
இயக்கம்: அஜயன் பாலா
நடிகர்கள்: ஶ்ரீராம் கார்த்திக், கிருஷா க்ரூப், முன்ஷ்காந்த், சிங்கம் புலி
தயாரிப்பு: அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்
இசை: இளையராஜா
ஒளிப்பதிவு: செழியன்
ஒரு தனியார் சேனலில் வேலை பார்க்கும் ஸ்ரீராம் கார்த்திக், ஒரு புகைப்பட கலைஞர் ஆவார். ஊட்டியில் அரிதாக வரும் ஒரு பறவையை படம்பிடிப்பதற்காக அங்கு வருகிறார். அங்கு தான் நாயகி கிருஷா க்ரூப்பைசந்திக்கிறார் ஸ்ரீராம்.
கண்டதும் காதல் என்பது போல் கிருஷா மீது காதல் கொள்கிறார் ஸ்ரீராம். இருவரும் நெருங்கி பழக ஒரு நாள் தனது காதலை கிருஷாவிடம் சொல்ல வருகிறார் ஸ்ரீ ராம். அந்த சமயத்தில் தான் ஒருவரை காதலிப்பதாகவும் அவரிடம் தன்னை சேர்த்து வைக்குமாறும் ஸ்ரீராமிடம் கூறுகிறார் கிருஷா.
இதனால் ஷாக்கான ஸ்ரீராம் தனது காதலை அவரிடம் கூறாமலே மறைத்து விடுகிறார். மேலும் கிருஷாவின் காதலனை கண்டறிய ஈமெயில் மூலமாக காதலனுக்கு தூது விடுகிறார் ஸ்ரீராம். அதன் பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் கிளைமாக்ஸ்…

கதைக்கேற்ற கதாநாயகனாக ஜொலித்திருக்கிறார் ஸ்ரீராம் கார்த்திக்.. ஏற்கனவே கன்னிமாடம் என்ற படத்தில் நல்லதொரு நடிப்பை வெளிப்படுத்தியிருந்த ஸ்ரீராம், இப்படத்திலும் அதே அளவிலான நடிப்பை நன்றாகவே கொடுத்திருக்கிறார்.
சச்சின் படத்தின் ஜெனிலியா என்று நினைத்துக் கொண்டு, கிருஷா தனது நடிப்பைக் கொடுத்திருக்கிறார். ஒரு சில இடங்களில் ஓகே தான் என்றாலும், பல இடங்களில் ஓவர் ஆக்டிங்கை மட்டுமே கொடுத்திருக்கிறார்.
மெதுவாக நகர்ந்து செல்லும் திரைக்கதையால் படம் நம்மை அளவுக்கு அதிகமாகவே சோதனைக்கு உள்ளாக்கி விடுகிறது. க்ளைமாக்ஸில் சின்ன திருப்பம் இருந்தாலும், பெரிதான ஒரு தாக்கத்தை படம் ஏற்படுத்தவில்லை என்பதே நிதர்சனம்.
இளையராஜாவின் இசையில் பாடல்கள் கைகொடுக்கவில்லை என்றாலும், பின்னணி இசை என்பது நமக்கு சற்று ஆறுதல் தான்.
செழியனின் ஒளிப்பதிவு ஒன்றே நமக்கு பெரிய ஆறுதல் என்றே கூறலாம். ஒவ்வொரு காட்சியையும் ரசித்து ரசித்து படம் பிடித்து நம் கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறார்.
GEN Z தலைமுறை கடந்து காதல் சென்று கொண்டிருக்கும் இந்த வேலையில், முப்பது வருடங்களுக்கு முந்தைய படத்தின் கதையை தூக்கிக் கொண்டு வந்திருப்பதை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள் என்று தெரியவில்லை.




