Spotlightவிமர்சனங்கள்

கிறிஸ்டினா கதிர்வேலன் – விமர்சனம் 3.5/5

இயக்கம்: அலெக்ஸ் பாண்டியன்

நடிகர்கள்: கெளசிக், பிரதிபா, ஆருள் சங்கர், சிங்கம் புலி, சில்மிஷம் சிவா, கஞ்சா கருப்பு, சத்யா, அலெக்ஸ் பாண்டியன்

இசை: ரகுநந்தன்

ஒளிப்பதிவு: பிரகத் முனியசாமி

படத்தொகுப்பு: லோகேஷ்வர்

தயாரிப்பு: பிரபாகர் சீதாபதி ஸ்ரீ லக்‌ஷ்மி ட்ரீம் பேக்டரி

நாயகன் கெளசிக் கல்லூரி படித்து வருகிறார். நாயகி பிரதீபாவும் அதே கல்லூரியில் படித்து வருகிறார். கெளசிக் பிரதீபா மீது ஒரு தலை காதலில் இருக்கிறார்.

பிரதீபாவிற்கு கெளசிக் மீது நல்லதொரு புரிதல் இருந்தாலும் அதனை காதலாக மாற்றாமல் பார்த்துக் கொண்டார். அதற்குக் காரணம் அவரது வீட்டில் நடந்த ஒரு பிரச்சனை தான். அதனால், வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையைத் தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார் பிரதீபா.

இந்நிலையில், கெளசிக் மற்றும் பிரதிபா இருவரும் தங்களது நண்பர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு மீறிய காதல் திருமணத்திற்கு சாட்சியாக தங்களது அடையாள அட்டைகளை வழங்கி விடுகின்றனர்.

வக்கீலாக வரும் அலெக்ஸ் பாண்டியன், அந்த அடையாள அட்டைகளை வைத்து தவறுதலாக கெளசிக் மற்றும் பிரதீபாவிற்கு திருமணம் நடைபெற்றதாக பதிவு செய்து விடுகிறார்.

இதனால், இவர்களது வாழ்வில் மிகப்பெரும் பிரச்சனை எழுகிறது. அதனை கெளசிக் மற்றும் பிரதீபா எப்படி சமாளித்தார்கள்.? இந்த ஜோடியானது இணைந்ததா.? அல்லது வேறு ஏதேனும் சம்பவம் நடந்ததா.?? என்பதை வித்தியாசமான கதைகளத்தோடு காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன்.

நாயகன் கெளசிக் தனது கதிர்வேலன் கதாபாத்திரத்தை மிக அழகாக தாங்கிச் சென்றிருக்கிறார். பால் வடியும் முகமாக தனது கதாபாத்திரத்தை ஒவ்வொரு காட்சியிலும் மிகச் சிறப்பாக தனது கேரக்டரில் வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார். பிரதீபா மீதான காதலை தனது பார்வையால் வெளிக்கொணரும் தருணம் அழகு தான்.

க்ளைமாக்ஸ் காட்சியில் கெளசிக்கின் நடிப்பை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். தனது நடிப்பின் திறமை முழுவதையும் வெளிப்படுத்தி படம் பார்ப்பவர்களின் கண்களை குளமாக்கி விடுகிறார். அடுத்தடுத்த படங்களில் இவரின் அவதாரத்தை நிச்சயம் தமிழ் சினிமா காணும் நாட்கள் வெகு தொலைவில் இல்லை.

நாயகியான பிரதீபா, கிறிஸ்டினா என்ற கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். தனது கண்களால் அமைதிப் போர் ஒன்றை நடத்திச் சென்றிருக்கிறார் பிரதீபா. மிகவும் அளந்து பேசி, காட்சிகளை நன்றாகவே கடத்தியிருக்கிறார்.

மேலும், படத்தில் ஹீரோவின் நண்பனாக நடித்த சஞ்சய் என்பவரும் மிகவும் யதார்த்தமான நடிப்பைக் கொடுத்து காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். சின்ன சின்ன ரியாக்‌ஷன்களை காட்சிகளைக் கொடுத்து காட்சிகளை உயிரோட்டமாக வைத்திருந்தார்.

படத்தில் ஒரு சில காட்சிகள் என்றாலும் தங்களது கேரக்டர்களை அளவாக செய்து கொடுத்துச் சென்ற, சிங்கம் புலி, சத்யா, கஞ்சா கருப்பு உள்ளிட்ட நடிகர்களும் பாராட்டுதலுக்குறியவர்கள்.

இரண்டாம் பாதியில் ஆரோல் சங்கர் தனது அனுபவ நடிப்பை கொடுத்திருந்தார்.

ஆரம்பத்தில் காதல், காமெடி என வழக்கமான சினிமாவாக நகர்ந்து கொண்டிருக்க, ஒரு கட்டத்திற்கு மேல் டாப் கியர் போட்டு கதை நகரத் தொடங்கியது.

சின்ன சின்ன இடையூறுகள் ஆங்காங்கே எட்டிப் பார்த்துக் கொண்டே சென்று கொண்டிருந்தாலும் கூட, க்ளைமாக்ஸ் காட்சியான கடைசி 15 நிமிடம் நம் அனைவரையும் சீட்டின் நுனிக்கே அழைத்துச் சென்றுவிட்டார் இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன்.

படத்தை முடித்து வெளியே வரும் போது நம் மனதிற்குள் மொத்த கதையையும் மறந்து கடைசி 15 நிமிடத்தின் வலி மட்டுமே ஓடிக் கொண்டே இருந்தது. அதன் தாக்கம் நம்மை விட்டு அகலவே சற்று நாழிகை எடுத்துக் கொண்டது.

காட்சிகளும் கதாபாத்திரங்களும் அப்படியான ஒரு தாக்கத்தை படம் பார்த்தவர்கள் மேல் வைத்துவிட்டார் இயக்குனர் அலெக்ஸ் பாண்டியன்.

காட்சிகளை சரியான வெளிச்சம் கொண்டு, திட்டமிட்ட மெனக்கெடலோடு ஒளிப்பதிவினை கச்சிதமாக கொடுத்திருக்கிறார் இளம்வயது ஒளிப்பதிவாளர் பிரகத் முனியசாமி. க்ளைமாக்ஸ் புல்வெளி காட்டிற்குள் காட்சிகளை படமாக்கிய விதமாக இருக்கட்டும், ஹீரோ டாக்டரிடம் பேசும் போது காட்சிகளை ஒளிப்பதிவு செய்த விதமாக இருக்கட்டும் என பல இடங்களில் கைதட்டல் கொடுக்கும்படியான ஒளிப்பதிவை கொடுத்திருக்கிறார் பிரகத்.

மிகச் சரியாக எடிட் செய்து, காட்சிகளை ரசிக்கும் விதமாக படைத்ததில் படத்தொகுப்பாளரின் பங்கு அலப்பறியது தான். எடிட்டர் லோகேஷ்வருக்கும் வாழ்த்துகள்.

இந்த மாதிரியான படங்களுக்கு இவரை விட்டால் வேறு யாரு இருக்கிறார் என்று சொல்லும் அளவிற்கு தனது இசையில் பலத்தை அதிகமாகவே வெளிப்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் என் ஆர் ரகுநந்தன்.

மொத்தத்தில்,

கிறிஸ்டினா கதிர்வேலன் – காதல் கொடுத்த வ(ழி)லி..

Facebook Comments

Related Articles

Back to top button