
ஆஷிக்மெர்லின், சந்தனா அரவிந்த், அமல் ரவீந்திரன், அருணிமா, ஹரீஷ், சிவப்பிரகாசம், செல்வா, உல்லாஷ் சங்கர் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உல்லாஷ் சங்கர் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் செய்திருக்கும் படம் தான் ”1982 அன்பரசின் காதல்”
கதைப்படி,
ஆஷிக் மெர்லின் மற்றும் சந்தனா இருவரும் கல்லூரியில் ஒன்றாக படிப்பை முடித்து விட்டு தனது சொந்த ஊரான போடி நாயக்கனூருக்கு வருகிறார்கள். ஆஷிக் மெர்லின் சந்தனாவை ஒரு தலையாக காதலிக்கிறார். தனது காதலை சந்தனாவிடம் கூற முற்பட்டு முற்பட்டு அது தோல்வியில் முடிகிறது.
இந்நிலையில், சந்தனா தன்னை பைக்கில் ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்ல ஆஷிக்கிடம் கேட்கிறார். அவரும் ஓகே சொல்லி, செல்லும் இடத்தில் தனது காதலை எப்படியாவது சந்தனாவிடம் கூறிவிட முடிவு செய்கிறார்.
கேரள எல்லைப்பகுதியை ஓட்டி மலைப்பகுதியில் இவர்கள் இருவரும் பைக்கில் செல்கின்றனர். செல்லும் வழியில் பைக் ரிப்பேர் ஆகிவிட, ஒரு சில கள்வர்களிடம் சிக்கிக் கொள்கிறார்கள் இருவரும். அப்போது அங்கு வரும் உல்லாஷ் சங்கர் இருவரையும் காப்பாற்றி தன்னுடைய இடத்திற்கு அழைத்துச் செல்கிறார்.
அங்கு, உல்லாஷ் சங்கரின் நடவடிக்கையை பார்த்து பயந்து இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கின்றனர். உல்லாஷ் சங்கர் அவர்களை விடாது துரத்துகிறார்.
இறுதியாக, உல்லாஷ் சங்கர் ஏன் அப்படி நடந்து கொண்டார்.? ஆஷிக் தனது காதலை சந்தனாவிடம் தெரிவித்தாரா.?? என்பதே படத்தின் மீதிக் கதை.
நாயகனான ஆஷிக், மிகவும் யதார்த்தமான நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார். நாயகியான சந்தனா, பார்ப்பதற்கு அழகாகவும் தனது காட்சியை அசத்தலாகவும் கொடுத்திருக்கிறார். இருந்தாலும் நடிப்பில் இன்னும் சற்று பயிற்சி எடுத்திருந்திருக்கலாம்.
ஆஷிக் காதல் ஓகே ஆகும் இடம் எந்த தமிழ் சினிமாவிலும் காட்டாத ஒரு இடம் தான். இரண்டாவது நாயகியாக தனது கண்களால் ரசிகர்களை கட்டிப் போட்டவர் நாயகி அருணிமா. நடிப்பாலும் அழகாலும் மிகவும் கவர்கிறார்.
காதல் கலந்த த்ரில்லர் கதையாக இருந்தாலும், கதை மீதான சுவாரஸ்யம் பெரிதாக இல்லாததால் படத்தின் ஓட்டத்தின் மீது சற்று சலிப்பு ஏற்பட்டு விடுகிறது.
உல்லாஷ் சங்கரை பார்த்ததும் ஓடிக் கொண்டே இருப்பதும் கதையோடு ஒட்டாத காட்சிகளும் படத்தில் ஆங்காங்கே தென்பட்டதால் படத்தின் மீதான வெறுப்பு சற்று அதிகம் தான்.
இசை மற்று ஒளிப்பதிவு ஓகே ரகம் தான்.
திரைக்கதையில் இன்னும் சற்று மெனக்கெடல் செய்திருக்கலாமோ என்று தோன்றியது.
1982 அன்பரசின் காதல் – அலைக்கழித்த காதல் கதை..