வைத்திருக்கிறது.
மொத்தத்தில்,
சொர்க்கவாசல் -இன்னும் எனர்ஜி ஏற்றியிருந்திருக்கலாம்..





