Spotlightஇந்தியாசினிமாதமிழ்நாடு

தென்றலான காதல் … ஒரு சிறுகதை!

சுமை சூழ, சூரிய கதிர்கள் சினுங்களாக எட்டிப் பார்க்க அழகிய தோற்றமாக காட்சியளிக்கிறது ‘பூந்தோப்பு’ கிராமம்.

அளவெடுத்து செய்தது போன்று சுமார் 70 வீடுகள் அக்கிராமத்தில். அனைத்து வீடுகளும் தென்னை கீற்றுகளால் வேயப்பட்டவை…

காகங்கள் கரைய, நாய்கள் குரைக்க, சேவல்கள் கூவ, குயில்கள் கவி பாட, மயில்கள் தூரமாக இருந்து ஒலி எழுப்ப, அக்கிராமமே அழகிய பூஞ்சோலையாக காட்சியளிக்கிறது.

அழகாய் ஓடும் வாய்க்காலில் குழந்தைகள் குளித்து விளையாட, இருவர் தங்களது காளைகளை உழவுக்கு ஓட்டிச் செல்ல, 5 பெண்கள் தங்களது தலையில் இயற்கை உர மூட்டைகளை சுமந்து வயல் வெளிகளுக்கு பணிக்குச் செல்ல, அந்த காட்சிஅகளை காணவே கண்கோடி வேண்டும் என்பது போல ஒரு உணர்வு எவர்க்கும் ஏற்படும்.

வயதுக்கு வந்த பெண்கள் சிலர் அந்த பகுதியில் இருக்கும் தனியார் மில் நிறுவனத்திற்கு பணிக்குச் செல்கின்றனர். அந்த நிறுவனம் அழைத்துச் செல்லும் வாகனத்திற்காக பெண்கள் காத்திருக்க, வாகனமோ அருகில் வர,அதில் ஒரு பெண்’ ஏய் … தென்றல் வண்டி வந்திடுச்சிடி… வா… சீக்கிரம்..’ என்று சத்தமாக அழைக்க…

சற்று தூரத்தில் ….

‘சந்தையில் 40 ரூபாய்க்கு வாங்ப்பட்ட காலணி,
5 மணிகள் ஒன்றாக சேர்த்து வைத்து பின்னப்பட்ட கொலுசுகள் இரு கால்களில் ஒலி எழுப்ப,
சிறிதாய் கிழிந்த தாவணியின் ஒரு முனையை தனது பாவாடைக்குள் ஒழித்து,
மறுமுனை வரை தனது மேனியை மறைத்து,
’வில்’ போன்ற வடிவில் இருக்கும் அவளுடைய இடையில் இருந்து கெண்டைக் கால் வரை பாவடை அணிந்து,
கரும்பாசி மணிகளால் கோர்க்கப்பட்ட மாலையினை தனது கழுத்தில் அணிந்து,
நெற்றியில் சிறிதாக குங்கும பொட்டும், திருநீறால் சிறிய கோடும் இட்டு,
காதோரம் லோலாக்கு ஒன்று 360 டிகிரி கோணத்தில் சுழன்று ஆட,
இவளது மொத்த அழகுக்கும் முழுமை சேர்ப்பது அவளது கூந்தல், உச்சந்தலையிலிருந்து கால் முட்டி வரை வளர்ந்து செழிந்த அந்த கூந்தலை கண்டு ஏங்காத பெண்மகள்கள் அந்த ஊரில் இல்லை….

இப்படி ஒரு அழகுக்கு சொந்தக்காரியே தென்றல்.

வாகனத்தை நோக்கி தென்றல் துள்ளி குதித்தி ஓடி வர, தனது வாழ்க்கையே ஓடி வருவதாக எண்ணி, தென்றலை கண்டுகொண்டே ஆகாயத்தில் மிதந்து கொண்டிருந்தான் முத்து.

தென்றல் வாகனத்தில் ஏறும் வரை அவளை ரசித்துக் கொண்டிருந்தான். வாகனத்தில் ஏற ஒரு காலை எடுத்து வைக்கும் போது, திரும்பி தனது பார்வையை முத்து மீது செலுத்தி ஒரு புன்னகையை அவனுக்கு சிந்தி விட்டு சென்றாள் தென்றல்.

இந்த நாளுக்கு இது போதும் என்ற நினைப்பில், சிரித்துக் கொண்டே சென்றான் முத்து.

முத்து, இளங்கலை பட்டப்படிப்பு முடித்து தனியார் நிறுவனத்தில் சூப்ரவைசராக பணிபுரிந்து வருகிறான். தென்றலின் வீட்டில் இருந்து இரண்டு தெருவிற்கு அப்பால் இருப்பவன்.

நல்ல பையன், எந்த விதமான கெட்டப் பழக்கமும் இல்லாதவன், அப்பா அம்மாவிற்கு
நல்ல ஒரு மகன், ஊரில் நல்லதொரு பெயரை சம்பாதித்து வைத்திருப்பவன். இளையராஜாவின் இசைக்கு அடிமையானவன், நல்லதொரு உடல்வாகு கொண்ட கபடி வீரனும் கூட….

தென்றல் வயது வந்த நாளில் இருந்து அவள் தான் தன் மனைவியாக வர வேண்டும் என்று அவள் பின்னாடி சுற்றித் திரிபவன்.

தென்றலுக்கும் முத்துவை ரொம்ப பிடிக்கும். முத்துவிற்கு தெரியாமலே தலை குனிந்து தனதுஇரு கரு விழிகளை மட்டும் அசைய வைத்து அவனை அவ்வப்போது ரசித்து விட்டுச் செல்வாள்.

