
நடிப்பு: ஆர்யா, நிகிலா விமல், ரெஜினா கசாண்ட்ரா, சுனில், இந்திரன்ஸ், சித்திக், அஜய், போஸ் வெங்கட், தேவ் மோகன், ரெஞ்சி பணிக்கர், அஞ்சலி பி. நாயர், சாந்தி பாலசந்திரன், அச்சுத் குமார், விஜயராகவன், சாகர் சூர்யா உள்ளிட்ட பலர்.
இயக்கம்: ஜியன் கிருஷ்ணகுமார்
கதை, திரைக்கதை, வசனம்: முரளி கோபி
இசை: பி. அஜனீஷ் லோக்நாத்
ஒளிப்பதிவு: எஸ். யுவா
படத்தொகுப்பு: ரோஹித் வி.எஸ். வரியத்
இலங்கை உள்நாட்டு போரின் கொடூரத்தில் தனது தாய், சகோதரி மற்றும் கிராம மக்களை இழந்து மரணத்தின் நுனியில் இருந்த ஆர்யாவை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் காப்பாற்றுகிறார். பின்னர் அவர் கேரளாவுக்கு அனுப்பப்படுகிறார்.
காலம் கடந்து, கேரளாவில் இந்திரன்ஸ் தலைமையில் இயங்கும் ரகசிய கூலிப்படையில் முக்கிய உறுப்பினராக மாறுகிறார் ஆர்யா. அந்தக் குழுவினருக்கு கூட அவரது உண்மையான பின்னணி தெரியாது. மறுபுறம், தனது அரசியல் மற்றும் தனிப்பட்ட தேவைகளுக்காக இந்த கூலிப்படையை பயன்படுத்திக் கொள்கிறார் உயர்பதவி போலீஸ் அதிகாரியான சுனில்.
அரசியல் நெருக்கடியில் சிக்கிக் கொள்ளும் கேரள முதல்வர், தனது அதிகாரத்தை காப்பாற்றுவதற்காக ஒரு சக்திவாய்ந்த அரசியல் எதிரியை அகற்ற திட்டமிடுகிறார். அதற்காக திண்டுக்கல்லில் செல்வாக்கு மிக்க நபரான அச்சுத் குமாரை கொலை செய்யும் பொறுப்பு இந்திரன்ஸ் குழுவிடம் ஒப்படைக்கப்படுகிறது.
திட்டமிட்டபடி அந்தக் குழு தமிழ்நாட்டுக்கு செல்கிறது. ஆனால் அங்கு எதிர்பாராத திருப்பம் ஏற்படுகிறது. பல தமிழர்களின் மரணத்திற்கு காரணமான நபரான அச்சுத் குமாரை ஆர்யா, குழுவின் திட்டத்திற்கு முன்பாகவே அவரைக் கொலை செய்து விடுகிறார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இந்திரன்ஸ் மற்றும் அவரது குழுவினர், ஆர்யாவின் உண்மையான அடையாளத்தை அறிகின்றனர். அதே நேரத்தில், அரசியல் சூழ்நிலை மாறி, தன்னுடைய ரகசியங்களை மறைக்க அந்த கூலிப்படையையே அழிக்க முதல்வர் முடிவு செய்கிறார்.
இதன் பிறகு ஆர்யாவுக்கும், அரசியல் அதிகார மையங்களுக்கும் இடையே நடக்கும் மோதல்களே “அனந்தன் காடு” படத்தின் மீதிக் கதையாக விரிகிறது.
அரசியல், பழிவாங்குதல், அடையாளம், துரோகம் மற்றும் உயிர் பிழைப்பிற்கான போராட்டம் ஆகியவற்றை ஒன்றாக கலந்த ஒரு ஆக்ஷன் அரசியல் த்ரில்லராக உருவாகியுள்ளது “அனந்தன் காடு”.
