
பொள்ளாச்சியில் 1000 ஏக்கர் நிலப்பரப்பிற்கு சொந்தக்காரராக வருகிறார் ஜெமீன் தம்பி ராமையா. ஒரு படம் ஹீரோவாக நடித்திருந்த நட்டியின் (குல்கந்த் குமார்) நடிப்பை மிகவும் ரசிக்கிறார் தம்பி ராமையா. வட மாநிலத்தைச் சேர்ந்தவராக வருகிறார் நட்டி.
அடுத்த எம் ஜி ஆர் நீங்கள் தான் என்று நட்டியை அளவுக்கு அதிகமாக தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகிறார். அவர் நடிக்கும் படங்களுக்கு தனது சொத்தை விற்று விற்று செலவு செய்து வருகிறார். தொடர்ச்சியாக அவரும் வளர்ந்து மிகப்பெரும் நட்சத்திரமாக உயர்ந்து நிற்கிறார்.
இந்நிலையில், தன்னை விரும்பும் ரசிகையையே திருமணமும் செய்து கொள்கிறார் நட்டி. இதனைத் தொடர்ந்து, தனது ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி அரசியலில் காலடி எடுத்து வைக்க நினைக்கிறார் நட்டி.

அதன்பிறகு ஆளுங்கட்சி அரசியல்வாதிகளால் நட்டிக்கு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
நிகழ்கால அரசியலை மையப்படுத்தி முழுப்படத்தையும் எடுத்திருக்கிறார் இயக்குனர் உமாபதி. ஒரு நடிகர், தனது நடிப்பு ஒன்றே போதும் என்ற மனக்கணக்கில் அரசியலுக்குள் வந்தால் அவர் என்ன மாதிரியான இன்னல்களை சந்திப்பார், அவர் எதையெல்லாம் எதிர் கொள்ள வேண்டும், வெறும் சினிமா முகம் மட்டுமே ஒரு மனிதனை அரசியலுக்குள் இழுத்து கொண்டு வந்துவிடுமா உள்ளிட்ட பல கேள்விகளுக்கு நறுக்கென்று விடை வைத்திருக்கிறார் இயக்குனரான உமாபதி.
கதையின் நாயகனான நட்டி நட்ராஜ், மிகவும் கச்சிதமாக குல்கந்த் குமார் என்ற கதாபாத்திரத்திற்கு பொருந்தியிருக்கிறார். அதிலும் அவர் பேசும் வட மாநில கலந்த தமிழ் பேச்சு அல்டிமேட்.. வசனங்கள் படத்தில் மிகப்பெரும் பங்காற்றியிருக்கின்றன.

தம்பி ராமையாவின் நடிப்பு படத்தில் அனுபவ நடிப்பை நன்றாகவே கொடுத்திருக்கிறது. எம் எஸ் பாஸ்கரின் வசன மொழி நம்மை சிரிப்பு வர வைக்கிறது. இரண்டாம் பாதியில் சற்றுசோதனை செய்தாலும், முதல் பாதியில் விழுந்து விழுந்து சிரிக்க வைத்துவிட்டார் இயக்குனர். படத்தில் வரும் கதாபாத்திரங்கள் நிஜத்தில் நாம் அன்றாடம் டிவிக்களிலும் இணையதளத்திலும் பார்க்கும் முகம் வந்து போனால் நிர்வாகம் பொறுப்பல்ல என்று படக்குழுவினர் முதலிலே கூறிவிட்டனர்.
இசை மற்றும் ஒளிப்பதிவு இரண்டுமே படத்திற்கு பெரிதாகவே கைகொடுத்திருக்கிறது. முழுக்க முழுக்க காமெடிக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இப்படத்தை குடும்பத்தோடு சென்று நன்றாகவே ரசிக்கலாம். இந்த வார விடுமுறையை திரையரங்கில் இந்த படத்தோடு கொண்டாட நாங்கள் கேரண்டி..
TN 2026 – கலகலப்புக்கு பஞ்சமில்லை..
ரேட்டிங் : 4/5






