
இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ராம்சரண், கியரா ,எஸ் ஜே சூர்யா, ஜெயராம், அஞ்சலி இவர்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் கேம் சேஞ்சர்.
இப்படத்திற்கு திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்து இருக்கிறார். தமன் இசையமைத்திருக்கிறார். தில்ராஜு மற்றும் ஆதித்ய ராம் இருவரும் இணைந்து இப்படத்தினை தயாரித்திருக்கின்றனர்.
இந்தியன் 2 படம் தோல்வியை சந்தித்ததால் இப்படத்தை கண்டிப்பாக ஹிட் அடித்தே ஆகவேண்டும் என்ற கட்டாய சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார் இயக்குனர் சங்கர்.
சரி கதைக்குள் செல்லலாம்….
தனது காதலுக்காக ஐபிஎஸ் ஆக இருந்த ராம்சரண் மீண்டும் படித்து ஐஏஎஸ் ஆக ஆகிறார் தனது சொந்த மாவட்டத்திலே கலெக்டர் போஸ்டிங்கும் வாங்கிக் கொள்கிறார்.
சகோதரர்களாக வரும் ஜெயராம் மற்றும் எஸ் ஜே சூர்யா இவர்களின் தந்தை தான் அம்மாநிலத்தின் முதல்வராக இருக்கிறார். தந்தைக்கு அடுத்தப்படியாக தான் தான் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சர் என்று கூறிக் கொண்டு வருகிறார் அமைச்சராக இருக்கும் எஸ் ஜே சூர்யா.
இந்நிலையில் முதல் நாள் கலெக்டர் பதிவில் ஏறியவுடன் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் ராம்சரண். வழக்கமாக சங்கர் படத்தில் நடக்கும் அந்த அதிரடியான மாற்றங்கள் தான் ஊழல், மோசடி, கொள்ளை இவற்றை தடுக்க தைரியமாக இறங்குகிறார்.
கொள்ளையடிப்பதில் முக்கிய புள்ளியாக இருக்கிறார் எஸ் ஜே சூர்யா. எஸ் ஜே சூர்யாவுடன் நேரடியாக மோதி கொள்கிறார் ராம்சரண். இச்சமயத்தில் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வரை தனது அப்பா என்றும் பாராமல் கொன்று விடுகிறார் எஸ் ஜே சூர்யா.
எஸ் ஜே சூர்யா அடுத்ததாக தான் தான் முதல்வர் என்று எண்ணிக் கொண்டிருந்த வேளையில் தன் இறப்பதற்கு முன்பே வீடியோ ஒன்றை பதிந்து விட்டு சென்றிருக்கிறார் எஸ் ஜே சூர்யாவின் தந்தை.
அதில் ராம்சரண் தான் மாநிலத்தின் முதல்வராக இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு செல்கிறார். இதன்படி ராம்சரண் மாநிலத்தின் முதல்வராக பதவி ஏற்க இருந்த நிலையில் அடுத்தடுத்து திடீர் மாற்றங்கள் நிகழ்கிறது அது என்ன.? என்பது படத்தின் மீதி கதை.
அதிலும் இறந்து போன முதல்வர் எதற்காக ராம்சரணை முதல்வராக ஆக்க வேண்டும்?? என்பதற்கான விடையும் இரண்டாம் பாதியில் கொடுத்திருக்கிறார் இயக்குனர் சங்கர்.
நாயகன் ராம்சரண் எதற்கும் அசராமல் தனது கதாபாத்திரத்தை மிகவும் பலம் கொண்டு நடித்து முடித்து இருக்கிறார். எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் மிக சிறப்பாக நடித்து அதில் வெற்றி கொள்ளும் ராம்சரண், இப்படத்திலும் தனக்கு கொடுக்கப்பட்ட கேரக்டரை மிகவும் நேர்த்தியாக செய்திருக்கிறார்.
அதிலும் பிளாஷ்பேக் ஆட்சியில் வரும் கேரக்ட நன்கு உணர்ந்து கொண்டு தன்னால் முடிந்த உழைப்பை அதில் கொடுத்திருக்கிறார். நாயகி கியாரா தனக்கு கொடுத்த வேலையை மிகவும் கச்சிதமாக செய்து முடித்து இருக்கிறார். அதிலும் அழகு சிலையாக வந்து செல்லும் பாடல் காட்சிகள் நம்மை பரவசப்படுத்துகின்றன.
ப்ளாஷ்பேக் காட்சியில் ராம்சரனுக்கு ஜோடியாக நடித்த அஞ்சலியும் தனது கேரக்டரை முழுதாக உள்வாங்கி அக்கதாபாத்திரமாகவே மாறி உள்ளார். வில்லனாக தோன்றிய எஸ் ஜே சூர்யா ஒரு சில இடங்களில் தனது யுனிக் நடிப்பை கொடுத்திருந்தாலும் , பல இடங்களில் இந்த இடத்தில் கொஞ்சம் ஓவர் ஆக்டிங் ஆயிடுச்சு என்று சொல்ல வைத்து விட்டார்.
சினிமாவில் ஒவ்வொரு இயக்குனரின் படைப்பிலும் ஒரு யுனிக்னஸ் இருக்கும் அது இயக்குனர் சங்கருக்கும் பொருந்தும். சங்கர் படம் என்றால் இந்த டெம்ப்ளேட் தான் என்று உணர்ந்து கொண்டு படத்திற்கு வரும் அனைத்து ரசிகர்களையும் ஏமாற்றி விட்டார் இயக்குனர் சங்கர்.
பல இடங்களில் லாஜிக் ஓட்டைகள் அதிலும் குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் வரும் சண்டைக்காட்சி இதெல்லாம் எப்படி நடக்கும் என்று கூறும் அளவிற்கு மிகப்பெரிய சோதனை செய்துவிட்டார்.
இயக்குனர் சங்கர் படமா இது என்று கூறும் அளவிற்கு ரசிகர்களின் மனக்குமுறலை வாங்கி கொட்டிகொண்டு விட்டார் இயக்குனர் சங்கர். திருநாவுக்கரசின் ஒளிப்பதிவு தமனின் இசை எல்லாமே படத்திற்கு கை கொடுத்தாலும் படத்தின் கதை பெரிதான ஒரு பிழை என்பதால் இப்படத்தில் நம்மளால் பயணிக்க முடியவில்லை. எப்போது படம் முடிந்து எழுந்து ஓடுவோம் என்று நம்மை என்ன வைத்து விட்டார் இயக்குனர் சங்கர்.
மொத்தத்தில்,
கேம் சேஞ்சர் – ஏமாற்றம்





