
ஸாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், நரேன், நட்டி, கயல் ஆனந்தி, பவித்ரா உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் யூகி.
மிக முக்கியமான நட்சத்திரங்கள் பலர் நடித்திருப்பதால் இப்படத்திற்கு சற்று எதிர்பார்ப்பு நிலவியது.
கதைப்படி,
படத்தின் ஆரம்பக் காட்சியில் பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் கயல் ஆனந்தி கடத்தப்படுகிறார். கடத்தப்பட்ட கயல் ஆனந்தியை கண்டுபிடிக்க தனியார் டிடெக்டிவ் நிபுணரான நரேனை தொடர்பு கொள்கிறார் போலீஸ் உயரதிகாரியான பிரதாப் போத்தன். அவருக்கு உதவி புரிய சப் இன்ஸ்பெக்டராக இருக்கும் கதிரை நரேனோடு அனுப்புகிறார் பிரதாப் போத்தன்.
காணாமல் போன கயல் ஆனந்தியை நரேன் மற்றும் அவரது குழுவோடு சேர்ந்து கதிரும் தேடுகிறார். இறுதியாக கயல் ஆனந்தியை கண்டுபிடித்தார்களா.? எதற்காக கடத்தப்பட்டார்.? யார் கடத்தினார்.? என்பதை இரண்டாம் பாதிக்கு எடுத்துச் சென்று படத்தை முடித்துள்ளார் இயக்குனர் ஸாக் ஹாரீஸ்.
வாடகைத் தாய் விவகாரம், ஆள் மாறாட்டம், வழக்கின் விசாரணை, என பல காட்சிகளை திறமையாக கையாண்டிருக்கிறார் இயக்குனர். க்தை திறமையாக எழுதிய இயக்குனர் அதை சொல்லும் விதத்தில் அவரும் குழம்பி நம்மையும் பெரிதாக குழப்பியும் விட்டிருக்கிறார்.
இப்படத்தில் நட்டியும் இருக்கிறார். இவரது கதாபாத்திரம் என்ன என்பதை க்ளைமாக்ஸில் கூறிய பிறகு தான் “ஓ…. அப்படியா” என்று கடந்து செல்ல வைக்கிறது.
அருமையான கதையை எடுத்து, அதை இப்படியும் காட்டலாம் என்று எண்ணிய இயக்குனர் அதை சரிவர செய்யாமல் போனது தான் படத்தின் மிகப்பெரும் சரிவு..
ரசிகனுக்கு புரியும்படியான திரைக்கதையை சொல்வது தான் ஒவ்வொரு இயக்குனருக்கும் அழகு, அதை கூறியதில் ஸாக் ஹாரிஸ் சற்று சறுக்கியிருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும்.
ஜான் விஜய்யைத் தவிர மற்ற நடிகர்களின் தேர்வு ஒவ்வொன்றும் அருமை. கதாபாத்திரங்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து ஒவ்வொரு நடிகரும் தங்களது திறமையை அருமையாக வெளிப்படுத்தியுள்ளனர்.
ஒளிப்பதிவு ஓகே ரகமாக கடந்து செல்ல வைத்து விட்டது. பின்னணி இசையும் கதையோடு பயணம் புரிய வைத்திருக்கிறது.
ட்விஸ்ட்… ட்விஸ்ட்… ட்விஸ்ட் என்று நீண்டு கொண்டே செல்கிறது கதை…
யூகி – யூகிக்க முடியலையே…





