
இயக்கம் : ஆனந்த் ரவிசந்திரன்
நடிகர்கள் : ஜி.வி.பிரகாஷ்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், காளி வெங்கட், ரோகிணி, கீதா கைலாசம், இளவரசு, நந்தினி
ஒளிப்பதிவு : ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி
படத்தொகுப்பு : ரூகேஷ்
இசை : ஜி.வி.பிரகாஷ்குமார்
தயாரிப்பு : வருண் திரிபுரனேனி, அபிஷேக் ராமிஷெட்டி, ஜி.பிருத்விராஜ்
வெளியீடு : ரோமியோ பிக்சர்ஸ்
கதைப்படி,
ஐஸ்வர்யா ராஜேஷுக்கு சிறுவயதிலிருந்தே குறட்டை விடும் பிரச்சனை இருக்கிறது. இதனால் திருமணம் தள்ளிப் போக, உண்மையை மறைத்து ஜி.வி.பிரகாஷுக்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். முதலிரவு அன்றே குறட்டை பிரச்சனை தொடர்பான குட்டு வெளிப்பட்டுவிட, தொடர்ந்து நடக்கும் பிரச்சனைகளும் அதன் தீர்வும் தான் மொத்தக் கதையும்.
குறட்டை பிரச்சனையால் அவதிப்படும் நாயகி, தூக்கத்தில் சிறு சத்தம் கேட்டால் கூட எழும்புபவனும், நியூஸ் ரீடராக இருப்பதால் 8 மணி நேரம் நிம்மதியாக தூங்கி எழுந்து முகத்தை புத்துணர்ச்சியோடு வைப்பதை முக்கியமாக நினைப்பவனும், ஏ;.என்.என் நியூஸ் சேனலில் வேலைக்கு சேர்வதை லட்சியமாக கொண்டவனுமான நாயகன்.
இருவரையும் திருமணம் ஒரே அறைக்குள் பூட்டி வைக்க, பிரச்சனை வெடிக்கிறது. ஆனால் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் சற்று காதலும் இருப்பதால் பிரச்சனையை தீர்க்க இருவருமே முடிந்த அளவிற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். ஆனால் பிரச்சனை முடியாமல் ஒரு பெரும் பிரச்சனையில் அவர்கள் இருவரையும் கொண்டு போய் நிறுத்த, அது அவர்களின் வாழ்க்கையில் என்ன பாதிப்பை ஏற்படுத்தியது..? என்பதே DeAr திரைப்படத்தின் மீதி கதை.
ஜி.வி.பிரகாஷ் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். சமீபத்தில் வெளியான படங்களிலேயே டியர் கண்டிப்பாக அவருக்கு சொல்லிக் கொள்ளும்படியான திரைப்படம் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. தன் குழந்தையை காக்க போராடும் தருணத்தில், முகத்தில் பதட்டத்தையும் குழப்பத்தையும் மிகச்சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் நல்ல கதையம்சம் உள்ள, நடிக்க சவால்கள் நிறைந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். கனவுகள் கலைந்து போன கவலையில் உடைந்து போய் அமர்ந்திருக்கும் ஜி.வியை கட்டியணைத்து அரவணைக்க முயலும் தருணத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
தேர்ந்த நடிகர்களான காளி வெங்கட், இளவரசு இருவரும் தங்கள் மேம்பட்ட நடிப்பின் மூலமாக தங்கள் கதாபாத்திரங்களை அழுத்தம் திருத்தமாக நம் மனதில் பதியச் செய்கின்றனர். ரோகிணி மருத்துவமனையில் பேசும் அந்த வசனத்தில் தன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். ஐஸ்வர்யாவின் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசமும் அந்த கதாபாத்திரத்திற்கு தன் நடிப்பின் மூலம் நியாயம் சேர்க்கிறார்.
காளி வெங்கட்டின் மனைவியாக நடித்திருக்கும் நந்தினி அட்டகாசமான நடிப்பையும் உடல்மொழியையும் ஆங்காங்கே அள்ளித் தெளித்து ஆச்சரியப்படுத்துகிறார்.
குறட்டையால் தூக்கம் தொலைக்கும் நாயகனின் பிரச்சனையை எல்லோருமே ஏதோவொரு கட்டத்தில் கடந்து வந்திருப்போம் என்பதால் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ள முடிகிறது.. ஏற்கனவே மணிகண்டன் நடிப்பில் வெளியான குட்நைட் திரைப்படமும் இதே பிரச்சனையைப் பற்றித் தான் பேசியது. இருப்பினும் அப்படத்தின் சாயல் கொஞ்சமும் இல்லாமல் இப்படத்தை எடுத்திருப்பது சிறப்பு.
படத்தின் முதல்பாதி முழுக்க குறட்டை தொடர்பான பிரச்சனையை எதிர்கொள்வதிலும், அதற்கான தீர்வுகளிலும் செல்கிறது. இரண்டாம் பாதி சிறிது நேரம் காதறுந்த பட்டம் போல் திசை தெரியாமல் அலைந்து, பின்னர் குடும்ப அமைப்புகளில் உள்ள ஆண்களின் எதேச்சதிகாரத்தின் மேல் ஒரு வழியாக மையம் கொள்கிறது.
ஆனால் அந்தப் பிரச்சனையையும் பெருவாரியான கணவன், மனைவிகள் கடந்து வந்திருப்பார்கள் என்பதால், பார்வையாளர்கள் அதனோடும் தங்களை எளிதாக தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள்.
ஆங்காங்கே ஆண்களின் எதேச்சதிகாரப் போக்கை முதல் பாதியில் காட்டிக் கொண்டு வந்த இயக்குநர், அதனை இரண்டாம் பாதியில் மருத்துவமனையில் ரோகிணி பேசும் வசனத்தின் மூலம் முத்தாய்ப்பாக முடித்தும் வைத்திருக்கிறார்.
படத்தின் ஒளிப்பதிவு குன்னூரின் குளுமையையும் சென்னையின் வெம்மையையும் ஒருங்கே கேமராவின் சிறைப்படுத்தி அசத்தி இருக்கிறது.
ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு உயிர் கொடுத்திருக்கின்றன. அதிலும் பின்னணி இசை பல்வேறு இடங்களில் காட்சிகளை தூக்கி நிறுத்த பயன்பட்டிருக்கிறது.
DeAr – அன்பான குடும்பத்தாருக்கான படம்.