படத்தின் மிகப்பெரிய பலம் ஆர்யாவின் கதாபாத்திரம். வெறும் ஆக்ஷன் ஹீரோவாக இல்லாமல், தனது கடந்த காலத்தின் காயங்களோடு வாழும் ஒரு மனிதனாக அவர் வடிவமைக்கப்பட்டுள்ளார். அமைதியாக நகரும் முதல் பாதியில் குறைவாக பேசினாலும், அவரது கண்களும் உடல்மொழியும் கதாபாத்திரத்தின் வலியை உணர்த்துகின்றன. ஆக்ஷன் காட்சிகளில் ஆர்யா வழக்கம்போல சிறப்பாக மிளிர்கிறார். அதேசமயம் உணர்ச்சிப்பூர்வமான தருணங்களிலும் தனது நடிப்பு திறனை வெளிப்படுத்தியுள்ளார். ஆக்ஷன் காட்சிகளில் அவரது நடிப்பானது அனைவரிடத்திலும் புல்லரிப்பை வரவைத்து விடுகிறது.
இந்திரன்ஸ், சுனில், விஜயராகவன், அச்சுத் குமார் ஆகியோரின் கதாபாத்திரங்கள் கதைக்கு வலு சேர்க்கின்றன. குறிப்பாக இந்திரன்ஸ், தனது அனுபவம் மிக்க நடிப்பின் மூலம் பல காட்சிகளில் கவனம் ஈர்க்கிறார். சுனில் நடித்துள்ள போலீஸ் அதிகாரியின் இரட்டை முக அரசியல் பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது. வில்லனான சுனிலில் கதாபாத்திரமே இப்படத்திற்கான அடித்தளமாக இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இதுவரை பார்த்த இந்திரன்ஸ் இந்த படத்தில் இல்லாமல், மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து மிரட்டியிருக்கிறார்.
சாந்தி பாலசந்திரனின் நடிப்பு கண்களில் ஈரத்தை கொண்டு வர வைத்துவிட்டார். மேலும், படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் படத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பைக் கொடுத்திருக்கின்றனர்.
முரளி கோபியின் திரைக்கதை அரசியல் பின்னணியையும், தனிப்பட்ட பழிவாங்கும் கதையையும் திறமையாக இணைக்கிறது. அதிகாரத்தின் பின்னால் நடக்கும் சதிகள், அரசியல் கூட்டணிகள் மற்றும் துரோகங்கள் திரைக்கதைக்கு விறுவிறுப்பை சேர்க்கின்றன.
ஒளிப்பதிவாளர் யுவாவின் கேமரா, கேரளாவின் இயற்கை சூழலையும், காடுகள் மற்றும் கிராமப்புற பின்னணியையும் அழகாக பதிவு செய்துள்ளது. குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் கேமரா வேலை சிறப்பாக உள்ளது.
அஜனீஷ் லோக்நாத்தின் பின்னணி இசை படத்தின் பதற்றத்தையும் உணர்ச்சியையும் பல மடங்கு உயர்த்துகிறது. பல முக்கிய காட்சிகளில் இசை தனியே ஒரு கதாபாத்திரமாக செயல்படுகிறது.
எனினும், சில இடங்களில் திரைக்கதை சற்று சிக்கலாக நகர்கிறது. ஆனால் இந்த குறைகளை மறக்கச் செய்யும் வகையில், இரண்டாம் பாதியின் வேகம், எதிர்பாராத திருப்பங்கள் மற்றும் ஆர்யாவின் ஆக்ஷன் காட்சிகள் படத்தை சுவாரஸ்யமாக முன்னெடுத்து செல்கின்றன. ஜியன் கிருஷ்ணகுமார் மிகவும் நேர்த்தியான ஒரு இயக்கத்தைக் கொடுத்து அசர வைத்திருக்கிறார்.
அரசியல் சூழ்ச்சிகளும், பழிவாங்கும் உணர்வும், அதிரடியான ஆக்ஷன் காட்சிகளும் கலந்த விறுவிறுப்பான த்ரில்லர் அனுபவத்தை வழங்கும் படம் – “அனந்தன் காடு”. க்ளைமாக்ஸ் காட்சிகள் ஆறுதல் கொடுத்தாலும், ஆர்யாவின் முக்கியத்துவம் என்பதோ சற்று தொய்வடைந்து விட்டதோ என்ற சிறிய வருத்தம் இருக்கதான் செய்கிறது. க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சி, திண்டுக்கல் சண்டைக் காட்சி என இரண்டு சண்டைக் காட்சிகளும் படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம். முதல்வரின் தனிபாதுகாவலராக வருபவரின் ஸ்டண்ட் காட்சிகள் மிரள வைத்தன.
மொத்தத்தில்,
அனந்தன் காடு – மிரட்டல்..





