Spotlightதமிழ்நாடு

அதிரப் போகும் பாஜக…. கல்வித் துறையில் அதிரடி காட்டத் தயாராகும் தமிழ்நாடு!

தொடர்ந்து ஜனநாயக விரோதச் செயல்களில் ஈடுபட்டு வரும் பாஜகவை சமாளிக்க முடியாமல் இந்தியாவின் மொத்த அரசியல் கட்சிகளும் தவித்துக் கொண்டு இருக்கும் காலம் இது. பாஜகவின் வேட்டைத் தடங்களைச் சரியாகக் கணித்து அதைத் திக்கு முக்காடச் செய்யும் ஒரே அரசியல் கட்சி திமுக தான் . திமுக தனது அடுத்த அறிவிப்பு மூலம் இந்திய அரசியலை தமிழகத்தை நோக்கித் திருப்பி இருக்கிறது.

இந்தியாவில் பாஜகவை எதிர்க்கும் கட்சிகள், அந்த எதிர்ப்பை மக்கள் எண்ணமாக மாற்றும் இடத்தில் திணறுகின்றனர். பாஜக தங்களுக்குக் கொடுக்கும் அழுத்தம் என்பது தங்கள் கட்சிக்கு, தரும் அரசியல் நிர்பந்தம் அல்ல, அது மக்கள் உரிமைகளின் மீதான அடக்குமுறை என்ற உண்மையை மக்களுக்குப் புரிய வைக்கத் தெரியாமல் பல கட்சிகள் தவித்து நிற்கின்றன. ஆனால், தமிழகத்தில் திமுக அந்த இடைவெளியை மிகச் சரியாகச் சமன்செய்து வருகிறது. பாஜகவை எதிர்க்க நினைக்கும் கட்சிகள் திமுகவிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டிய அரசியல் மந்திரம் அது.

மத்தியில் இருந்து திமுகவிற்கு அரசியல் ரீதியாகக் கொடுக்கப்பட்ட சிக்கல்களுக்குப் பின்னால் உள்ள மக்கள் பிரச்னைகளை மிகச் சரியாகக் கண்டு பிடித்து அதை மக்களிடம் கொண்டு சென்று அவர்கள் சிந்தனையில் அந்தத் தாக்கத்தை ஏற்படுத்தி அதற்கான தீர்வை அரசியல் வெளியில் முன்வைக்கிறது திமுக. இந்த இரட்டைத் தாக்குதல் என்பது டபுள் பேரல் துப்பாக்கியைப் போல பாஜக என்கிற இலக்கை மிகச் சரியாக குறி வைத்துத் தாக்குகிறது . இதை இன்னும் விரிவாகப் பார்த்தால் தான் பாஜகவிற்கு எதிராக திமுகவின் இந்த சிந்தனை இயக்கத்தின் வெற்றிக்கான காரணம் புரியும்.

திமுகவின் இந்த சிந்தனை இயக்கம் என்பது அதன் தோற்றத்தில் இருந்தே உருவாகி இருக்கிறது. இத்தனை ஆண்டுகள் ஆன பின்பும் அதன் தொடர்ச்சியும் வளர்ச்சியும் தான் பிரமிக்க வைக்கிறது. பாஜகவை வீழ்த்த திமுக தேர்ந்தெடுத்த சரியான இலக்கு கல்வி .

தேசியக் கல்விக் கொள்கையில் வலியுறுத்தப்படும் மும்மொழிக் கொள்கையைத தமிழ்நாடு ஏற்கவில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். இதன் தொடர்ச்சியாகப் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தும் பேசினார். நாடாளுமன்றத்திலும் திமுக கேள்வி எழுப்பியது. தமிழக அரசு பிஎம்ஸ்ரீ திட்டத்தில் இணைந்தால் மட்டுமே தமிழகத்திற்கான நிதியை விடுவிக்க முடியும் என மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்தது.

அரசாங்கக் எதிர்ப்பு முறையாக மட்டுமே இருந்து வந்த இந்த சிக்கலை மக்களின் முன்பாகக் கொண்டு வந்தார் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி. டிசம்பர் 23-ல் மும்மொழிக் கொள்கையை ஏற்க மத்திய அரசு நிர்பந்திப்பதாக குற்றம் சாட்டினார். அதில் இருந்து பற்றிக் கொண்டது இந்த விவகாரம்.

