
விஜய் அவர்களின் இயக்கத்தில் மதும்கேஷ், ஜியா சங்கர், அர்ஜுன் அசோகன், எம். எஸ். பாஸ்கர் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் இந்த காதல் ரீசெட் ரிப்பீட்.
கதை – மகாதேவ் & விஜய், திரைக்கதை – ஏ. மகாதேவ், வசனம் – இயக்குநர் விஜய்
தயாரிப்பு – டி ஸ்டூடியோஸ், சன்னி டென்வி (டென்வி புரொடக்ஷன்), இணை தயாரிப்பு – பிரபா பிரேம்குமார்
இசை – ஹாரிஸ் ஜெயராஜ், ஒளிப்பதிவு – அரவிந்த் கிருஷ்ணா, எடிட்டிங் – ஆன்டனி
இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ஸ்காட்லாந்த் வந்த ஜியா, மலை உச்சியில் இருந்து தற்கொலை செய்வதற்காக கீழே குதிக்கிறார். கீழே குதித்த ஜியாவை காப்பாற்றுகிறார் நாயகன் மதும்கேஷ்.
கீழே விழுந்ததில் அவருக்கு ஆன்டோகிரட் அம்னீசியா ஏற்பட்டு விடுகிறது.. ஆன்டோகிரட் அம்னீசியா (Anterograde amnesia) என்பது மூளையில் ஏற்படும் காயம் அல்லது பாதிப்பிற்குப் பிறகு, புதிய நினைவுகளை உருவாக்கவோ அல்லது தகவல்களைத் தக்கவைக்கவோ முடியாத ஒரு நரம்பியல் கோளாறு ஆகும்..

நடந்தது எதுவும் ஞாபகம் இல்லாமல் போகிறது. காலையில் அனைத்தையும் புதிதாக கேட்க, இரவு தூங்கி எழுந்ததும் மீண்டும் அனைத்தையும் மறந்து விடுகிறார்.
நாயகன் மதும்கேஷும் எம் எஸ் பாஸ்கரும் அவர் யார் என்பதை தினசரி காலை கூறிக் கொண்டே இருக்கின்றனர். அதன் பிறகு, தான் யார் ஜியாவிற்கு தனக்கும் என்ன சம்மந்தம் எதற்காக சென்னையிலிருந்து ஸ்காட்லாந்து வந்தோம் என்பதை எம் எஸ் பாஸ்கரிடம் கூறுகிறார் மதும்கேஷ்.
நாயகி ஜியாவிற்கு தெரியாமல் சிறு வயதிலிருந்தே அவரை பின் தொடர்ந்து ஒரு தலை காதலில் இருக்கிறார் மதும்கேஷ். வாழ்க்கையில் மிகப்பெரும் பாடகியாக வர வேண்டும், இசையில் பெரிய இடத்திற்குச் செல்ல வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார் ஜியா. அதுமட்டுமல்லாமல், அவர் இருக்கும் இசைக்குழுவில் முக்கியமான நபராக இருக்கும் அர்ஜுன் அசோகனை காதலிக்கிறார் ஜியா. அர்ஜுனும் ஜியாவை காதலிக்கிறார்.
ஜியாவை நல்ல ஒரு இடத்தில் திருமணம் முடித்து வைக்க அவரது தந்தை ஏற்பாடு செய்யும் நேரத்தில், தனது கனவான ஸ்காட்லாந்தில் பாடவேண்டும் என்பதற்கான ஆஃபர் ஜியாவை தேடி வர, திருமணத்தை நிறுத்திவிட்டு ஸ்காட்லாந்த் செல்கிறார் ஜியா. அங்கு, ஜியாவின் காதலன் அர்ஜுன், வேறு ஒரு பெண்ணை காதலிக்கும் விஷயம் ஜியாவிற்கு தெரிய வர, தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து மலைஉச்சியிலிருந்து குதிக்கிறார். ஜியாவை காப்பாற்றி விடுகிறார் மதும்கேஷ்.

கடைசியாக, ஜியாவிற்கு நினைவு திரும்பியதா.? மதும்கேஷின் ஒரு தலை காதல் என்னவானது உள்ளிட்ட கேள்விகளுக்கெல்லாம் இரண்டாம் பாதியில் விடை வைத்திருக்கிறார் இயக்குனர்.
கதையின் நாயகனாக மதும்கேஷ், கதாபாத்திரத்திற்கு என்ன தேவையோ அப்படியே வாழ்ந்திருக்கிறார். முதல் படம் என்பதாலோ என்னவோ ஒரு சில இடங்களில் இன்னமும் நன்றாகவே நடித்திருக்கலாமே என்றும் கூற வைத்து விட்டார். காதலுக்காக ஏங்கும் காட்சிகளில் நன்றாகவே நடித்திருக்கிறார்.
நாயகி ஜியா, அழகோடு சேர்ந்து நடிப்பிலும் நன்றாகவே ஜொலித்திருக்கிறார். பார்ப்பதற்கு முன்னணி நடிகை ஒருவரின் முகச்சாயல் இருந்தாலும், அவரது நடிப்பைப் போலவே இவரும் தனது நடிப்பில் நல்லதொரு முதிர்ச்சி இருப்பதால், தமிழ் சினிமாவில் நிச்சயம் நல்லதொரு ரவுண்ட் வருவார் என்று அடித்துக் கூறலாம்.
மலையாள நடிகரான அர்ஜுன் அசோகன் நல்லதொரு கேரக்டரை ஏற்று நடித்திருக்கிறார். எம் எஸ் பாஸ்கர் அவர்களுக்கு வேறு விக்’கே கிடைக்கவில்லையா.? சுத்தமாக செட் ஆகவில்லை.
கதையானது பழைய படங்கள் பல காட்சிகளை ஞாபகப்படுத்தினாலும், காதல் கதை தானே என்று கடந்து போக வைத்திருக்கிறார் இயக்குனர் விஜய். இது விஜய் படம் தானா பல இடங்களில் உயிரோட்டமே இல்லாதது போன்று இருக்கிறதே என்று கூற வைக்கும் அளவிற்கான திரைக்கதையை கொடுத்து ரசிகர்கள் சிலரை ஏமாற்றி விட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.
விஜய் படம் என்றாலே உயிரோட்டம் கொண்ட ஒரு கதை இருக்கும், அது இந்த படத்தில் இல்லையே என்று படம் பார்த்த அனைவரும் கூறிவிட்டனர். அதிலும் க்ளைமாக்ஸ் மிகவும் செயற்கைத் தனமாக இருந்தது.
நாயகியின் அழகுக்கும் நடிப்பிற்கும் காதலுக்காகவும் நிச்சயம் ஒரு முறை இந்த படத்தை விசிட் அடித்துவிடலாம்.
ஹாரீஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் நன்றாகவே கைகொடுத்திருக்கிறது. பின்னணி இசை கதையோடு நகர்ந்து ரசிக்க வைத்திருக்கிறது.
ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. ஸ்காட்லாந்தை இவ்வளவு அழகோடு எந்த படத்திலும் காட்டியதில்லை.





