
மாமன்னன் படத்திற்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் தான் வாழை.
இப்படத்தினை மாரி செல்வராஜ், டிஸ்னி ஹாட்ஸ்டாரோடு இணைந்து தயாரித்திருக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.
கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி, ஜே எஸ் கே, பொன்வேல், ஜானகி உள்ளிட்ட நடிகர்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.
பள்ளி சிறுவனான பொன்வேலை சுற்றி தான் கதை நகர்கிறது. 1990களில் நடக்கும்படியாக தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கதை பயணமாகிறது.
பொன்வேல் அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறார். படிப்பில் நம்பர் ஒன் ஆக விளங்கும் பொன்வேல், சேட்டை செய்வதிலும் நம்பர் ஒன் ஆக இருக்கிறார்.
பொன்வேலின் அக்காவாக திவ்யா துரைசாமியும் அம்மாவாக ஜானகியும் வருகிறார்கள்.
அக்கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் வாழைத் தார் சுமக்கும் கூலித் தொழிலாளியாக இருக்கின்றனர். தினசரி வரும் லாரியில் ஏறிச் சென்று அப்பகுதியில் சுற்றியிருக்கும் வாழைத் தோட்டத்தில் இருந்து வாழைத் தார்களை ஏற்றி சுமக்கும் தொழிலாளிகள் இவர்கள்.
அவர்களது வாழ்க்கை முறை மற்றும் வாழ்வியலை கொடுத்து சுமை தூக்கும் வலியை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் இயக்குனர்.

அதன்பிறகு, அக்கிராமத்தில் நடந்த ஒரு உண்மையான வலி நிறைந்த சம்பவத்தை மையப்படுத்தி கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
அது என்ன சம்பவம் என்பதே படத்தின் மீதிக் கதை.
ஒரு வாழ்வியலை ஒரு கிராமத்தோட வாழ்க்கையை வலியோடு கொண்டு வந்து சேர்த்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
பரியேறும் பெருமாள், கர்ணன் மற்றும் மாமன்னன் படங்களை காட்டிலும் 100 மடங்கு வேறு ஒரு தளத்திற்கு கொண்டு சென்று ஒரு வலி நிறைந்த உலகத்திற்குக் கொண்டு சென்று நம் இதயத்தில் இருந்து ரணத்தை வரவைத்து விட்டார் இயக்குனர்.
தமிழ் சினிமாவில் ஆகப்பெரும் இயக்குனராக உருவெடுத்து விட்டார் இயக்குனர் மாரி செல்வராஜ்.
சிவனைந்தாண் கதாபாத்திரமானது மிகவும் ஆழமானது வலுவானது. அதை உணர்ந்து தத்ரூபமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் பொன்வேல்., சிவனைந்தான் மற்றும் சேகர் இருவருக்குமான ரஜினி , கமல் சண்டை ரசிக்க வைத்தது.
இவருடன் சேகர் என்ற கதாபாத்திரமும் மிகவும் யதார்த்தமானது. இருவருக்குள்ளான நட்பு அனைவரையும் வெகுவாக கவரும்.
கலையரசனை தனது அக்கா திருமணம் செய்து கொள்ளும்படி கேட்கும் காட்சியானது மனதுக்கு உருக்கம்.. கலையரசனை பார்க்கும் போது அப்பாவை பார்த்த ஞாபகம் வருகிறது என்று சொல்லும் காட்சியில் கண்களில் ஈரம் கசிகிறது.

கலையரசனுக்காக மருதாணி கொடுப்பதும், சாப்பாடு கொடுப்பதுமான திவ்யா துரைசாமியின் காதல் பார்வை ரசணை தான்.
டீச்சர் நேத்து பார்க்கும் போது என் அம்மா மாதிரி அழகா இருந்தீங்க.. இன்னைக்கு என் அக்கா மாதிரி ரொம்ப அழகா இருக்கீங்க… இதுதான் சிவனைந்தான் டீச்சர் மீது வைத்திருந்த காதல்… கைதட்டல் பெற வைத்த காட்சி.
தன் மகன் சாப்பிட கூட இல்லையே என்று கதறி அழும் ஜானகி அம்மாவின் அழுகுரல் இன்னும் காதுகளில் ஓலமிட்டுக் கொண்டே இருக்கின்றன.
க்ளைமாக்ஸில் வைக்கப்பட்ட பாதவத்தி பாடல் ஒட்டுமொத்த இதயத்தை ரணமாக்கி விடுகிறது.
சந்தோஷ் நாராயணின் இசை படத்திற்கு மிகப்பெரும் பலம். அக்கிராம மக்களோடு நாமும் சேர்ந்து பயணித்த மாதிரியான ஒரு அனுபவத்தை கொடுத்ததில் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் பெரும் பங்கு வகித்திருக்கிறது.
படத்தின் கடைசி இருபது நிமிடம் வலியின் உச்சமாக கணத்த இதயத்தோடு அனைவரையும் வெளியே வர வைத்துவிட்டார் இயக்குனர் மாரி செல்வராஜ்.,
மண்ணோட படைப்பை மக்களுக்கான படைப்பை மணம் மாறாமல் வலியோடு படைத்து சாதனை படைத்திருக்கிறார் இயக்குனர்.
வாழை – இதயத்தின் வலி





