Spotlightவிமர்சனங்கள்

ஓ மை கடவுளே – விமர்சனம் 3.25/5

றிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அஷோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ளது ‘ஓ மை கடவுளே’ திரைப்படம்.

கதைப்படி,

அசோக் செல்வன், ரித்திகா சிங், மற்றும் சாரா மூவரும் சிறுவயதிலிருந்து நண்பர்கள். அசோக் செல்வனை ரித்திகாவிற்கு பிடித்து போக அசோக் செல்வனின் அரைகுறை சம்மதத்தோடு அவரை திருமணம் செய்து கொள்கிறார் ரித்திகா.

வேலையில்லாமல் இருக்கும் அசோக் செல்வனிற்கு தனது கம்பெனியிலேயே வேலை தருகிறார் ரித்திகாவின் அப்பா எம் எஸ் பாஸ்கர். ஏதோ கடமைக்கு அந்த வேலையை செய்து வந்தாலும், அசோக் செல்வனின் கனவு என்னவோ நடிகராக வருவது தான்.

ஒருநாள், தன் பள்ளி சீனிய வாணி போஜனை சந்திக்கிறார் அசோக் செல்வன்(சிறுவயது க்ரஷ்). வாணி போஜன் உதவி இயக்குனராக பணிபுரிவது அசோக் செல்வனுக்கு தெரியவர, தனது நடிகன் ஆசையை அவரிடம் கூறுகிறார்.

இவர்கள் இருவரும் நெருங்கி பழகுவதை கண்டு கோபம் கொள்ளும் ரித்திகா, அசோக் செல்வனிடம் கோபப்படுகிறார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் சண்டை பெரிதாக, முடிவு விவாகரத்திற்காக நீதிமன்றத்தில் சென்று நிற்கின்றனர் இருவரும்.

அச்சமயத்தில் தான், விஜய் சேதுபதி கடவுளாக வருகிறார்(நிஜமாகவே படத்தில் அவர் கடவுள் தான்). அசோக் செல்வனின் சோகக் கதை கேட்டு, சந்தோஷமாக வாழ அசோக் செல்வனுக்கு மற்றொரு வாய்ப்பை கொடுக்கிறார் விஜய் சேதுபது(கடவுள்).

அந்த வாழ்க்கை அவருக்கு கை கொடுத்ததா..?? ரித்திகாவின் நிலை என்ன..??? என்பதே படத்தின் மீதிக் கதை.

மிகவும் நேர்த்தியான கதையை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வரும், நாயகன் அசோக் செல்வன் இம்முறையும் அதையே பின்பற்றியுள்ளார். மற்ற படங்களை விட, இப்படத்தில் சற்று முன்னேறியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.

மிதமான நடிப்பு, இதமான காதல், அளவெடுத்து வைத்த காமெடி, என அனைத்தையும் கனகச்சிதமாக கொடுத்து அர்ஜுன் கதாபாத்திரத்தை படம் முழுவதும் நிலை நிறுத்தியிருக்கிறார் அசோக் செல்வன். சல்யூட் சார்.

அழகாக இருக்கிறார் ரித்திகா சிங். நூடுல்ஸ் மண்டைக்கு ஏற்ற ஒரு கதாபாத்திரம் தான். சினுங்கள், காதல் மொழி, கண் சிமிட்டல் என அனைத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார் ரித்திகா. ஆங்காங்கே லிப் சிங் ஒன்று சேராமல் இருப்பது சற்று நெருடல். மற்றபடி, இறுதி சுற்று படத்திற்கு பிறகு நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கிறார் ரித்திகா.

சின்னத்திரை நயன்தாரா என அழைக்கப்படும் வாணி போஜன் அவர்களுக்கு, முதல் வெள்ளித்திரை இப்படம் தான். ரித்திகாவிற்கு இணையான ஒரு கதாபாத்திரம் தான் வாணிக்கும். சிறப்பாக நடித்து கொடுத்திருக்கிறார். இன்னும் சற்று பயிற்சி வேண்டும் போல்….

சாராவின் காமெடி ஆங்காங்கே சிரிக்க வைக்கின்றன. விஜய் சேதுபதி கெஸ்ட் கதாபாத்திரத்திற்கு வந்து சென்று ரசிகர்களை ரசிக்க வைத்திருக்கிறார்.

தமிழ் சினிமாவில் காதலில் இனி எதை சொல்லிவிட முடியும் என நினைத்தவர்களுக்கு மிகவும் அழகான காதல் கதையை படைத்து அனைவருக்கும் விருந்து படைத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து.

ஒரு இடத்தில் கூட காதல் கோட்டினை தாண்டாமல், ஆங்காங்கே ரசிகர்களுக்கு தேவையான ஒரு சில கருத்துகளையும் (எம் எஸ் பாஸ்கரின் ப்ளாஷ் பேக்) தூவி விட்டு சென்றது ரசிகர்களிடம் இருந்து கைதட்டலை பெறுகிறார் இயக்குனர் .

லியோன் ஜேம்ஸ் இசையில், பாடல்கள் மனதில் நிற்கும் படியாக இல்லையென்றாலும் பின்னனி இசை காதலோடு வருடி பயணிக்க வைத்துள்ளது.

படத்தின் மிகப்பெரும் பலம் விது அய்யன்னாவின் ஒளிப்பதிவு தான். கலர்புல்…

பூபதி செல்வராஜின் எடிட்டிங் இன்னும் சிறுது வேலை செய்திருந்தால் அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் எளிதில் புரியும்படியான ஒரு ஓட்டத்தை கொடுத்திருக்க முடியும்… நூடுல்ஸ் பின்னிக் கொண்டது போல் இரண்டாம் பாதி கதை சற்று பின்னிக் கொண்டது ஏமாற்றமே..

மற்றபடி காதலர் தினத்தில் காதலர்கள் கொண்டாடக்கூடிய படமாக தான் வந்திருக்கிறது இந்த ‘ஓ மை கடவுளே’..

ஓ மை கடவுளே – காதலர்களால் கொண்டாடப்படும்…

Facebook Comments

Related Articles

Back to top button