அந்த ஊரில் இருக்கும் பெட்டிக் கடையில் ஓரமாக நின்று செய்தித் தாளை முத்து படித்துக் கொண்டிருக்க, அந்நேரம், தென்றல் அங்கு வர, காதல் சிறகுகள் முத்துவின் மனதிற்குள் வட்டமடிக்க, தென்றல் திரும்பிச் செல்லும் வேளையில் அவளது கூந்தல் முத்துவை வருடிச் செல்கிறது.

அந்நேரம், கடையில் இருந்த அந்த காலத்து வானொலி பெட்டியில், ‘ நேயர் விருப்பமாக அவதாரம் படத்திலிருந்து இளையராஜாவின் இசையில் ஒரு மெல்லிய பாடல் உங்களுக்காக இதோ, ‘ தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ மனசுல……’ என்ற பாடல் ஒலிக்க உலகை மறந்து வானில் மிதக்க தொடங்கினான் முத்து.

ஒருநாள், தனது காதலை தென்றலிடம் முத்து கூற, தஞ்சாவூர் பொம்மை போன்று தலையை அசைத்து, புன்னகையை மட்டும் பதிலாக கூறி அங்கிருந்து ஓட்டம் பிடித்தாள்.

வாய்க்கால் கரையோரம், வயல் வெளியோரம், தெருமுனை என சந்திக்க வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் தங்கள் காதலை வளர்த்துக் கொண்டனர் இருவரும்.. சந்திக்கும் ஒவ்வொரு நொடியும் தென்றலின் முகத்தையும் அவளது கூந்தலையும் ரசிக்காமல் இருக்கமாட்டான் முத்து.

காலம் கடந்தது…. காதலை திருமணத்திற்கு எடுத்துச் செல்லலாம் என்று, தனது விருப்பத்தை தாய் தந்தையரிடம் முத்து கூற, தென்றலின் பெற்றோர்களும்
திருமணத்திற்கு சம்மதித்தனர்.

திருமணத்திற்கு நாளும் குறிக்கப்பட்டு, பத்திரிக்கையும் அச்சிடப்பட்டது. தன்னுடன் பணி புரியும் பெண்களுக்கு பத்திரிக்கையை கொடுத்து விட்டு, தான் வேலை பார்த்த பணியையும் இன்றோடு நிறுத்த முடிவெடுத்து, கடைசி நாளாக அந்த நிறுவனத்திற்கு செல்கிறாள் தென்றல்.

அந்த நிறுவனத்தில் தான் பணி புரியும் கடைசி நாள் என்பதால், புடவையில் தேவதையாக காட்சியளித்திருந்தாள் தென்றல்.

மணி பத்தானது, ஆசைப்பட்டவனே கணவனாக வாய்க்கப்பெற்றான் என்றெண்ணி உள்ளம் மகிழ சந்தோஷத்தில் இருந்தாள் தென்றல்.

நினைவை பறக்க விட்டு மிதந்திருந்த தென்றல், தனது கூந்தலை கவனிக்கவில்லை. அங்கிருக்கும் ராட்சத அரவை இயந்திரத்திற்குள் அவளது கூந்தல் சிக்கிவிட, தென்றல் அலறி முடிப்பதற்குள் அவளது உடல் முழுவதும் அந்த ராட்சத இயந்திரத்திற்கு சிக்கி விடுகிறது.

இந்த செய்தியறிந்து, உறைந்த பாறை போல் செயலற்றவனாகினான் முத்து. ஊரே மயான அமைதி கொண்டது. அமரர் ஊர்தியில் முகம் கூட தெரியாத வண்ணம் வெள்ளைத்துணியால் சுற்றப்பட்டு பிணமாக ஊருக்குள் வந்தாள் தென்றல். ஊரில் உள்ள அனைவரின் முகத்திலும் கண்ணீர் மல்க, இறுதி ஊர்வலம் நடைபெற்றது. கண்களில் இருந்து ஒரு சொட்டு நீரை கூட வெளியேற்றாமல் சிலையாட்டம் ஆனான் முத்து.

மயிலாக தோகை விரித்து, மானாட்டம் துள்ளித் திரிந்த ’தென்றல்’ இன்று மயானத்தில்……

யாரும் இல்லா அனாதையாக நினைக்கப்பட்டான் முத்து… வேலையை துறந்தான், ஆங்காங்கே இருக்கும் மரத்தடியில் படுத்து அவளது நினைவுகளை சுமந்து கொண்டே திரிந்து கொண்டிருந்தான்.

வருடங்கள் உருண்டோடின….

‘யம்மா… தென்றல் இங்க ஓடி வாங்க… ‘ என்ற சொன்னதும், மூன்று வயது தேவதை அவள் சினுங்கிக் கொண்டே முத்துவிடம் ஓடி வருகிறாள்.

ஆம்… தென்றல் – முத்துவின் காதலை கண்டு, அதனால் முத்து ஏற்பட்ட மன வேதனையை கண்டு அதே ஊரில் வசிக்கும் சிவகாமி என்ற பெண், தான் முத்துவை திருமணம் செய்து கொள்வதாக கூறி, அவனை திருமணமும் செய்து கொண்டாள்.

தனக்கு பிறந்த பெண் குழந்தைக்கு ‘இளந்தென்றல்’ என்ற பெயரை சிவகாமியே சூட்டினாள்…

வீட்டில் வசிக்கும் தெய்வங்களின் போட்டோ அருகே மறைந்த தென்றலின் போட்டோவும் இடம் பெற்றிருக்க, அதற்கு விளக்கேற்றினாள் சிவகாமி.

தனது மகள் இளந்தென்றலை காணும் போதெல்லாம் முத்துவிற்கு தென்றலின் வாசம் வீசாமல் இல்லை….

-மு சதீஷ் முத்து

Facebook Comments

Related Articles

Back to top button