
இயக்குனர் ஸ்ரீனி செளந்தராஜன் இயக்கத்தில் ஸ்ரீனி, நிமிஷா, சரவணன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்திருக்கும் படம் தான் “கபில் ரிட்டன்ஸ்”.
கதைப்படி,
மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் ஸ்ரீனி. இவருக்கு மனைவியாக வருகிறார் நிமிஷா. இவர்களுக்கு 12 வயது மதிக்கத்தக்க ஒரு மகன் இருக்கிறார். அமைதியாக செல்கிறது இவர்களது வாழ்க்கை.
இந்த சூழலில், ஸ்ரீனி தூங்கும்போது அவ்வப்போது பழைய நினைவு ஒன்று வந்து அவரை தூங்கவிடாமல் செய்கிறது.
ஸ்ரீனியின் மகன் அவரது பள்ளியில் கிரிக்கெட் விளையாட்டில் திறமையை நிரூபிக்கிறார். அவரது கோச், இன்னும் நன்றாக பயிற்சி எடுத்தால் அடுத்த நிலைமைக்கு கொண்டு செல்லலாம் என்று பெற்றோரிடம் கூறுகிறார்.
ஆனால், கிரிக்கெட் என்ற பெயர் எடுத்தாலே கடும் கோபம் கொள்கிறார் ஸ்ரீனி.
அதன் காரணத்தை கேட்கிறார் நிமிஷா. கதை ப்ளாஷ் பேக் செல்கிறது. சிறுவயதில், கிரிக்கெட்டில் பெளலிங்கில் மிக திறமையான ஆளாக இருந்தவர் ஸ்ரீனி. இவரை செல்லமாக அனைவரும் கபில் என்றே அழைக்கின்றனர்.
கபில் பெளலிங்க் செய்யும் போது, அந்நேரத்தில் நல்ல ஒரு பேட்ஸ்மேன் ஒருவரின் தலையில் பந்து பட, அவர் இறந்து விட்டதாக எண்ணி அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறார் கபில்.
இதனால், வருடங்கள் உருண்டோடியும் பெளலிங்க் செய்து ஒருவரை கொன்று விட்டோமே என்ற எண்ணம் ஸ்ரீநி மனதுக்குள் நீங்கா வடுவாக இருக்கிறது.
அந்த குற்ற உணர்ச்சியில் இருந்து ஸ்ரீநி மீண்டாரா.,?? சிறந்த பெளலரான ஸ்ரீநியின் திறமை வெளி உலகிற்கு தெரிந்ததா.? என்பதே படத்தின் மீதிக் கதை.
அவ்வளவு எனர்ஜியோடு தனது திறமையை நிரூபித்திருக்கிறார் இயக்குனரும் நடிகருமான ஸ்ரீநி. வித்தியாசமான கதையை மிகவும் சுவாரஸ்யத்தோடு நகர்த்தி கொண்டு சென்றிருக்கிறார்கள்.
தனது மகனுக்காக மீண்டும் களம் இறங்கும் தந்தையின் பாசத்தை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்.
முதல் படம் என்பது போல் இல்லாமல், நல்லதொரு அனுபவ நடிகரின் நடிப்பை பிரதிபலிப்பது போல், நடிப்பில் கவனம் கொண்டு நடித்து அசத்தியிருக்கிறார் ஸ்ரீநி.
நாயகி நிமிஷா, தனது கதாபாத்திரத்தை அழகாக செய்து முடித்திருக்கிறார்.
படம் முடியும் தருவாயில் வைக்கப்பட்ட காட்சி அருமை. முதல் பாதியில் வேகம் எடுக்கும் கதையான, இரண்டாம் பாதியில் ஆங்காங்கே சற்று தடுமாறியிருக்கிறது.
க்ரீன் மேட் காட்சிகளுக்கு இன்னும் சற்று முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம். இருந்தாலும், காட்சி சென்ற விதம் சுவாரஸ்யமாக இருந்ததால் அதெல்லாம் பெரிதான குறைபாடாக தெரியாதது இயக்குனர் சாமர்த்தியம்.
ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் இருவரும் சரிசமமாக பேலன்ஸ் செய்து படத்திற்கு சற்று தூண்களாக நின்றிருக்கிறார்கள்.
வித்தியாசமான கதைக்களத்தோடு தமிழ் சினிமாவிற்கு புதுவரவாக வந்திருக்கும் இயக்குனரும் நடிகருமான ஸ்ரீநி அவர்களை வரவேற்கலாம்..
மொத்தத்தில் கபில் ரிட்டன்ஸ் – கச்சிதம்…