
அடர்ந்த வனப்பகுதியில் வாழ்ந்து வருகிறார் மதி. வனப்பகுதியில் இருந்து வருவதால் பள்ளியிலும் அவரை யாரும் நண்பராக சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்குகிறார்கள். இதனால் வேதனை அடையும் மதிக்கு அவரது ஆசிரியர் அறிவுரை கூறுகிறார். “நீ இயற்கையிடம் பழகு அது உன்னிடம் அன்பு காட்டும்” என்கிறார்.
இந்த சூழலில் தான் மதிக்கு குட்டி யானை ஒன்று நண்பன் ஆகிறது. அதனிடம் அன்பு காட்டி விளையாடி ஒன்றாகவே வளர்கிறார் மதி. திடீரென்று அந்த யானை கடத்தப்படுகிறது. அதனைத் தேடி மதி அலைகிறார்.
கடத்தப்பட்ட யானையை மதி கண்டுபிடித்தாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக் கதை.
புதுமுக நடிகராக மதி கதைக்கேற்ற நாயகனாக மிகவும் அளவான நடிப்பை அள்ளிக் கொடுத்திருக்கிறார். மேலும், உடல் உழைப்பை நன்றாகவே கொடுத்து அசத்தியிருக்கிறார். ஒரு யானை மீது அப்படியான ஒரு ஈர்ப்பை அவ்வளவு எளிதில் கொண்டு வந்திட முடியாது. நாயகன் மதியின் அதீத உழைப்பு நன்றாகவே படத்தில் பார்க்க முடிந்தது.
இடைவேளைக்குப்பிறகு படத்தில் எண்ட்ரீ கொடுத்த அர்ஜூன் தாஸ், தனது குரலால் அனைவரையும் வசீகரம் செய்கிறார். சைலன்ட் வில்லனாக இன்னொரு முகமும் காட்டி திரைக்கதையில் வேகத்தை அதிகப்படுத்தி இருக்கிறார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் ஷிரிட்டா எதார்த்தமான நடிப்பால் மனதுக்குள் இடம் பிடிக்கிறார்.
ஹரிஷ் பரேடி, ஸ்ரீநாத், நடக்கல் உன்னிகிருஷ்ணன், , திருச்செல்வம், கொட்டச்சி, சூசன் ஜார்ஜ் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.
கும்கி முதல் பாகத்திற்கு இரண்டாம் பாகத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை என்றாலும், முதல் பாகம் போன்று இல்லையே என்று கூற வைத்துவிட்டார் இயக்குனர் பிரபு சாலமன்.
நிவாஸ் கே பிரசன்னா இசை காட்சிகளோடு பயணித்திருக்கிறது.படத்திற்கு பெரிய பலம் ஒளிப்பதிவாளர் சுகுமார் கேமரா.





