
அறிமுக இயக்குனரான அருள் செழியன் இயக்கத்தில் யோகிபாபு, விதார்த், துர்கா, ஸ்ரீ ப்ரியங்கா, இளவரசு நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் இந்த “குய்கோ”. குடியிருந்த கோயில் என்ற தலைப்பே குறுகி குய்கோ என்று வைத்திருக்கிறார்கள் படக்குழுவினர்.
பிரபல பத்திரிகையாளரான அருள் செழியன், இப்படத்தை இயக்கியிருக்கிறார் அருள் செழியன்…
கதைக்குள் சென்று விடலாம்…
கிராமத்தில் பயணப்படுகிறது கதை… சவூதியில் மன்னனின் ஒட்டகத்தை பார்த்துக் கொள்ளும் வேலை பார்த்து வருகிறார் யோகிபாபு.
திடீரென ஒருநாள் கிராமத்தில் யோகிபாபுவின் அம்மா இறந்துவிட, சவூதியில் இருந்து கிளம்புகிறார் யோகிபாபு.
வருவதற்கு இரண்டு நாள் ஆகும் என்பதால், தாயாரின் உடல் ப்ஃரீஸர் பாக்ஸில் வைக்கப்படுகிறது.. அந்த கிராமத்திற்கு ப்ஃரீஸர் பாக்ஸை கொண்டு வருபவராக வருகிறார்.
யோகிபாபுவும் கிராமத்திற்கு வர, அதன் பிறகு என்ன நடந்தது என்பதை கிராம உயிரோட்டத்தோடு கொடுக்கப்பட்டிருக்கும் படம் தான் இந்த “குய்கோ”.
நாயகர்களாக விதார்த் மற்றும் யோகிபாபு. கதைக்கு ஏற்ற நாயகர்களாக தோன்றி அசத்தியிருக்கிறார்கள் இருவரும்.. அதிலும், யோகிபாபு அடிக்கும் கவுண்டர் காமெடிகள் படத்திற்கு பெரிதாகவே கை கொடுத்திருக்கிறது.
நாயகிகள் இருவருக்கும் பெரிதான ஸ்கோப் இல்லை என்றாலும், தங்களுக்கு கொடுக்கப்பட்டதை செய்திருக்கிறார்கள்.
படத்தின் ஒரு தூணாக வந்து நிற்கிறார் நடிகர் இளவரசு. ஆங்காங்கே இவர் அடிக்கும் சில காமெடிகள் படத்தின் ஓட்டத்திற்கு நன்றாகவே கை கொடுத்திருக்கிறது.
சின்ன சின்ன கதாபாத்திரங்கள் கூட படத்தின் ஓட்டத்திற்கு நன்றாகவே கைகொடுத்திருக்கின்றனர். ஆரம்பத்தில் சற்று தடுமாறிய கதையானது, பின் போக போக நம்மையும் கதைக்குள் இழுத்துச் சென்று விட்டது.
யோகிபாபுவின் நண்பர்கள் என்று இருவரை காண்பித்து, அவர்கள் செய்யும் திருட்டையும் சரிவர காட்டாமல், அவர்களுக்காக யோகிபாபு எதற்காக இவ்வளவு செலவு செய்கிறார் என்பதையும், காவல் நிலையத்தில் ப்ரீஸர் பாக்ஸ் கிடைத்து விட்டது என்று ஏன் சொல்லவில்லை என பல கேள்விகளுக்கு விடை சொல்லாமல் கதையை நகர்த்தியிருக்கிறார்கள்..
புது இயக்குனரின் தடுமாற்றம் ஆங்காங்கே தென்பட்டது. அந்தோணி தாசனின் பாடல் படத்திற்கு மிகப்பெரும் பலம்..
கதைக்கான பாடல்களாக கொடுத்து பாடல்களை ரசிக்க வைத்திருக்கிறார். பின்னணி இசையும் பக்க பலமாக நிற்கிறது.
ராஜேஷின் ஒளிப்பதிவு கிராமங்களை மிக அழகாகவும், காட்சியை ரசிக்கும்படியாகவும் கொடுத்திருக்கிறது. பாடல் காட்சி எடுக்கப்பட்ட இடம், சூழல் என நம்மை கிராமத்திற்கே அழைத்துச் சென்று விட்டார் ஒளிப்பதிவாளர்.
சின்ன சின்ன சறுக்கல்கள் ஆங்காங்கே எட்டிப் பார்த்தாலும், குடும்பத்தோடு ரசிக்கும்படியான ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக “குய்கோ” அமைந்திருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
குய்கோ – குடும்பத்தோடு குய்கா(QUICK’a) தியேட்டருக்கு போய் படம் பாருங்க…





