
இந்தியன் சாப்ட்பால் கிரிக்கெட் லீக் (ISCL) சீசன் 2 – 2026 தொடரில் தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் ‘சோழா கிங்ஸ் தமிழ்நாடு’ அணியின் அதிகாரப்பூர்வ ஜெர்சி சென்னையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
சென்னை எழும்பூரில் உள்ள ராடிசன் ப்ளூவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அணியின் பிராண்ட் தூதரான நடிகை அம்ரிதா ஐயர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய ஜெர்சியை அறிமுகப்படுத்தினார்.
நிகழ்ச்சில் பேசிய அம்ரிதா ஐயர், தமிழ்நாட்டில் கிரிக்கெட்டுக்கு மிகப்பெரிய வரவேற்பும் ஆர்வமும் இருப்பதாகவும், அந்த ஆர்வத்தை தேசிய அளவில் பிரதிநிதித்துவப்படுத்தும் சோழா கிங்ஸ் தமிழ்நாடு அணியுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் தெரிவித்தார்.
ISCL தொடரில் இந்தியா முழுவதும் 32 மாநில அணிகள் பங்கேற்கின்றன. அடித்தட்டு மற்றும் வளர்ந்து வரும் வீரர்களுக்கு தேசிய அளவில் தங்களது திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு ஏற்படுத்துவதே இந்த லீக்கின் முக்கிய நோக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டு கர்நாடகா சாப்ட்பால் பிரீமியர் லீக் (KSPL) ஆக தொடங்கப்பட்ட இந்தப் போட்டி, பின்னர் தேசிய அளவிலான மாநில அணிகள் பங்கேற்கும் ISCL தொடராக விரிவுபடுத்தப்பட்டது. முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களான சுரேஷ் ரெய்னா மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோர் ISCL-ன் பிராண்ட் தூதர்களாக இணைந்துள்ளனர்.

சோழா கிங்ஸ் தமிழ்நாடு அணியின் உரிமையாளர் கிரிஷ் கவுடா பேசுகையில், தமிழகத்தின் கிரிக்கெட் ஆர்வத்தை தேசிய விளையாட்டு தளத்திற்கு கொண்டு செல்வதுடன், தமிழக வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகளை உருவாக்குவதே அணியின் நோக்கம் என்று தெரிவித்தார்.
ISCL நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர் கங்காதர் ராஜு உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சோழா கிங்ஸ் தமிழ்நாடு அணியின் வருகை, தமிழகத்தின் கிரிக்கெட் ஆர்வத்தையும் வளர்ந்து வரும் வீரர்களின் திறமையையும் தேசிய அளவில் கொண்டு செல்லும் புதிய முயற்சியாக அமைந்துள்ளது.






