
எழுத்து , இயக்கம் – ராஜுமுருகன்
நடிகர்கள்: சசிகுமார், சைத்ரா ஜே. ஆச்சார், ஆஷா சரத், குரு சோமசுந்தரம், ஜெயப்பிரகாஷ், கோபி நயினார், வசுமித்ரா
தயாரிப்பு – ஜெயந்தி அம்பேத்குமார்
தயாரிப்பு நிறுவனம் – ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம்
இசை – ஷான் ரோல்டன்
ஒளிப்பதிவு – நீரவ் ஷா
படத்தொகுப்பு – சத்யராஜ் நடராஜன்
கதைப்படி,
தாய் தந்தை இல்லாமல் தனி மரமாக இருக்கும் சசிகுமாருக்கு ஆதரவு தருகிறார் நாயகி சைத்ராவின் தந்தை. சைத்ராவின் தந்தை வள்ளலார் அவர்களின் வாழ்வை பின்பற்றி வாழ்பவர். இதனால், சசிகுமாரும் அவரது வழியை பின்பற்றுகிறார்.
சைத்ராவின் தந்தை ஒரு கட்டத்தில் சைத்ராவை சசிகுமாரின் கையில் ஒப்படைத்து விட்டு அவர் இறந்தும் போகிறார். தனது மகள் சைத்ராவை வள்ளலார் விடுதியில் சேர்த்து விடுமாறு சசிகுமாரிடம் கூறி இறந்து விடுகிறார். சசிகுமார் சைத்ராவை வள்ளலார் விடுதிக்கு சென்று சேர்த்து விடுகிறார். வருடங்கள் உருண்டோட, சைத்ராவை நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார் சசிகுமார்.
ஆனால், சைத்ராவுக்கோ சசிகுமார் மீது ஆசை. சசிகுமார் முதலில் அதனை எதிர்த்தாலும், ஒரு கட்டத்திற்கு மேல் சமாளிக்க முடியாமல் சைத்ராவை சசிகுமாரை திருமணம் செய்து கொள்ள சம்மதித்து அவரை திருமணமும் செய்து கொள்கிறார்.

அதுவரை யாரும் இல்லாதவர்களாக இருந்த சைத்ரா மற்றும் சசிகுமார் திருமணம் செய்து குடும்ப ரேஷன் அட்டை ஒன்றை வாங்குகின்றனர். இதனால் பெரும் மகிழ்ச்சி அடைகிறார் சைத்ரா. அதன் பிறகு சைத்ராவிற்கு உடல்நிலை சரியில்லாமல் போக, மருத்துவத்திற்காக கந்து வட்டி பணம் வாங்குகிறார் சசிகுமார். வட்டி அதிகமாக பணத்தை செலுத்த முடியாததால் சசிகுமார் மற்றும் அவரது மனைவி சைத்ராவின் கிட்னியை தந்து விடுமாறு கந்துவட்டிக்காரர் கூற அதிர்ச்சியாகிறார் சசிகுமார். இந்த கொடுமையில் இருந்து தப்பிக்க, அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறார்.
கந்துவட்டிக்காரர், சசிகுமார் மற்றும் சைத்ரா இருவரும் பட்டாசு தொழிற்சாலையில் இறந்து விட்டதாக கூறி, அதில் கிடைத்த பணத்தை கந்துவட்டிக்காரர் எடுத்துக் கொள்ள, சசிகுமாரின் ரேஷன் கார்டை அரசு கோப்பில் இருந்து எடுத்துவிடுகிறது அரசாங்கம்…
இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க இந்தியாவின் மிகப்பெரும் கோடீஸ்வரரும் மத்திய அமைச்சருமான ஆஷா சரத், அவர்களின் கிட்னி செயல்படவில்லை என்பதால் உடல் மோசமான நிலையில் இருக்கிறார். அவரது மகன் மற்றும் உதவியாளர்கள் சசிகுமாரின் கிட்னி ஆஷா சரத் அவர்களுக்கு செட்டாகும் என்று கூறி சசிகுமாரை கொண்டு வர அவரை தேடி வருகின்றனர்.
அதன்பிறகு என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை..

