
விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் `பிகில்’ பட இசை வெளியீட்டு நிகழ்ச்சி தாம்பரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
விஜய் இதில் பேனருக்கு பலியான சுபஶ்ரீ மரணம் முதல் தன் ரசிகர்கள் மீதான அடக்குமுறை வரை பேசியதுதான் அரசியல் அரங்கில் விவாத பொருளாக மாறி இருக்கிறது.
விஜய் பேச்சுக்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகின்றன. குறிப்பாக அ.தி.மு.க. வை சேர்ந்தவர்கள் விஜய்க்கு எதிரான விமர்சனங்களை கூறி வருகின்றனர்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா.வளர்மதி தனியார் இணையதளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ’தங்கள் படம் வெளியாகும் போது எல்லாம், சர்ச்சையாக பேசி விளம்பரம் தேடுவது நடிகர்களுக்கு வழக்கமாகிவிட்டது. சுபஶ்ரீ இறந்தது அனைவருக்கும் வருத்தமான விஷயம்.
சம்பந்தப்பட்ட முன்னாள் கவுன்சிலர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இதில் அரசியல் செய்வதற்கு என்ன இருக்கிறது? ஆளுங்கட்சியை விமர்சித்தால் விளம்பரம் தேடிக்கொள்ளலாம் என்பதால் நடிகர் விஜய் இந்த விவகாரத்தில் தேவையற்ற கருத்துகளைப் பேசுகிறார்.
இதே பேனரை எதிர்க்கட்சியினர் வைத்திருந்து, விபத்து நேர்ந்திருந்தால், விஜய் இப்படிப் பேசியிருப்பாரா? ஆளுங்கட்சியை விமர்சிப்பதன் மூலம் தன் படத்துக்கு விஜய் விளம்பரம் தேடிக்,கொள்கிறார். இதில் அரசியல் செய்வது நல்லதல்ல” என்று கூறி இருக்கிறார்.