Spotlightசினிமா

இயக்குனராக முதல் வெற்றியை கண்ட போஸ் வெங்கட்..!

“கன்னி மாடம்” படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ள நடிகர் போஸ் வெங்கட் தனது முயற்சியால் குறித்த நேரத்தில் படத்தை முடித்திருக்கிறார். இதுவே ஒரு இயக்குனருக்கு முதல் வெற்றியாக தான் பார்க்க வேண்டும்.

இயக்குனர் போஸ் வெங்கட் இது குறித்து கூறும்போது, “பிப்ரவரி 18ஆம் தேதி இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கி, மே 16ஆம் தேதி முடித்தோம். இதில் மொத்த குழுவும் பங்கு பெற்ற 35 நாட்கள் மற்றும் கேமரா குழுவினர் மட்டும் பங்கு பெற்ற 7 நாட்களும் அடங்கும். தயாரிப்பாளர் ஹஷீர் அவர்களின் முழு ஆதரவு இல்லாவிட்டால், இது சாத்தியமல்ல. அவர் படைப்பு சுதந்திரத்தில் தலையிடவே இல்லை. ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை படத்துக்கு ஆதரவாக இருந்தார்.

எங்கள் குழுவுக்கு இப்படி ஒரு தயாரிப்பாளர் கிடைத்தது ஆசீர்வாதம். உண்மையில், கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்த பிறகு படக்குழுவினர் அனைவரையும் கட்டிப்பிடித்து தன் அன்பையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தினார். இந்த காலத்தில், இது போன்ற உணர்ச்சிகரமான தருணங்களை ஒரு தயாரிப்பாளரிடம் பார்ப்பது எளிதல்ல” என்றார்.

‘கன்னி மாடம்’ படத்தின் சிறப்பம்சத்தை பற்றி போஸ் வெங்கட் கூறும்போது, “கன்னி மாடம் படம் மெட்ராஸ் என்றால் என்ன என்பதை வரையறுக்கும்?. நகரின் மிகவும் புகழ்பெற்ற அடையாள இடங்களை படம் பிடித்து, அவை பற்றிய முழு விவரங்களையும் அளிக்க நினைத்தோம். சென்னைக்கு சாதிக்க நினைக்கும் கனவுகளோடு வரும் இளைஞர்களும், மற்றவர்களும் மேட்டுகுப்பம், விஜயராகவபுரம் மற்றும் சூளைமேடு போன்ற பகுதிகளில் தங்குவது ஒரு பொதுவான விஷயம். எனவே, ‘நேட்டிவிட்டி’ காரணிகளுக்காக இந்த இடங்களில் முழு படத்தையும் படம் பிடித்திருக்கிறோம்” என்றார்.

இசையமைப்பாளர் ஹரி சாய் இசையில் உருவான அனைத்து பாடல்களும் ‘மோண்டாஜ்’ முறையில் படமாக்கப்பட்டிருக்கிறது. ஆட்டோ ரிக்ஷா டிரைவர்கள் பற்றிய ஒரு பாடலை ரோபோ ஷங்கர் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தோணி தாசன் ஒரு பாடலை பாடியுள்ளார். ஸ்ரேயா கோஷல் அல்லது சின்மயி உட்பட பல பிரபலங்களும் மீதம் உள்ள பாடல்களை பாட இருக்கிறார்கள்.

ரூபி ஃபிலிம்ஸ் சார்பில் ஹஷீர் தயாரிக்க, ஸ்ரீராம் மற்றும் காயத்ரி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஆடுகளம் முருகதாஸ், கஜராஜ், வலீனா பிரின்ஸ், விஷ்ணு ராமசாமி மற்றும் சூப்பர் குட் சுப்ரமணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். ஹாரிஸ் ஜே இனியன் ஒளிப்பதிவு செய்த இந்த படத்துக்கு ரிஷால் ஜெய்னி படத்தொகுப்பு செய்ய மற்றும் சிவ சங்கர் கலை இயக்குனராக பணி புரிந்துள்ளார். விவேகா பாடல்களை எழுத, தினேஷ் சுப்பராயன் சண்டைப்பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார்.

கன்னி மாடம் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டிரைலர், ஆடியோ மற்றும் உலகளாவிய வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.

Facebook Comments

Related Articles

Back to top button