
இயக்குனர் வீரமுருகன் இயக்கத்தில் தீபா, அப்புக்குட்டி, சம்பத்ராம், காயத்ரி, சேரன் ராஜ், யாசர் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் கலன் .
இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜெர்சன். ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள் ஜெயக்குமார் மற்றும் ஜேகே.
கலை இயக்குநராக திலகராஜன் அம்பேத் அவர்களும் நடன இயக்குனராக வெரைட்டி பாலாவும் பணிபுரிந்திருக்கிறார்கள்.
படத்தொகுப்பை விக்னேஷ் வர்ணம் மற்றும் விநாயகம் இருவரும் இணைந்து செய்திருக்கிறார்கள்.
கதைக்குள் பயணித்துவிடலாம்…
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடக்கும் கதை தான் இந்த கலன். தாயின் அரவணைப்பில் வளர்கிறார் யாசர். யாசருக்கு பாசத்தோடு வீரத்தையும் கொடுத்து வளர்க்கிறார் தீபா.
தனதுமாமா அப்புக்குட்டி மீது அளவு கடந்த அன்பு வைத்திருக்கிறார் யாசர். அப்புக்குட்டியும் யாசர் மீது அன்பை வாரிக் கொடுக்கும் மாமாவாக இருக்கிறார்.
நண்பனுக்காக கஞ்சா தொழில் செய்யும் காயத்ரி மற்றும் சம்பத் ராம் இருவரையும் பகைத்துக் கொள்கிறார் யாசர். இதற்கு பழிவாங்கும் விதமாக யாசரை அவரது நண்பனின் உதவியோடு கொலை செய்கிறது காயத்ரி மற்றும் சம்பத் ராம் டீம்.
தனது மகனை கொன்றவர்களை பழி வாங்க தீபாவும் தனது மருமகனை கொன்றவர்களை பழிவாங்க அப்புக்குட்டியும் கிளம்புகிறார்கள்.
அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.
வெட்டுடையார் காளியாக தீபா நடித்திருக்கிறார். தனது கேரக்டரை வலுவாக செய்திருக்கிறார். மகனை இழந்த தாய் கதறி அழும் காட்சிகளில் நம் கண்களில் ஈரம் எட்டிப் பார்க்க வைத்துவிடுகிறார் தீபா.
மருமகனை இழந்த அப்புக்குட்டியும் தனது வலியை திரைகளில் நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார்.
இன்ஸ்பெக்டராக வரும் சரண் ராஜ், முதல் பாதியில் வில்லனாகவும் இரண்டாம் பாதி இறுதியில் ஹீரோவாகவும் மாற்றப்பட்டிருக்கிறார். இந்த கதாபாத்திரத்தால் படத்தின் கதைக்கு எந்த விதத்திலும் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை.
மருமகன் கொல்லப்பட்டதும் காணாமல் சென்ற அப்புக்குட்டி, கடைசியாக ஒருவரை கொலை செய்யும் போது மட்டும் வந்து செல்வது ஏற்புடையதாக இல்லை. சிறையில் அடைக்கப்பட்ட தீபாவின் நிலை என்பதையும் அந்தரத்தில் விட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
குறிப்பிட்ட சமுதாயத்தின் ஜாதி பெருமைகளை தூக்கிப் பிடித்திருக்கிறது இந்த கலன். அது என்ன ஜாதியென்று படம் முழுக்க வரும் போஸ்டர்கள் அடையாளப்படுத்திருக்கின்றன.
வெட்டுடையார் காளி குறித்து வந்த பாடல் ரசிக்க வைத்தன. பின்னணி இசையும் படத்தின் ஓட்டத்திற்கு கைகொடுத்திருக்கிறது.
ஒளிப்பதிவு காட்சிகளை வேகப்படுத்தியிருக்கிறது. படத்தொகுப்பும் ஷார்ப்பாக இருக்கிறது.
கலன் – வெட்டுக்கு வெட்டு..





