
நடிகர் முகேன் ராவ் நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படமான ‘மைலோ’ (Milo) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. SSR Entertainment சார்பில் K.I. சுரேஷ் தயாரித்துள்ள இப்படத்தை கவின் மூர்த்தி எழுதி இயக்கியுள்ளார்.
18 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு குற்றத்தையும், ‘மைலோ’ என்ற செல்ல நாயையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாகியுள்ளது. பல ஆண்டுகளாக மறைந்திருக்கும் குற்றத்தின் பின்னணியைச் செல்ல நாயின் உதவியுடன் நாயகன் எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதே படத்தின் மையக்கரு.
வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் முகேன் ராவுடன் செல்ல நாயும் இடம்பெற்றுள்ளது. ‘More Than a Pet, A Silent Witness’ என்ற வாசகம் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இப்படத்தில் முகேன் ராவுடன் தேஜு அஸ்வினி, இளவரசு, முனீஷ்காந்த், பிக் பாஸ் ஜனனி, இந்திரஜா, சுரேஷ் மேனன், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திரஜா மீண்டும் தமிழ் சினிமாவில் நடிக்கிறார்.
ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ள இப்படத்திற்கு ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ளார். சென்னை, ஊட்டி, கொல்லிமலை, மூணாறு, திருவனந்தபுரம் மற்றும் மலேசியா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்துள்ளது.
‘மைலோ’ படத்தின் இசை வெளியீடு மற்றும் திரையரங்க வெளியீட்டுத் தேதி குறித்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





