Spotlightசினிமா

’96 – விமர்சனம் (4/5)

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தின் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்தவர் ப்ரேம்குமார். இவர் தனது இயக்கத்தில் “96” என்ற படத்தை உருவாக்கியுள்ளார். படத்தின் நாயகனாக விஜய் சேதுபதியும் நாயகியாக த்ரிஷாவும் நடித்திருக்கிறார்.
நரைத்த தாடியோடு முரட்டு நபராக வரும் விஜய் சேதுபதி ஒரு ட்ராவல் போட்டோகிராபர். ட்ராவலில் இருக்கும்போது தனது சொந்த ஊரான தஞ்சாவூரை தாண்டிச் செல்கிறார். அப்போது அங்கு தான் பயின்ற பள்ளியை எட்டிப் பார்க்கிறார்.
மலரும் நினைவுகளாக 1996 ஆம் ஆண்டு பள்ளியில் படித்த நண்பர்களோடு போனில் உரையாடி, சென்னையில் ‘96 ஆம் ஆண்டு படித்த நண்பர்களோடு ஒரு பார்ட்டிகு ஏற்பாடு செய்கிறார்கள்.
தேவதர்ஷினி, ஆடுகளம் முருகதாஸ் மற்றும் பகவதி பெருமாள் இந்த பார்ட்டியை ஏற்பாடு செய்கிறார்கள். அந்த பார்ட்டியில் பள்ளி காதலர்கள் விஜய் சேதுபதி மற்றும் த்ரிஷா கலந்து கொள்ள, மலரும் நினைவுகளாக காதல் கதைக்களம் பள்ளி காலத்திற்கு செல்கிறது.
ராம் என்ற ராதாகிருஷ்ணனாக வரும் விஜய் சேதுபதிக்கும் ஜானகி என்ற ஜானுவாக வரும் த்ரிஷாவுக்குமான காதல் கதைக்களமே இந்த ‘96’.
காதலை மிக நுணுக்கமாகவும், ஒரு உயிரோட்டத்துடனும் ஒரு மனிதனால், சினிமாவாக எடுத்து திரையில் கொடுக்க முடியும் என்று அறிந்து, புரிந்து கொண்ட தினம் இன்று..
பள்ளி பருவத்தில் இளம் விஜய் சேதுபதியாக நடித்த ஆதித்ய பாஸ்கர் (நடிகர் எம் எஸ் பாஸ்கரின் மகன்) மற்றும் த்ரிஷாவாக நடித்த கெளரி கிருஷ்ணன்.. இருவரும் பள்ளி பருவத்திலே காதலுக்கான பட்டம் பெற்று விட்டனர். தங்களது பார்வை, குறும்புத்தனம், ஏக்கம், பிரிவு, அழுகை, சந்தோஷம் என அனைத்தையும் ஒருமித்தமாக கொடுத்து பரவசப்படுத்திவிட்டனர்.
த்ரிஷா – அழகு, த்ரிஷாவை பிடிக்காதவர்களுக்குக் கூட இப்படத்திற்கு பிறகு இவரை காதலிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. தனது அனுபவ நடிப்பில் அனைவரையும் கட்டிப் போட்டுவிடுகிறார்.
விஜய் சேதுபதியின் நடிப்பை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். இவர் ஒரு நல்ல நடிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான், ஆனால்,பல காட்சியமைப்பில் அவரது ரியாக்‌ஷன், மாடுலேஷன் இவற்றையெல்லாம் பார்க்கும் போது, இந்த மனுஷனை ஏன் இத்தனை நாளா அமைதியா உட்கார வச்சாங்கன்னு கேட்க வைக்குது… விரைவில் தேசிய விருது கிடைக்கும், அதில் எந்த மாற்றுக் கருத்து இல்லை.
நல்ல  ஒரு அனுபவம் வாய்ந்த ஒரு இயக்குனரின் பார்வையில், ஒவ்வொரு காட்சியையும் அழகுபடுத்தி மெருகேற்றியிருக்கிறார் இயக்குனர் ப்ரேம் குமார். தமிழ் சினிமாவில் காதலுக்கான இயக்குனர் வரிசையில் இவருக்கான ஒரு நிரந்தர இடத்தை தக்க வைத்து விட்டார்.
கோவிந்த் வஸந்தாவின் இசையில் ஏற்கனவே”காதலே காதலே.. “ பாடல் பட்டி தொட்டி வரை அனைவரது போனிலும் ரிங் டோனாக மாறிவிட்டது. படத்தில் அனைத்து பாடல்களும் கதையோடு பயணம் செய்வதால் கேட்பதற்கும் இனிமை… பல இடங்களில் இசை மட்டுமே பேசிக் கொண்டு நம்மோடு நடந்து வருவது அழகு.
மகேந்திரன் ஜெயராஜு மற்றும் சண்முக சுந்தரத்தின் ஒளிப்பதிவு படத்திற்கு மிகப்பெரிய பலம்…காட்சிக்கு காட்சி அழகுக்கும் அழகு சேர்த்திருக்கிறார். பல வருட உழைப்பையும் உணர முடிந்தது.
கலை மற்றும் எடிட்டிங் படத்தின் உயிரோட்டத்திற்கு காரணம்.
படத்தை தயாரித்த தயாரிப்பாளர் எஸ் நந்தகோபால் அவர்களுக்கும், வெளியிடும் 2 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித்குமாருக்கும் வெற்றி வாழ்த்துக்கள்.
Facebook Comments

Related Articles

Back to top button