
நோவா ஆம்ஸ்ட்ராங் இயக்கத்தில் தருண் விஜய், சேஷ்விதா கனிமொழி, நிழல்கல் ரவி, மதுசூதன்ராவ், பிரியதர்ஷினி ராஜ்குமார் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தான் குற்றம் புதிது.
இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார் கரண் பி. க்ருபா. மேலும், ஒளிப்பதிவு செய்திருக்கிறார் ஜேசன் வில்லியம்ஸ்.
தயாரித்திருக்கிறார் தருண் விஜய்.
காவல்துறையில் உயர்ந்த பதவியில் வகிப்பவர் மதுசூதனன் ராவ். இவரது மகளாக வருபவர் தான் சேஷிதா கனிமொழி. ஒருநாள் இரவு, சேஷிதா கடத்தப்பட்டு கொலை செய்யப்படுகிறார்.
கொலை செய்தது யார் என்று போலீஸார் தீவிர விசாரணை நடத்துகின்றனர். ஃபுட் டெலிவரி வேலை செய்து வரும் நாயகன் தருண் விஜய்யை பிடித்து, அவர் தான் குற்றவாளி என்று தீர்மானிக்கும் வேலையில், ட்விஸ்ட் ஏற்பட்டு ஆட்டோ ட்ரைவர் ஒருவரை கைது செய்து அவரை குற்றவாளி ஆக்கி, தருண் விஜய்யை விடுதலை செய்கின்றனர்.
சிறிது நாட்கள் கழித்து, தருண் விஜய் தான் தான் அந்த கொலையை செய்ததாகவும், மேலும் இரண்டு கொலைகளை தான் செய்ததாகவும் கூறி போலீஸில் சரணடைகிறார்.
அவர் சரணடையும் சமயத்தில் இறந்ததாக நினைத்த சேஷிதா உயிரோடு வருகிறார். அதன் பிறகு நடக்கும் அதிரிபுதிரியான சம்பவங்களே படத்தின் மீதிக் கதை.
படத்தின் கதாநாயகனான தருண் விஜய், அக்கதாபாத்திரமாகவே மாறி நடித்திருக்கிறார் என்று கூறுவதை விட வாழ்ந்திருக்கிறார் என்று தான் கூற வேண்டும்., அப்படியான நடிப்பைக் கொடுத்து அனைவரையும் வெகுவாகவே கவர்ந்திருக்கிறார். அப்பாவித்தனமான முகத்தை வைத்துக் கொண்டு படத்தின் இறுதியில் ஆடும் ஆட்டம் நன்றாகவே ரசிக்க வைத்திருக்கிறது.
முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த மதுசூதனன் ராவ், தனது அனுபவ நடிப்பைக் கொடுத்திருக்கிறார். மார்கன் படத்தில் பெரிதாக பேசப்பட்ட சேஷிதா, இப்படத்திலும் தனது கண்களால் மேஜிக் நடிப்பை நிகழ்த்தியிருக்கிறார்.
வில்லனாக ராம்ஸ் நல்ல ஒரு வில்லத்தனத்தை கொடுத்து அசத்தியிருக்கிறார். ஹீரோவின் அப்பாவாக வரும் நிழல்கள் ரவி, ஹீரோயின் அம்மாவாக வரும் பிரியதர்ஷினி ராஜ்குமார் உள்ளிட்ட அனைவரும் படத்தில் நல்லதொரு நடிப்பை கொடுத்து படத்திற்கு ஒரு பில்லராக இருந்திருக்கின்றனர்.
அதிவேகமாக சென்ற முதல் பாதியைத் தொடர்ந்து வரும் இரண்டாம் பாதி சற்று தொய்வடைவதை உணர முடிகிறது. க்ளைமாக்ஸ் காட்சி ஒட்டுமொத்த ட்விஸ்ட்க்கும் பெரும் முடிச்சி அவிழ்க்கும் இடமாக இருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் இருவருமே தங்களது பணியினை சிறப்பாக செய்து முடித்திருந்தனர்.
சஸ்பென்ஸ் த்ரில்லர் பட விரும்பிகளுக்கு இப்படம் மிகவும் பிடித்தமான படமாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.





