
ரங்கோலி என்ற படத்தை இயக்கிய இயக்குனர் வாலி மோகன் தாஸ், அவர்களின் இயக்கத்தில் ஷேன் நிகாம், கலையரசன், நிகாரிகா, ஐஸ்வர்யா தத்தா, கருணாஸ், பாண்டியராஜன், சூப்பர் சுப்புராயன், சரண், கீதா கைலாசம் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் ”மெட்ராஸ்காரன்”.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் பிரசன்னா குமார். இசையமைத்திருக்கிறார் சாம் சி எஸ். படத்தொகுப்பு செய்திருக்கிறார் வசந்தகுமார்.
எஸ் ஆர் ப்ரோடக்ஷன்ஸ் சார்பில் ஜெகதீஷ் இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்.
கதைக்குள் பயணித்து விடலாம்…
சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த இளைஞரான ஷேன் நிகாம் தனது காதல் திருமணத்தை புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் சொந்த பந்தங்கள் சூழ மிகவும் பிரமாண்டமாக நடத்த திட்டமிடுகிறார்.
அதற்கான வேலைகளையும் செய்து வருகிறார்கள் அவரது உறவினர்கள். திருமணத்திற்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ள நிலையில், ஹோட்டலில் தங்கியிருக்கும் தனது காதலியான நிகாரிகாவை சந்திக்க கார் எடுத்து புறப்படுகிறார் ஷேன் நிகாம்.
செல்லும் வழியில், நிறை மாத கர்ப்பிணியான ஐஸ்வர்யா மீது கார் மோதிவிட, அவரை கிராமத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கிறார் ஷேன்.
ஊரில் நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக அரிவாள் தூக்கும் கோபக்காரரான கலையரசனின் மனைவி தான் இந்த ஐஸ்வர்யா தத்தா. பல ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்த இவர்களுக்கு, முதல் குழந்தை சீக்கிரமாக பிறக்க போகிறது என்ற மகிழ்ச்சியில் இருந்த கலையரசனுக்கு இது பெரிய அதிர்ச்சியாகிவிடுகிறது.
கலையரசனும் அவரது மச்சானாக வரும் சரணும் இருவரும் சேர்ந்து ஷேன் நிகாமை கடுமையாக தாக்குகின்றனர். இந்த சம்பவத்தால் ஷேன் நிகாமின் திருமணம் நின்று விடுகிறது.
இதன் பிறகு ஷேன் நிகாமின்ன் வாழ்க்கையில் என்ன நடக்கிறது என்பதை படத்தின் மீதி கதை.

நாயகன்ஷேன் நிகாம் கதைக்கேற்ற கதாநாயகனாக ஜொலித்திருக்கிறார். பல இடங்களில் நன்றாகவே ஸ்கோரும் செய்திருக்கிறார். சத்யா என்ற தனது கேரக்டரை நன்றாகவே உள்வாங்கி அக்கதாபத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். குறிப்பாக தந்தையை நினைத்து செருப்பை கட்டிப்பிடித்து அழும் காட்சிகளில் கண்களில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைத்து விடுகிறார்.
கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியிலும் கண்களை கலங்க வைக்கிறார். என்ன தான் கதாபாத்திரத்தை பூர்த்தி செய்து இருந்தாலும் தனது மலையாளம் கலந்த தமிழ் உச்சரிப்பு படத்தின் கேரக்டரை ஒட்டுமொத்தமாக சிதைத்து விட்டது என்பது தான் உண்மை..
நாயகியான நிகாரிகா, பெரிதான ஒரு கேரக்டர் கொடுக்கப்படவில்லை. இருந்தாலும் வரும் காட்சிகளில் உயிரோட்டமாக நடித்திருக்கிறார். குறிப்பாக பாடலில் நன்றாகவெ ஸ்கோர் செய்திருக்கிறார் நிகாரிகா.
கதாநாயகனுக்கு சரிசமமான கதாபாத்திரமான சிங்கம் கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார் நடிகர் கலையரசன். மிகவும் கோபம் கொண்ட மனிதராகவும், தனது மனைவிக்கு நல்லதொரு இல்லத்தரசனாகவும் இருப்பது முதற்கொண்டு தனது கேரக்டரை நன்றாகவே பூர்த்தி செய்திருக்கிறார். இருந்தாலும், ஊரில் ஒரு பெரிய தலைக்கட்டாக இருக்கும் ரெளடியை கொன்று அடுத்தநாளே சர்வ சாதாரணமாக பேருந்தில் வந்து இறங்கும் தனது கேரக்டர் மீது இயக்குனரை நோக்கி கலையரசன் கேள்வி எழுப்பியிருந்திருக்கலாம்.
சீனியர் நடிகரான பாண்டியராஜனுக்கு இன்னும் நன்றாகவே ஸ்கோர் செய்ய இடம் கொடுத்திருக்கலாம். சொந்த பந்தம் ஆரம்பத்தில் வேறுன்றி நின்றாலும், போக போக சொந்த பந்தத்தை படத்தில் கொண்டு வராமல் போனது ஏன் என்று தெரியவில்லை.?
முதுகில் வெட்டுக்காயம் வாங்கிய கருணாஸ் அடுத்த காட்சியிலேயே சாதாரணமாக வந்து செல்கிறார். மிகப்பெரும் ரெளடியாக காட்டப்பட்ட மணிமாறன் என்ற கதாபாத்திரத்தை வீணடித்திருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் படுவேகமாக நகரும் காட்சிகளுக்குள் நம்மை பயணப்பட வைத்த மெட்ராஸ்காரன், இரண்டாம் பாதியில் நமக்கு வந்த சோதனையா என்று நமக்குள் கேள்விகளை எழ வைத்து விட்டார் இயக்குனர்.
சாம் சி எஸ் அவர்களின் இசையில், படத்தின் ஆரம்ப பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பின்னணி இசை நம்மை நன்றாகவே ரசிக்க வைத்தாலும், ஒரு சில இடங்களில் வந்த இரைச்சலை கவனித்திருந்திருக்கலாமே என்று கூற வைத்து விட்டார் இசையமைப்பாளர். அதிலும், இண்டர்வெல் காட்சிகளில் இசையை நன்றாகவே குறைத்திருக்கலாம்.
சண்டைக் காட்சியில் ஒளிப்பதிவில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருந்திருக்கலாம். பாடல்களில் கலர்ஃபுல்லாக காட்சிப்பதிவை கொடுத்திருக்கிறார் இயக்குனர்.



