ப.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த நடிக்கும் ‘காலா’ திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் மிகப் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இவ்விழாவில் ரஜினிகாந்த் பேசியதன் சுருக்கமான விவரம் வருமாறு:
‘‘இது ஆடியோ வெளியீட்டு விழா மாதிரி தெரியவில்லை. படத்தின் வெற்றிவிழா மாதிரி தான் தெரிகிறது. நான் ‘சிவாஜி’ படத்தின் வெற்றி விழாவில் தான் கடைசியாக பங்கேற்றேன். அதன் பிறகு ‘எந்திரன்’ படத்தின் வெற்றிவிழா கொண்டாட நினைக்கும்போது எனக்கு உடல் நலம் சரியில்லாமல் பொய் விட்டது.
சிங்கப்பூர் சென்றேன். உங்களின் வேண்டுதலால மீண்டு வந்தேன். சிங்கப்பூரில் சிகிச்சை பெறும்போது டாக்டர்கள் உடல் நன்றாக இருக்க வேண்டும் என்றால் மனதும் நன்றாக இருக்க வேண்டும். உங்களுக்குப் பிடித்ததை செய்யுங்கள்’ என்று அறிவுறுத்தினார்கள். எனக்கு தெரிந்தது நடிப்புதான்! அதனால் ‘ராணா’ படத்தில் ஏழெட்டு நாட்கள் நடித்தேன்.
பிறகு எனக்கு உடல்நலம் இல்லாமல் போனது. படம் கைவிடப்பட்டு அந்த கதையை சிறிது மாற்றி ‘கோச்சடையான்’ படமாக என் மகள் சௌந்தர்யா இயக்க முடிவானது. ‘கோச்சடையானு’ம் எதிர்பார்த்த அளவுக்கு போகவில்லை!
அதன் பிறகு கே.எஸ்.ரவிகுமாரை கூப்பிட்டு ஒரு படம் பண்ணாலாம் என்றேன். ‘லிங்கா’ கதை எனக்கு பிடித்திருந்தது. 65 வயதான நான் 35 வயது ஹீரோ மாதிரி, 45 வயதுகாரனா ஹீரோவாக நடிக்கலாமா, ஆனால் என் மகள் வயதுடைய சோனாக்ஷி சின்ஹாவுடன் யூயட் பாடி நடித்தது சரியில்லை. அதனால் இனிமேல் இது மாதிரி வேண்டாம் என்று முடிவு செய்தேன்.
‘லிங்கா’ கதை கேட்டதும் நடிக்க காரணம், தண்ணீர் பஞ்சம், நதி என்று சொன்னாலே என்னை அறியாமல் அதில் ஈடுப்பாடு வந்து விடும். நதிகள் இணைப்பு என்பது என் வாழ்க்கையில் இணைந்த ஒன்று! என் வாழ்க்கையின் கனவு தென்னிந்திய நதிகளை இணைக்க வேண்டும் என்பதுதான்! நதிகளை இணைத்த பின்பு அடுத்த நாளே எனது உயிர் பிரிந்தாலும் நான் அதை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வேன்.
லிங்கா படமும் நினைத்த அளவுக்கு போகவில்லை. அந்த படத்தின் மூலம் ஒரு விஷயத்தை தெரிந்துகொண்டேன். நல்லவனாக இருக்கணும். ஆனா ரொமபவும் நல்லவனாக இருக்க கூடாது என்று! ரொம்ப நல்லவனாக இருந்தால் ஆபத்து! கோழைன்னு நினைத்து விடுவார்கள். லிங்கா ஓடவில்லை என்றதும் ரஜினி கதை முடிந்து விட்டது என்றார்கள்! இதைதான் 40 வருடமாக சொல்லி கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் என்னை ஓட வச்சிருக்கீங்க, ஆண்டவன் ஓட வைத்துள்ளான்!
அதற்கு பிறகு என் மகள் சௌந்தர்யா இயக்குனர் ரஞ்சித் பற்றி கூறி கதை கேட்க சொன்னார். டான் கதை வேண்டாம் என்று அதில் நடிக்க மறுத்தேன். ஆனால் மலேசியா பின்னணி கதை என்று ரஞ்சித் கதையை விளக்கி கூற ‘கபாலி’யில் நடிக்க சம்மதித்தேன். நான் இத்தனை வருடம் நடித்ததில் 2 வில்லன்களை பார்த்திருக்கிறேன். ‘பாட்ஷா’வில் ஆண்டனி (ரகுவரன்), ‘படையப்பா’வில் நீலாம்பரி (ரம்யா கிருஷ்ணன்). அதன் தொடர்ச்சியாக இப்போது ‘காலா’வில் ஹரிதாதா ( நானா படேகர்). இந்த படம் (காலா) அருமையான படமாக இருக்கும். வெற்றி அடையும். ‘காலா’ அரசியல் படம் அல்ல! ஆனால் படத்தில் அரசியலும் இருக்கு. தமிழகத்திற்கு ஒரு நல்ல விடிவு விரைவில் காத்திருக்கிறது. காத்திருங்கள்’’ என்றார் ரஜினி!