
அறிமுக இயக்குனர்கள் ஆர்.விஜயானந்த் – ஏ.ஆர்.சூரியன் இயக்கத்தில் அறிமுக நாயகன் வசி நடிக்க, நாயகியாக பூஜாஸ்ரீ நடிக்க உருவாகியிருக்கும் படம் தான் ‘தவம்’.
கதைப்படி,
நாயகன் வசி காரைக்குடியில், டூரிஸ்ட் கைடாக வேலை பார்த்து வருகிறார். காரைக்குடிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு அந்த ஊரின் அழகையும் பெருமையையும் கூறுகிறார்.
இந்நிலையில், சென்னையில் இருந்து திருமணம் ஒன்றிற்காக காரைக்குடி வரும் நாயகி பூஜாஸ்ரீ வசி மீது காதல் வயப்படுகிறார். வசியும் பூஜாஸ்ரீ மீது காதல் கொள்கிறார்.
இந்நிலையில், ஊரில் கட்டப்பஞ்சாயத்து, கொலை என செய்து வருபவர் தான் விஜய் ஆனந்த் (சிவன்னன்). அப்படியாக விஜய் ஆனந்த் ஒருவரை கொலை செய்ததை பார்த்த பூஜாஸ்ரீ போலீஸில் புகார் அளிக்கிறார். இதனால், கைதாகும் விஜய் ஆனந்த், ஜெயிலில் இருந்து தப்பிச் செல்கிறார். தன்னை காட்டிக் கொடுத்த பூஜாஸ்ரீயை கொல்ல வருகிறார் விஜய் ஆனந்த். இதனால் அவரை எதிர்க்கிறார் வசி. இருவரையும் தீர்த்துக் கட்ட நினைக்கிறார் விஜய் ஆனந்த்.
இறுதியில், விஜய் ஆனந்திடம் இருந்து வசி – பூஜா ஸ்ரீ தப்பித்தார்களா..?? வசி யார்..?? என்பதற்கான பதிலை இரண்டாம் பாதியில் வைத்திருக்கிறார்கள் இயக்குனர்கள்…
அறிமுக நாயகன் வசி, கதைக்கான கதாபாத்திரமாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். ஒரு கிராமத்து கதாநாயகனாக வந்து நின்று நடனம், காமெடி, ரொமான்ஸ், ஆக்ஷன் என அனைத்திலும் தனக்கான பணியை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். அனுபவ நாயகன் போல் நடித்து அனைவரையும் பிரம்மிக்க வைத்திருக்கிறார்.
வசியின் தந்தையாக வரும் சீமான், தனது கேரக்டரை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார். விவசாயியியாக வாழ்ந்து காட்டியிருக்கிறார். நாளை உலகமே விவசாயத்தை நம்பிதான் இருக்கிறது என்பதை தெள்ளத் தெளிவாக சாட்டை அடித்து காண்பித்திருக்கிறார் சீமான். இவரது கதாபாத்திரம் படத்திற்கு சற்று பலம் சேர்த்திருக்கிறது.
நாயகி பூஜா ஸ்ரீ அழகாக வந்து தனது கேரக்டரை பூர்த்தி செய்திருக்கிறார். ஆங்காங்கே பூஜா ஸ்ரீ வரும் ஒரு சில காட்சிகளில் இளைஞர்களின் ஒரு நாள் தூக்கத்தை தொலைக்காமல் இருக்க மாட்டார். (ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்…..)
வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இயக்குனர் விஜய் ஆனந்த் இன்னும் சற்று தனது கதாபாத்திரத்தை செதுக்கியிருக்கலாம். மற்றொரு இயக்குனர் சூரியனும் தனது காமெடி கதாபாத்திரத்தை கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
காமெடி செய்ய முயற்சித்து ஒரு இடத்தில் கூட சிரிப்பு கொண்டு வராமல் போனது படத்திற்கு மிகப்பெரும் பின்னடைவு தான்.
நல்ல ஒரு கதை எடுத்து, அதை கொண்டு செல்லும் விதத்தில் இயக்குனர்கள் சற்று சறுக்கியிருக்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
ஸ்ரீ காந்த் தேவா’வின் இசையில் பாடல்கள் ஓகே ரகம்.. பின்னனி இசை கதையோடு சேர்ந்த ஒரு பயணம்.
வேல்முருகனின் ஒளிப்பதிவு காரைக்குடியை அழகாக காட்டியிருந்தாலும், சண்டைக் காட்சிகளில் கவனம் செலுத்தாமல் சென்று விட்டார்.
எஸ் பி அகமது இன்னும் கொஞ்சம் தனது கத்தியை(எடிட்டிங்) படத்தின் மீது போட்டிருக்கலாம்.
விவசாயத்தின் பெருமையை போற்றியதற்காக மட்டுமே தவத்தை பாராட்டலாம்.





