
இயக்கம்: சங்கர்
நடிகர்கள்: ஸ்ரீகாந்த், சிந்தியா லூர்தே, ராதாரவி, எம் எஸ் பாஸ்கர், மீரா கிருஷ்ணன், வினோதினி, பிரேம்ஜி, சாம்ஸ், கே பி ஒய் சரத், சாந்தினி தமிழரசன்
ஒளிப்பதிவு: ராஜேஷ் யாதவ்
இசை: இசைஞானி இளையராஜா
தயாரிப்பு: சிந்தியா ப்ரொடக்ஷன் ஹவுஸ்
கதைக்குள் பயணிக்கலாம்…
தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் நாயகன் ஸ்ரீகாந்த். இவரது தந்தையாக எம்எஸ் பாஸ்கரனும் தாயாக மீரா கிருஷ்ணனும் வருகிறார்கள்.
வாழ்க்கையை நடத்த போதுமான சம்பளம் கிடைத்தாலும் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த தான் மணம் பிடிக்கும் பெண்ணும் வேலைக்கு போக வேண்டும், அதே நேரத்தில் தன்னைவிட அதிகமாக சம்பளம் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் அந்த மாதிரியான பெண்ணை தேடுகிறார் ஸ்ரீகாந்த்.
அதே சமயத்தில் நாயகி சிந்தியா அதிகமான சம்பளத்துடன் நல்ல வேலையில் இருந்தாலும் திருமணத்திற்கு பிறகு வேலைக்கு செல்லாமல் வீட்டில் குடும்பத்தாரை கவனித்துக் கொண்டு வாழ்க்கையை வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
இப்படி இருவரது எண்ணங்களும் வெவ்வேறானதாக இருக்க இருவருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு இருவருக்குள்ளும் இருக்கும் அந்த எண்ணங்கள் வெளிப்படுகிறது. இதனால் குடும்பத்தில் சிக்கல் ஏற்படுகிறது. அதே சமயத்தில், தனது வேலையையும் இழக்கிறார் ஸ்ரீகாந்த். கடன் தொல்லை அதிகமாக பித்து பிடித்தவர் போல் ஆகிறார் ஸ்ரீகாந்த்.
பணம் முக்கியமா குடும்பம் முக்கியமா என்பதை உணர்ந்தாரா ஸ்ரீகாந்த் என்பதே படத்தின் மீதி கதை.
இதற்கு முன் நடித்த படங்களை விட இப்படத்தில் கதாபாத்திரத்தோடு ஒன்றி தனது நடிப்பை அபாரமாக வெளிப்படுத்தி இருக்கிறார் நாயகன் ஸ்ரீகாந்த். மிடில் கிளாஸ் வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும் வாழ்வில் அடுத்த கட்டத்திற்கு போக வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் ஓடும் ஓட்டமாக இருக்கட்டும், தனது நிலைமையை குடும்பத்தில் இருப்பவர்களிடம் அழுது கொண்டே கூறும் இடமாக இருக்கட்டும் கண்ணில் ஈரத்தை எட்டிப் பார்க்க வைக்கும் நடிப்பை கொடுத்திருக்கிறார் நாயகன் ஸ்ரீகாந்த்.
அமெரிக்க வாழ் தமிழ் பெண் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நாயகி சிந்தியா நடிப்பில் நன்றாகவே ஜொலித்திருக்கிறார். ஸ்ரீகாந்தின் அப்பாவா நடித்திருக்கும் எம் எஸ் பாஸ்கர் தான் வாழ்ந்த மிடில் கிளாஸ் வாழ்க்கையை ஸ்ரீகாந்திடம் விளக்கி சொல்லும் இடத்தில் தனது நடிப்பின் அனுபவத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மேலும், அம்மாவாக நடித்திருக்கும் மீரா கிருஷ்ணன் அக்காவாக நடித்திருக்கும் வினோதினி, நண்பனாக நடித்திருந்த பிரேம்ஜி, கேபிஒய் சரத், சாம்ஸ், சாந்தினி தமிழரசன், ராதாரவி என அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை எந்தவித குறையும் இல்லாமல் நடித்து முடித்திருந்தனர்.
இளையராஜாவின் இசையில் ஆங்காங்கே எட்டிப் பார்த்த பழைய பாடல்கள் காதுகளுக்கு இனிமையாக இருந்தது ஒளிப்பதிவாளர் ராஜேஷ் யாதவின் வேலைப்பாடு படத்தினை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது.
நல்ல ஒரு அருமையான குடும்பப் பாங்கான திரைப்படத்தை இயக்கி முடித்திருக்கிறார் இயக்குனர். படத்தில் இன்னும் சற்று காட்சிகளை அதிகப்படுத்தி வசனங்களை குறைத்து இருந்தால் படம் இன்னமும் எளிய மக்களின் மனதில் ஒரு நீங்கா இடம் பிடித்திருக்கும்.
இருந்தாலும் மிடில் கிளாஸ் வாழ்க்கையின் பிம்பத்தை வெளிப்படுத்திய இயக்குனருக்கு பெரும் பாராட்டுக்கள்.
மொத்தத்தில்,
தினசரி – சராசரி





