
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த “இந்தியன் 2” திரைப்படம் மிகப்பெரும் தோல்வியை சந்தித்தது. ஷங்கரின் இயக்கத்தில் இப்படியொரு படமா என அனைவரும் சமூக வலைதளங்களில் அதிகமாக வசை பாடினர்.
அதே சமயத்தில், இந்தியன் 2 படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே ராம் சரணை வைத்து “கேம் சேஞ்சர்” எனும் படத்தை தெலுங்கில் இயக்கி வந்தார் இயக்குனர் ஷங்கர்.
இப்படத்தை, விஜய்யின் வாரிசு படத்தை தயாரித்த தில்ராஜூ மற்றும் ஆதித்யராம் இருவரும் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
கேம் சேஞ்சர் திரைப்படம் முழுக்க முழுக்க தெலுங்கில் மட்டுமே உருவாக்கப்பட்டிருப்பதாகவும், தமிழ் உட்பட மற்ற மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வழக்கமாக ஷங்கரின் படம் என்றால் தமிழத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவும். ஆனால், இது ஒரு டப்பிங் படம் என்பதால் தமிழகத்தில் இப்படத்திற்கு எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாத சூழல் தான் நிலவி வருகிறது.
இந்நிலையில், பொங்கல் வெளியீடாக தமிழ்நாட்டில் அநேக படங்கள் வரிசைகட்டி களம் இறங்குவதால், தமிழ் படத்திற்கு மட்டுமே நாங்கள் முன்னுரிமை தருவோம் என்றும், டப்பிங் படமான கேம் சேஞ்சர் படத்திற்கு முன்னுரிமை தர மாட்டோம் என்றும் திரையரங்கு உரிமையாளர்கள் கூறிவிட்டார்களாம்.
இதனால், திரையரங்குகள் கிடைப்பதில் மிகப்பெரும் சவாலை சந்தித்து வருகிறது படக்குழு. தமிழ்நாட்டு ரிலீஸில் என்ன செய்வதென்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் இருக்கின்றார்களாம் “கேம் சேஞ்சர்” படக்குழுவினர்.