1938 மொழிப் போராட்டம் தீவிரமானதும் இதே டிசம்பரில் தான்.அன்று சென்னை சௌகார்பேட்டையில் இருந்த இந்து தியாலஜிகல் உயர்நிலைப் பள்ளி முன்பு இந்தித் திணிப்புக்கு எதிராக நடந்த மறியலில் நடராசன் கைதுசெய்யப்பட்டார். பின்னர் உடல் நிலை மோசமாகி, தண்டனைக் கைதியாகவே காலமானார். இதனால் தீவிரமான போராட்டம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழகம் முழுவதும் பெரும் மக்கள் புரட்சியாக வெடித்தது. 1965-ம் ஆண்டு நடந்த மொழிப் போராட்டத்தின் மூலம் திமுக ஆட்சிக்கு வர இந்த 1937 டிசம்பரில் தொடங்கிய போராட்டமே முதன்மைக் காரணமாய் விளங்கியது.

மொழி விவகாரம் இன்னும் அணையாமல் எரிந்து கொண்டு இருக்கிறது ஏன் தெரியுமா? சிக்கலை மக்களுக்குப் புரிய வைத்ததுதான். கல்விப் பிரச்சனையை மக்கள் வெளிக்குக் கொண்டுவந்த அடுத்த 35 நாட்களுக்குள் அடுத்தடுத்து கல்வி குறித்த மூன்று மிகப்பெரிய மக்கள் கூடல்களை நடத்தி இருக்கிறார் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்.

இந்தியா முழுவதும் இருந்து 20 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்ட சாரணர் இயக்க வைரவிழா மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டின் கல்விச் சூழலை மற்ற மாநில மாணவர்களையும் அறிய வைத்தது .தமிழகம் முழுவதும் மொத்தமாக மாநில பெற்றோர் ஆசிரியர் கழக மாநாடுகள் நடந்தன . சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட பெற்றோர், ஆசிரியர், மாணவர்களிடம் கல்வியின் மீது ஒன்றிய அரசு தரும் அழுத்தத்தை இந்த மாநாடுகள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்.

மக்கள் மன்றத்தில் இத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டே அரசியல் ரீதியிலான எதிர்வினையும் தரப்பட்டது. மத்திய அரசு நிதியை உடனே வழங்க வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று பேசினார் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் . இதற்கு அடுத்த நாளே மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் “தேசிய கல்விக் கொள்கையை ஏற்க தமிழக அரசு மறுக்கிறது. அதனால் எங்களால் நிதி ஒதுக்க முடியாது” என்று எதிர்வினை ஆற்றினார். அதற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் “எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்” என்று பேசினார்.

இந்த வருடம் தொடங்கியதில் இருந்து அரசியல் களம் மிகுந்த வெப்பத்துடன் காணப்படுகிறது. இந்தியாவின் மொத்தக் கவனமும் எந்த நேரமும் தமிழகத்தை நோக்கித் தான் இருக்கிறது. திமுக கடந்த நான்கு மாதங்களாக வீதியில் நின்று போராடிக் கொண்டே இருக்கிறது. கல்வியில் தொடங்கிய உரிமைப் போர், மாநில சுயாட்சி, வக்பு போர்டு எதிரான நிலைப்பாடு என்று தனது போராட்ட களத்தைப் பெரிதாக்கிக் கொண்டே செல்கிறது திமுக. அதன் அடுத்த முக்கிய நகர்வை விரைவில் நெருங்க இருக்கிறது.

“இது பணப் பிரச்சனை அல்ல இனப் பிரச்சனை. நிதி தரவில்லை என இனமானத்தை அடமானம் வைத்து வெகுமானம் பெறும் கொத்தடிமைகள் நாங்கள் அல்ல. தடைக்கற்கள் உண்டென்றால் அதை உடைத்தெறியும் தடந்தோள் உண்டென்று சொல்லும் திராவிட மாடல் ஆட்சி இது. மாநில சுயாட்சியை உறுதி செய்து மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழ் மொழியைக் காக்க முடியும், தமிழினத்தை உயர்த்த முடியும். இதற்கான அறிவிப்பை விரைவில்.. வெளியிடுவேன்” என்று சட்டப்பேரவையில் மும்மொழிக் கொள்கைத் திணிப்பை எதிர்க்கும் கவன ஈர்ப்புத் தீர்மானம் மீதான விவாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய வார்த்தைகள்தான் இவை.

தமிழகத்தின் மொத்த அரசியல் கவனமும் கல்வியை மீட்பதில் தான் இருக்கிறது. கல்விக்கான நிதியை ஒன்றிய அரசு தராத நிலையில் வரும் 24 ஏப்ரல் அன்று பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை நடைபெற இருக்கிறது. முதல்வரின் வார்த்தைகளுக்கான அர்த்தம் அன்று உணரலாம். ஏன் என்றால் இது தமிழ்நாடு ….

Facebook Comments

Related Articles

Back to top button