Spotlightசினிமா

‘கங்குவா’ நஷ்டம்: சம்பளத்தை கேட்காத சிறுத்தை சிவா !

‘கங்குவா’ திரைப்படம் வெளியாகும் முன்பே பல்வேறு சவால்களை எதிர்கொண்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அந்தப் படம் தொடர்பாக இயக்குநர் சிறுத்தை சிவா, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் (DSP), நடிகர் சூர்யா ஆகியோரின் தியாகம் குறித்து தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.

வெளியான தகவல்களின் படி, ‘கங்குவா’ படத்திற்காக ஒப்பந்தமான இயக்குநர் சிறுத்தை சிவாவின் சம்பளத்தில் சுமார் 50 முதல் 60 சதவீதம் வரை தயாரிப்பாளரால் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

படம் வெளியாவதற்கு முன்பே தயாரிப்பாளர் பல்வேறு பொருளாதார சிக்கல்களை சந்தித்ததாகவும், நீதிமன்ற வழக்குகள் உள்ளிட்ட பல பிரச்சினைகள் காரணமாக கடும் நெருக்கடியில் இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூழ்நிலையை நேரடியாக பார்த்த சிறுத்தை சிவா, மீதமுள்ள சம்பளத்தை கேட்டு எந்தவித அழுத்தமும் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. அவர் விரும்பியிருந்தால் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடவோ, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கவோ, நீதிமன்றத்தை நாடவோ முடியும். ஆனால் தயாரிப்பாளர் சந்தித்த சிரமங்களை புரிந்துகொண்டு அப்படியான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் செய்யாமல் பெரும் நஷ்டத்தை சந்தித்ததால், தயாரிப்பாளரே அதிகமாக பாதிக்கப்பட்டதாக சிறுத்தை சிவா தற்போது கூட கருதுவதாக கூறப்படுகிறது.

இப்படம் மிகப்பெரிய வசூல் வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையுடனேயே அனைவரும் பணியாற்றியதாகவும், இன்னும் தரமான படைப்பை ரசிகர்களுக்கு வழங்கியிருக்கலாம் என்ற எண்ணமும் இயக்குநரிடம் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் (DSP) தனது சம்பளத்தில் சுமார் 50 சதவீதத்தை விட்டுக்கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

அதேபோல், கதாநாயகன் சூர்யா, ‘கங்குவா’ திரைப்படத்திற்காக சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக முழுமையான அர்ப்பணிப்புடன் உழைத்ததுடன், தனிப்பட்ட முறையிலும் பல கோடி ரூபாய் அளவிலான இழப்பை சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘கங்குவா’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கையுடன் படக்குழுவினர் பணியாற்றியிருந்தாலும், எதிர்பார்த்த வர்த்தக வெற்றியை படம் பெறாததால் பலருக்கும் பொருளாதார ரீதியாக பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button