
இயக்குனர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கத்தில் ருத்ரா, விஷ்ணு விஷால், மிதிலா, மிஷ்கின், கருணாகரன், நிர்மல் பிள்ளை, ரெடின் கிங்க்ஸ்லி, உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க இயக்குனர் மிஷ்கின் மற்றும் நடிகர் விஷ்ணு விஷால் இப்படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்க வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் இந்த ”ஓஹோ எந்தன் பேபி”.
ஒளிப்பதிவு: ஹரீஷ் கண்ணன்
இசை: ஜென் மார்டீன்
படத்தொகுப்பு: ப்ரானவ்
படத்தின் ஆரம்பத்தில் நடிகராகவே இப்படத்தில் வரும் விஷ்ணு விஷாலிடம் தனது சினிமா கதையை கூற வருகிறார் படத்தின் நாயகன் ருத்ரா. இவர் கூறும் கதை விஷ்ணு விஷாலுக்கு பிடிக்காமல் போக நல்லதொரு காதல் கதையை எடுத்து வருமாறு அனுப்பி விடுகிறார்.
அதன் பிறகு ருத்ரா தனது சொந்த வாழ்க்கையில் நடந்த தனது காதல் கதையை விஷ்ணு விஷாலிடம் கூற ஆரம்பிக்கிறார். இந்த காதல் கதை ஒரு சோகமான முடிவை நோக்கிச் செல்கிறது. இந்த காதல் கதையை நிஜத்தில் நீ முடித்து வந்தால் இந்த கதையில் நடிக்க தயார் என்று கூறி விடுகிறார் விஷ்ணு விஷால்.
இதனைத் தொடர்ந்து நாயகியை தேடிச் செல்கிறார் நாயகன் ருத்ரா. அதன்பிறகு படத்தில் என்ன நடந்தது என்பதை படத்தின் மீதி கதை.

தனக்கு இது முதல் படம் என்று யாரும் கூறாதபடி நடிப்பில் மிகுந்த கவனம் செலுத்தி தனது நடிப்பின் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார் படத்தி நாயகன் ருத்ரா. பள்ளி பருவமாக இருக்கட்டும், கல்லூரி பருவமாக இருக்கட்டும், உதவி இயக்குனராக வேலை செய்யும் பருவமாக இருக்கட்டும் என அனைத்திலும் தனது நடிப்பின் திறமையை நன்றாகவே வெளிப்படுத்தி இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் காதல் நாயகன்கள் குறைந்து வரும் இக்கால கட்டத்தில் ருத்ராவின் என்ட்ரி சினிமாவிற்கு ஒரு புத்துணர்ச்சியை நிச்சயம் கொடுக்கும். காதல் காட்சிகளிலும் நன்றாகவே மிளிர்கிறார்.
கதை நாயகியாக நடித்திருந்த மிதிலா பால்கர் அழகு சிலையாக படத்தில் நன்றாகவே ஜொலித்திருக்கிறார். இவருக்கும் ருத்ராவிற்கும்மான காதல் கெமிஸ்ட்ரி படத்திற்கு பெரும் பலமாக அமைந்துள்ளது.
மேலும் படத்தில் நடித்த கருணாகரன் தனது அனுபவ நடிப்பில் ஆங்காங்கே காட்சிகளில் ரசிக்க வைத்திருக்கிறார். ரெட்டின் கிங்ஸ்லியின் காமெடி காட்சிகள் படத்தில் நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது.
நடிகராகவே படத்தில் நடித்திருந்த விஷ்ணு விஷால் மற்றும் இயக்குனராகவே படத்தில் நடித்திருந்த மிஷ்கின் இருவருமே ஒரு சில காட்சிகளை தூக்கி நிறுத்தி இருக்கின்றனர். பரபரவென்று சென்ற முதல் பாதி இரண்டாம் பாதியில் சற்று தொய்வை சந்தித்து இருந்தாலும் நிகழ்கால காதல் உணர்வுகளை படத்தில் நன்றாகவே கடத்தியிருக்கிறார் இயக்குனர் கிருஷ்ணகுமார் ராமகுமார்.
அனைத்து கதாபாத்திரங்களையும் மிகவும் நேர்த்தியாக கையாண்டிருக்கிறார் இயக்குனர். ஆங்காங்கே முத்த காட்சிகளையும் வைத்து படத்தின் ஓட்டத்தை சூடு பிடிக்க வைத்திருக்கிறார்.
ஜென்மார்ட்டின் இசையில் பாடல்கள் ரசிக்க வைத்திருக்கின்றன. பின்னணி இசையும் கதையோடு சேர்ந்து நாமும் பயணம் ஆகும்படி அமைந்திருந்தது. ஹரிஷ் கண்ணனின் ஒளிப்பதிவு காட்சிகளை கலர்ஃபுல்லாக காட்சிப்படுத்தி இருக்கிறது.





