Spotlightவிமர்சனங்கள்

வெள்ளக்குதிர – விமர்சனம் 3.25/5

நடிகர்கள்: ஹரீஷ் ஓரி, அபிராமி போஸ்,

எழுத்து & இயக்கம்: சரண்ராஜ் செந்தில் குமார்

இசை – பரத் ஆசிகவன்

ஒளிப்பதிவு – ராம் தேவ்

தயாரிப்பு – ஹரீஷ் ஓரி

தயாரிப்பு நிறுவனம் – நிஜம் சினிமா

படத்தொகுப்பு – பிரதீப் & சரண்ராஜ் செந்தில்குமார்

வசனம் – ஆனந்தன் & சரண்ராஜ் செந்தில்குமார்

கதைப்படி,

கதையின் நாயகனான ஹரீஷ் ஓரி, இருக்கும் ஊரில் ஒரு சம்பவத்தை செய்துவிட்டு, அன்றிரவே அந்த ஊரை காலி செய்து சுமார் 15 கி.மீ. மலையின் உச்சத்தில் இருக்கும் மலைகிராமத்திற்கு தனது மனைவி மற்றும் மகனோடு செல்கிறார். இனி தான் திருந்தி வாழ்வதாகவும் எந்த ஒரு பிரச்சனைக்கும் செல்ல மாட்டேன் என்றும் தனது மனைவியிடம் சத்தியம் செய்து கொள்கிறார் ஹரீஷ் ஓரி.

தனது பூர்விக கிராமம் அதுதான் என்று அந்த மலைகிராமத்திற்கு வந்துவிடுகிறார். சுமார் 400 வீடுகளுக்கு மேல் இருந்த அக்கிராமத்தில், போதிய அத்தியாவசியா தேவைகள் கிடைக்காத காரணத்தால் பலரும் மலையிலிருந்து கீழிறங்கி விடுகின்றனர். இதனால், 40 குடும்பம் மட்டுமே அக்கிராமத்தில் வசித்து வருகிறது.

அந்த கிராமத்தில் புதிதாக வந்து சேர்ந்து கொள்கிறார் ஹரீஷ் ஓரி மற்றும் அவரது மனைவி அபிராமி போஸ் மற்றும் இவர்களது மகன்.

யாரும் பெரிதாக படிப்பறிவு இல்லாத காரணத்தால், அங்கிருக்கும் விவசாய இடங்களை ஏமாற்றி அபகரித்துக் கொண்டு அம்மக்களை அக்கிராமத்தில் இருந்து தொடர்ச்சியாக விரட்டுவதை வேலையாக வைத்திருக்கிறார் ஊரின் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர்.

தற்போது ஊராட்சி மன்ற தலைவருக்கும் படிப்பறிவு இல்லாததால், இதனை தனக்கு சாதகமாக்கி அந்த ஊருக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தராமல் இருந்து வருகிறார் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்.

அதே சமயம், ஹரீஷ் ஓரி வந்த சில நாட்களிலேயே அக்கிராமத்திற்கே வேண்டாத ஒரு சம்பவத்தை செய்கிறார். இதனால் ஹரீஷ் ஓரிக்கு என்ன நடந்தது.? அந்த கிராமத்திற்கு என்ன நடந்தது.? அபிராமி போஸ் என்ன செய்தார்.?? என்பதே படத்தின் மீதிக் கதை.

நாயகன் ஹரீஷ் ஓரி, படம் முழுக்க அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்திருந்தார். ஒரு இடத்தில் கூட, அக்கதாபாத்திரத்தை விட்டு வெளியேறி சென்றதை காண முடியவில்லை. திக்கி திக்கி பேசுவதை படம் முழுக்கவே தொடர்ந்திருந்தார். க்ளைமாக்ஸ் காட்சியில் படம் பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துவிட்டார் ஹரீஷ் ஓரி.

கிராமப் பெண்ணாக மிகவும் இயல்பான ஒரு நடிப்பைக் கொடுத்திருந்தார் அபிராமி போஸ். கம்பீரமாக பேசும் இடமாக இருக்கட்டும், தனது கணவனுக்காக தலை குனிந்து நிற்கும் இடமாக இருக்கட்டும் என பல இடங்களில் கைதட்டல் கொடுக்கும்படியான நடிப்பைக் கொடுத்திருக்கிறார் அபிராமி.

மேலும், படத்தில் நடித்திருந்த கொடிமலர் கதாபாத்திரம், முருகன் கதாபாத்திரம், நாயகனின் பெரியப்பா கதாபாத்திரம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், இன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், சிறுவன், மூலிகை கொடுக்கும் பாட்டி என படத்தில் தோன்றிய அனைவருமே படத்தோடு ஒன்றி வாழ்ந்திருக்கிறார்கள்.

ஒரு இயற்கையோடு நம்மையும் படத்திற்குள் சேர்ந்து பயணப்பட வைத்துவிட்டார் இயக்குனர். ஒரு மலைகிராமம், எப்படியான சந்தோஷத்தையும் சோகத்தையும் உள்ளடக்கி வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை வெளிச்சமாக நம்மிடையே காட்டியிருக்கிறார் இயக்குனர்.

சோகம், சந்தோஷம் என நம்மை கலங்கடிக்கும் காட்சிகளும் படத்தில் உள்ளது. ஒரு வாழ்வியலை கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தியதற்கு இயக்குனருக்கு பெரும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்ளலாம்.

பரத் ஆசிகவனின் இசை படத்திற்கு மிகப்பெரும் பலம் என்றே கூறலாம். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கென்று வரும் பி ஜி எம் வேற லெவல் தான். பாடல்கள் ஒவ்வொன்றும் ரசிக்க வைத்துவிட்டது. மண்ணோடு கலந்த இசையாக நம்மிடையே கலந்து விட்டது அந்த பாடல்கள். தமிழ் சினிமாவில் நிச்சயம் ஒரு இடத்தை இசையமைப்பாளர் பரத் அடைவார் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

ராம் தேவ் அவர்களின் ஒளிப்பதிவு படத்திற்கு தேவையான ஒளியை சரியாக கொடுத்திருக்கிறது. அந்த மலைப்பகுதியை காட்சிப்படுத்திய விதம், பின் போலீஸ் துரத்தும் போது மலைப்பகுயில் ஓடி அதனை காட்சிப்படுத்திய விதம் என வியக்க வைக்கும் காட்சிகள் பல இருக்கின்றன.

வெள்ளக்குதிர – வாழ்வியல்

Facebook Comments

Related Articles

Back to top button