மண்ணோட இந்த மக்களோட நாயகன் யாருன்னு கேட்டா கண்ணமூடிகிட்டு சொல்லலாம், அது சசிகுமார் தான் அப்படின்னு எல்லோர்க்குமே தெரியும்… அப்படி தான் இந்த படத்துல தெரிஞ்சிருக்காரு சசிகுமார்.
முத்துச் சிற்பி என்ற கதாபாத்திரத்திற்கு என்ன மாதிரியான உழைப்பை கொடுக்க வேண்டுமோ அதை அப்படியே கொடுத்து, அக்கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார் சசிகுமார். அதிலும், க்ளைமாக்ஸ் காட்சியில் சசிகுமாரின் நடிப்பும் வசனமும் ஒரு நிமிடம் நம் கண்களை குளமாக்கிவிடுகின்றன.
கதையின் நாயகியான சைத்ரா, மிகவும் இயல்பான ஒரு நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இந்த கதைக்கு இவர் தான் பொருத்தமானவர் என்று தேர்ந்தெடுத்தாற்போல, மிக சரியாக பொருந்தியிருக்கிறார் சைத்ரா.
பாபநாசம் படத்தின் வாயிலாக தமிழ் சினிமா ரசிகர்களிடம் பரவலாக அறியப்பட்ட ஆஷா சரத், கம்பீரமான லுக்கில் அனைவரையும் அசர வைத்திருக்கிறார். மேலும், படத்தில் நடித்த மற்ற கதாபாத்திரங்களும் தங்களது வேலையினை தெளிவாக செய்து முடித்திருக்கின்றனர்.
குருசோமசுந்தரம் அவர்களின் நடிப்பும் மிக வலுவானதாகவே இருந்தது.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்கும்படியாக இருந்தது. அதிலும் க்ளைமாக்ஸில் வந்த அன்பெனும் பேரொளி பாடல் உருக வைத்துவிட்டது.
நீரவ் ஷா அவர்களின் ஒளிப்பதிவு காட்சிகளை நல்லதொரு வெளிச்சமாக காட்டியிருக்கிறது.

கிட்னி திருட்டை மையமாக வைத்தும் அதில் நடக்கும் அரசியலில் அதிகார வர்க்கத்துக்கும் அடிமட்ட மனிதனுக்கும் நடைபெறும் ஒரு போரில் என்ன மாதிரியான முடிவு என்பதை இயக்குனர் வெளிச்சமாக காட்டியதில் உச்சம் தொட்டிருக்கிறார்.
வழக்கம்போல, தனது இயக்கத்திறனை நன்றாகவே கொடுத்திருக்கிறார் ராஜூ முருகன். அதுமட்டுமல்லாமல், வசனத்தின் வாயிலாக வாள் வீச்சு நடத்தியிருக்கிறார் ராஜூ முருகன்.
உதாரணமாக, ”காசு இல்லாதவன் எல்லாம் எதுக்கு கவர்மெண்ட் ஆபீஸ் வர்ரானுங்கனு தெரியல”., ”மனுசங்களுக்கு தான் சாவு இருக்கு மனுசத்தனத்துக்கு இல்ல” என்ற குறிப்பிட்டு சொல்லும்படியான வசனங்கள் படத்தில் அதிகம் இடம்பெற்ற நம்மை நன்றாகவே சிந்திக்க வைத்திருக்கின்றன.
வள்ளலாரின் ”வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற கூற்று படம் முழுவதும் ஒலித்து, க்ளைமாக்ஸ் காட்சியில் நம்மை அதிகமாகவே சிந்திக்க வைத்துவிட்டது.
மொத்தத்தில்,
மை லார்ட் – மனிதம்..





